அடுத்த ஆடு?
தவெக மாநாட்டு மேடையில் கூட எம்.ஜி.ஆர். குறித்து பெருமையாகப் பேசினார் விஜய். ஆனால், கடந்த 24.12.2024 அன்று எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அன்று அவருக்கு மரியாதை செலுத்தவில்லை விஜய்.
ஆனால் அன்றைய தினம் தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தனது பனையூர் இல்லத்தில் பெரியாரின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார் விஜய்.
எம்.ஜி.ஆர். நினைவுநாளில் மரியாதை செலுத்தவில்லை நடிகர் விஜய் .
அதே நேரம் பொதுவுடமைக் கட்சித் தலைவர் மூத்த தலைவர். அய்யா நல்லகண்ணுவின் 100ஆவது ஆண்டு பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வது பற்றி கேள்வி எழுந்தபோது, அது அவரின் கூட்டணி அரசியல் கணக்கு என்று சொல்கிறார்கள்.
தான் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு படம் தோல்விப்படமாக அமைந்ததால், அப்போது உச்சத்தில் இருந்த விஜயகாந்துடன் தன் மகன் நடித்தால் பிரபலமடைந்துவிடுவார் என்று நினைத்த எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்திடம் கேட்க, அவரும் சம்மதித்து நடித்துக் கொடுத்தார்.
அப்படிப்பட்ட விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனுடன் ஒரு படத்தில் நடித்துக்கொடுக்கும்படி அக்குடும்பத்தினர் கேட்டும் விஜய் சம்மதம்தெரிவிக்கவில்லை.
மட்டுமல்ல விஜயகாந்த் உடல்நலம் குறைந்து வீட்டில் இருந்தபோது திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தனர். கடைசி வரையிலும் விஜய் சென்று பார்க்கவே இல்லை.
இதனால் விஜயகாந்து மறைவுக்கு அஞ்சலி செலுத்த விஜய் வந்தபோது, அவர் மீது ஆத்திரத்தில் காலணியை வீசினர். ‘’வெளியே போ..வெளியே போ..’’ என்று விஜயகாந்த் ரசிகர்கள் ஆவேசமாக சத்தம் போட்டுக்கொண்டே இருந்தனர்.
தற்போது விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாளில் கலந்துகொள்ள முறைப்படி விஜயகாந்தின் மகனும், மைத்துனர் சுதீஷும் நேரில் சென்று விஜய்க்கு அழைப்பு விடுத்தனர். அப்படி இருந்தும் விஜயகாந்தின் நினைவு தினத்திற்கு நேரில் செல்லவில்லை விஜய்.
ஓபிஎஸ், தமிழிசை சவுந்தரராஜன், சீமான், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். சம்பிரதாயத்திற்கு கூட விஜயகாந்திற்கு எக்ஸ் தளத்தில் கூட பதிவிட வில்லை விஜய்.
புஸ்ஸி ஆனந்த் மட்டும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்திருக்கிறார். அவரிடம், ‘’விஜய் சார் ஏன் வரல?’’ என்று தேமுதிகவினர் கேட்டபோது, அது குறித்து எந்த காரணமும் சொல்லாமல், ‘’எப்படி பேரைச்சொல்லலாம்’’ என்று கோப்ப்பட்டுள்ளனர் புஸ்ஸி ஆனந்தும் அவருடன் வந்தவர்களும்.
இத்தனைக்கும் ‘விஜய்’ என்று கூட சொல்லவில்லை தேமுதிகவினர். ‘விஜய் சார்’ என்றுதான் சொல்லி இருக்கிறார்கள்.
அப்படி இருந்தும் ஆவேசப்பட்டுள்ளனர் .
எம்.ஜி.ஆர்., விஜயகாந்தை விடுங்கள். பெற்று ஆளாக்கிய தந்தைக்கே அவர் நன்றி மறந்தவராக உள்ளார் என்கின்றனர் திரையுலகினர்.
படங்களில் சிகரட் புகைக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு காரணங்களுக்காக விஜய்யின் படங்களுக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தவர் அன்புமணி ராமதாஸ். அப்படி இருந்தும் அன்புமணியின் மகள் சங்கமித்ரா தயாரித்த ‘அலங்கு ‘ திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்று சங்கமித்ராவுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்து சொல்லி, அப்படத்திற்கு விளம்பரம் செய்தார் விஜய்.
