உலக நாயகன்
கமலஹாசன்
உலக நாயகன் கமலஹாசன் இன்று தன்னுடைய 70-வது பிறந்த நாளை மிக கொண்டாடி வரும் நிலையில், அவர் வாழ்வின் நிகழ்வைப் பார்ப்போம்.
நவம்பர் 7ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டு பரமக்குடியில் பிறந்த மாணிக்கம் தான் உலக நாயகன் கமலஹாசன்.
1960 ஆம் ஆண்டு வெளியான 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் தன்னுடைய 6 வயதிலேயே நடிக்க துவங்கிய கமலஹாசன், 60 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய அபார நடிப்பு திறமையால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
தன்னுடைய முதல் படத்திலேயே, ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற கமலஹாசன்... 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்றார்.
இதன் பின்னர் 6 படங்களில் மட்டுமே குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த கமலஹாசன் அதற்குள் அன்றைய முக்கிய பிரபலங்கள் சிவாஜி,M.G.R,ஆகியோருடன் நடித்துப் புகழடைந்தார்.
1973 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான, 'அரங்கேற்றம்' திரைப்படத்தில் வாலிப வயது நடிகராக நடிக்க துவங்கினார்.
கமல்ஹாசன், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது தமிழில் என்றாலும், ஹீரோவாக நடித்தது 'கன்னியாகுமரி' என்கிற மலையாள படத்தில் தான்.
இந்த திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம் பேர் விருது இவருக்கு கிடைத்தது.
இதைத்தொடர்ந்து தமிழிலும் கதாநாயகனாக நடித்த துவங்கினார் கமலஹாசன். கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்தார்.
அந்த வகையில் இவர் நடித்த அவள் ஒரு தொடர்கதை, பணத்துக்காக, சினிமா பைத்தியம், ஆயிரத்தில் ஒருத்தி, தேன் சிந்துதே வானம், மேல்நாட்டு மருமகள், தங்கத்திலே வைரம், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
1975 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில், இவருடைய 25 ஆவது திரைப்படமாக வெளியான 'அபூர்வ ராகங்கள்' கமல் திரையுலக வாழ்க்கையில் மிப்பெரிய திருப்பு முனை படமாக அமைந்தது.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன், ஜோடியாக நடிகை ஸ்ரீவித்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் மட்டுமின்றி மலையாள திரை படங்களிலும் நடித்து வந்தார்.
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த கமல்ஹாசனை, மூன்று முடிச்சு திரைப்படம் வித்தியாசமாக பார்க்க வைத்தது.
அதேபோல் 1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தில், சப்பானியாக நடித்து ரசிகர்களின் கைத்தட்டளை குவித்தார்.
சிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் திகில் நாயகனாக நடித்து அதிர வைத்தார்.
மேலும் ராம் லட்சுமணன், வறுமையின் நிறம் சிவப்பு, டிக் டிக், வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, சட்டம், சலங்கை ஒலி, ஒரு கைதியின் டைரி, காக்கிச்சட்டை, ஜப்பானில் கல்யாணராமன், விக்ரம், சிப்பிக்குள் முத்து, புன்னகை மன்னன், காதல் பரிசு, நாயகன், சத்யா, போன்ற படங்களில் கமல்ஹாசனின் வித்தியாசமான நடிப்பின் பரிமாணங்களை பார்க்க முடிந்தது.
தன்னுடைய 70 வயது வரை, இளம் ஹீரோக்களுக்கு சவால்விடும் வேடங்களில் நடித்து வரும் கமல்ஹாசன்... இதுவரை சிறந்த நடிகருக்காக நான்கு தேசிய விருதுகளையும், சிறந்த திரைப்படத்தை தயாரித்ததற்காக ஒரு தேசிய விருதையும், 10 தமிழக அரசின் விருதுகளையும், நான்கு ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 ஃபிலிம் ஃபார் விருதுகளையும் பெற்றுள்ளார்.
தன்னுடைய திரை உலக வாழ்க்கையில், நடிகர் என்பதைத் தாண்டி திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், என பன்முக கலைஞராக விளங்கும் கமலஹாசன் பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற மாநில அரசுகளின் விருதையும் பெற்றுள்ளார்.
இதுவரை 260 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கமலஹாசன், நடிகர் என்பதைத் தாண்டி கடந்த சில வருடங்களாக அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலை, தன்னுடைய மக்கள் நீதி மையம் கட்சியின் மூலம் சந்தித்த கமல், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், 2026-ல் நடைபெற உள்ள தேர்தலை திமுக கூட்டணியுடன் சந்திப்பார் என தெரிகிறது.
அரசியல், சினிமா என இரண்டிலும் களம் கண்டுள்ள கமல்ஹாசன் தன்னுடைய 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், தற்போது அமெரிக்காவில் உள்ள வருக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என தொடர்ந்து பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.