டங்ஸ்டன் சுரங்கம்?
திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பாலம் திறப்புக்கு தயாரானது.. நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டங்ஸ்டன் சுரங்கம்?
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்தை அமைக்கக் கூடாது என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான, இறுதியான, நிலையான நிலைப்பாடு ஆகும்.
ஒன்றிய பா.ஜ.க. அரசும், அதன் கொத்தடிமையான பழனிசாமியும் தவறான செய்திகளைப் பரப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
மதுரை மாவட்டம் – மேலூர் வட்டம் – அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதியை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்கியுள்ளது.
இன்றியமையாத மற்றும் முக்கியக் கனிமங்களுக்கான உரிமங்களை மாநில அரசின் அனுமதி இன்றி ஒன்றிய அரசு ஏலம் விடக்கூடாது என்று தமிழ்நாடு அரசு 3.10.2023 அன்று ஒன்றிய அரசுக்கு வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது.
இதனை மீறி ஏலம் விட்டுள்ளது பா.ஜ.க. அரசு. இந்த வட்டாரத்தைப் பல்லுயிர் பெருக்கத் தலமாக 2022ஆம் ஆண்டே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனை மீறியும் ஏலம் விட்டது ஒன்றிய அரசு. இது கவனத்துக்கு வந்ததும், அனுமதிக்க மாட்டோம் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். பிரதமருக்கு கடிதம் அனுப்பினார் முதலமைச்சர்.
டிசம்பர் 9 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இத்திட்டத்தை அனுமதிக்க முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.
“ஒன்றிய அரசு இந்த விஷயத்தில் ஏலம் விட்டுவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், நிச்சயமாக, உறுதியாக இந்த அரசு அதற்குரிய அனுமதியைத் தருவதற்கான வாய்ப்பே கிடையாது.
அதிலே திட்டவட்டமாக இருக்கிறோம். இதுதான் முடிவு. நான் முதலமைச்சராக இருக்கிற வரையில் நிச்சயமாக ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டுவர முடியாது. வந்தால் அதைத் தடுத்தே தீருவோம். மீறிக் கொண்டு வந்தால் இந்தப் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன்; முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன்” என்கிற அளவுக்கு மிகமிகத் தெளிவாக, துணிச்சலாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் இன்று வரை ஒன்றிய பா.ஜ.க. அரசு போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமையவுள்ள இடத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்துமாறு இந்திய புவியியல் ஆய்வு மையத்தை ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாகச் செய்தி வெளியாகி உள்ளது.
நாம் கேட்டது முழுத் தடை. ஆனால் அவர்கள் செய்ய நினைப்பது, இடத்தை குறைத்துக் கொள்வது ஆகும். “பல்லுயிரித் தலம் நீங்கலாக மற்ற இடங்களில் சுரங்கம் அமைக்கும் சாத்தியக்கூறுகளை மறுவரையறை செய்து திட்டத்தை மறு ஆய்வு செய்யுங்கள்” என்றுதான் ஒன்றிய அரசு சொல்லி இருக்கிறது.
“இத்திட்டமே கூடாது” என்பதுதான் தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் ஆகும். தமிழ்நாடு அரசின் நிலைப்பாடும் அதுதான். போராடும் மக்களின் கோரிக்கையும் இதுதான்.
ஆனால் ஒன்றிய அரசு, ‘பல்லுயிரித் தலம் நீங்கலாக உள்ள இடத்தை தோண்டலாம்’ என்பது, ‘திட்டம் தொடங்கப்படும்’ என்பதே ஆகும். இதனை மறைக்க தமிழ்நாடு அரசாங்கத்தைக் குறை சொல்கிறது ஒன்றிய அரசு.
தமிழ்நாடு அரசு முன்னர் முறையான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு பொய் சொல்கிறது. தமிழ்நாடு அரசு 3.10.2023 அன்று அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாக இருக்கிறது.
இதனை நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் தெளிவுபடுத்தி இருக்கிறார். மாநிலத்தில் உள்ள முக்கியக் கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உண்டு என்று அந்தக் கடிதத்தில் இருக்கிறது. இதற்கு என்ன பொருள் என்றால், ‘ஒன்றிய அரசு ஏலம் விட முடியாது, உங்களுக்கு அதிகாரம் இல்லை, அதிகாரம் இல்லாத இடத்தில் நீங்கள் எப்படி ஏலம் விடலாம்?’ என்ற கேள்விகள் இதனுள் அடங்கி இருக்கின்றன.
சுரங்கம் மற்றும் கனிமங்கள் தொடர்பாக 2023 ஆகஸ்ட் 17 முதல் புதிய சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. முக்கியக் கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்து ஒன்றிய அரசுக்கு மாற்றப்பட்டது.
இதனைத்தான் தமிழ்நாடு அரசின், 3.10.2023 தேதியிட்ட கடிதம் கடுமையாக எதிர்க்கிறது. சட்டத்தை எதிர்த்தாலே திட்டத்தை எதிர்ப்பதாகத்தானே பொருள்? இதுகூட பழனிசாமிக்குப் புரியவில்லை.
சில பகுதிகளை விட்டுவிட்டு, இந்தத் திட்டத்தை அமல்படுத்தப் போகிறோம் – என்று சொல்லும் ஒன்றிய அரசை எதிர்க்கும் துணிச்சல் பழனிசாமிக்கு இல்லை. தனது கொத்தடிமைக் கையாலாகாத்தனத்தை மறைக்க மறுபடி மறுபடி தமிழ்நாடு அரசைக் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.