தன்னை எதிர்த்த அன்புமணியின் மகள் படத்திற்கு இப்படி விளம்பரம் செய்யும் விஜய், தன்னை ஆளாக்கிய தந்தை சந்திரசேகர் கதையின் நாயகனாக நடித்திருக்கும்’கூரன்’ படத்திற்கு எந்த விளம்பரமும் செய்யவில்லை விஜய் .
’அலங்கு’, ‘கூரன்’ இரு படங்களுமே நாயை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படங்கள். அன்புமணி தன்னை எதிர்த்தவர் என்றாலும், பாமக ஓட்டு வங்கியை கணக்கில் கொண்டுதான் சங்கமித்ரா படத்திற்கு விளம்பரம் செய்தார் விஜய்.
அது ஒரு கூட்டணிக்கணக்கு. சந்திரசேகர் படத்திற்கு அந்த ஓட்டுக்கணக்கு வராது என்பதால்தான் விஜய் கூரன் படத்தை கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.
மாநாட்டை நடத்திய விஜய், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் செயற்குழு கூட்டத்தினை கூட்டி 28 தீர்மானங்களை நிறைவேற்றினார்.
அதில் ஒன்றுதான், ஆளுநருக்கு எதிரான தீர்மானம். ’’எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்குப் புறம்பாக நீடிப்பதால், ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்’’ என்பதுதான் அந்தத் தீர்மானம்.
ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய அதே விஜய்தான் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து 15 நிமிடங்கள் பேசினார். இந்த சந்திப்பின் போது அவர் ஆளுநரிடம் மனு அளித்தார்.அவர் எந்த ஆளுநர்பதவி வேண்டாம் என்றாரோ அவரிடமே மனு கொடுத்துள்ளார் விஜய்.
இதன் மூலம் அரசியலில் விஜய் முன்னுக்குப் பின் முரணாக செயல்படுகிறார்.அவரிடம் தெளிவான கொள்கை ஏதும் இல்லை என்பது தெளிவாகிறது.
‘பொள்ளாச்சி’ பழனிசாமிக்கு....
எடப்பாடி பழனிசாமி, தான் ஒரு ‘பொள்ளாச்சி’ பழனிசாமி என்பதை மறந்து அறிக்கைகள் விடுவதும், போராட்டம் நடத்துவதும், பேட்டிகளில் கனைப்பதுமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். ஒரே நாளில் இதன் உண்மைக் குற்றவாளி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதில் என்ன குறை கண்டார் பழனிசாமி?
குற்றத்தை மறைத்திருந்தாலும், குற்றவாளியைக் கைது செய்யாமல் விட்டிருந்தாலும் பழனிசாமி குறை சொல்லலாம். உடனடியாக குற்றவாளி கைது செய்யப்படுகிறார். குற்றச் சம்பவத்தை மறைக்கும் செயல் எங்குமே நடக்கவில்லையே!
பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததும், உடனடியாக எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவருக்கும் அந்த அறிக்கை தரப்பட்டது. நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஞானசேகரன் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பதற்கான தடயங்கள் இருப்பதைக் கண்டுபிடித்ததும் அந்த நபர் கைது செய்யப்பட்டார். இவை அனைத்தும் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகும்.
“யாரோ ஒருவரை சார் என்று சொல்லி இருக்கிறார் குற்றவாளி. யார் அந்த சார்?” என்று கேட்கிறார் பழனிசாமி. அதற்கும் சென்னை மாநகர ஆணையர் பதில் அளித்து விட்டார். “இதுவரை நடைபெற்ற புலனாய்வின்படி ஞானசேகரன் ஒருவர்தான் குற்றவாளி. சம்பவம் நடந்தபோது ஞானசேகரன் ஒருவருடன் கைப்பேசி மூலமாக பேசியதாக தகவல் பரவுகிறது. ஆனால் அது உண்மை அல்ல. சம்பவம் நடந்த போது கைப்பேசியை ‘ஏரோபிளேன் மோடில்’ ஞானசேகரன் வைத்துள்ளார். அவர் மாணவியை மிரட்டுவதற்கும், பயமுறுத்துவதற்கும் பொய்யாக கைப்பேசி மூலம் ஒருவரிடம் பேசுவதுபோல் நாடகமாடியுள்ளார்” என்று விளக்கம் அளித்துள்ளார் ஆணையர்.
முதல் தகவல் அறிக்கை தவறுதலாக வெளியாகி விட்டது. இது தொடர்பாக தனியாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு செய்தியையும் நுணுக்கமாக ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழ்நாடு காவல் துறை. ஆனால் பழனிசாமி இதில் அரசியல் லாபம் தேடுவதற்காக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த ‘யோக்கிய சிகாமணி’ ஆட்சியில் நடைபெற்ற பொள்ளாச்சி சம்பவத்தில் என்ன செய்தார்? எப்படி நடந்து கொண்டார்?
பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட ஒரு பெண், இந்தச் சம்பவம் குறித்து தனது அண்ணனிடம் சொல்கிறார். அவர் பிரச்சினைக்குரிய நபர்கள் நான்கு பேரை அடையாளம் கண்டு அடித்துவிடுகிறார். இந்த நான்கு பேரையும் அவரே பிடித்துக் கொண்டு வந்து பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்திலும் ஒப்படைக்கிறார். வீடியோக்கள், செல்போன்களையும் தருகிறார். இதனைப் பெற்றுக்கொண்ட பழனிசாமி ஆட்சி போலீசார், வழக்கு பதியவில்லை. அனைவரையும் விடுவித்து விட்டனர். இந்தப் புகாரை அப்படியே ‘குற்ற’ தரப்புக்கு கொடுத்து விடுகிறார்கள். இந்த இடத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பார் நாகராஜன் என்பவர் வருகிறார். அவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்குகிறார்.
இந்த குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கும் அ.தி.மு.க. பிரமுகர் களுக்குமான தொடர்பை ‘நக்கீரன்’ இதழ் வெளியிட்டது. நக்கீரன் நிருபரை, எடப்பாடி பழனிசாமி பேரைச் சொல்லியும், அன்றைய அமைச்சர் வேலுமணி பேரைச் சொல்லியும்தான் மிரட்டினார்கள். இதனை அப்போதே நக்கீரன் இதழ் வெளியிட்டுள்ளது. விசாரணை என்ற பெயரால் தடயங்களை மறைத்தது பழனிசாமி அரசு. பின்னர் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
பொள்ளாச்சி சம்பவமே அ.தி.மு.க. பிரமுகர்களால் தான் நடந்தப்பட்டது என்பதை சி.பி.ஐ. உறுதி செய்தது. அருளானந்தம், பாபு, கரோன்பால் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டார்கள். இந்த மூவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். அருளானந்தம் என்பவர் அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருக்கிறார். அன்றைய அமைச்சர் வேலுமணியின் கைத்தடியாக வலம் வந்துள்ளார். வேலுமணியுடன் பல்வேறு விழாக்களில் பங்கெடுத்துள்ளார். அதேபோல், பொள்ளாச்சி ஜெயராமனுடன் இருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜெயராமனுடன் இருந்துள்ளார். ஜெயராமன் பேட்டி கொடுக்கும் போதெல்லாம் அவரோடு அருளானந்தம் உள்ளார். அ.தி.மு.க.வின் சுவரொட்டிகளில் அருளானந்தம் படம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் பாபு, கரோன்பால் ஆகிய இருவரும் பொள்ளாச்சி ஆச்சிடிபட்டி ஊராட்சித் தலைவரும் அ.தி.மு.க. பிரமுகருமான ரெங்கநாதனுடன் நெருக்கமாக இருந்துள்ளார்கள். இவர்கள் படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. இப்படி கைதான மூவரும்
அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
இவர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல நாடகம் ஆடியது அன்றைய அ.தி.மு.க. அரசு. சம்பவம் வெளியே தெரிந்ததும், பார் நாகராஜனை கட்சியை விட்டு நீக்கினார் பழனிசாமி.
கட்சியை விட்டு நீக்கிய மறுநாளே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று துணிச்சலாக பேட்டி கொடுத்தார் பார் நாகராஜன்.
இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. வெட்கமாக இல்லையா?