மாபெரும் அவமானம் ?

அமெரிக்காவில் இருந்து கை, கால்களில் விலங்கிட்டு இந்தியர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது இந்த நூற்றாண்டின் மாபெரும் மனித உரிமை மீறல் ஆகும். 'இது புதிதல்ல' என்று ஒன்றிய பாஜக அமைச்சர் ஜெய்சங்கர் சொல்வது அவர் எந்த நூற்றாண்டு மனிதர் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

suran

கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தக் கூடிய இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார் தன்மையாக -– இயந்திரத்தனமாக இருக்கிறது. ''அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவது புதிது அல்ல'' என்று சொல்வதற்கு அவமானமாக இல்லையா?

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் வந்ததில் இருந்து, சட்டவிரோதக் குடியேற்றங்கள் குறித்து அதிகமாகப் பேசி வருகிறார். அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் வசித்து வந்ததாகச் சொல்லி கைது செய்து ராணுவ விமானத்தை அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து பிப்ரவரி 5ஆம் தேதியன்று கிளம்பிய ராணுவ விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்து சேர்ந்துள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த 33 பேர், அரியானாவைச் சேர்ந்த 33 பேர், பஞ்சாப்பைச் சேர்ந்த 30 பேர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 3 பேர் பேர், சண்டிகரைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 104 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அரசியலுக்குள் நாம் செல்ல விரும்புகிறோம். ஆனால் இவர்கள் கைகளால் விலங்கிட்டும், கால்களால் சங்கிலியால் பிணைக்கப்பட்டும் அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமெரிக்க எல்லைக் காவல் படையின் தலைவர் மைக்கேல், ''சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பி விட்டோம். ராணுவ விமானத்தைப் பயன்படுத்தி மிகப்பெரிய நாடுகடத்தல் இதுவாகும்” என்று சொல்லி இருக்கிறார்.

''அமெரிக்க அதிகாரிகள் எங்கள் கைகளில் விலங்கு பூட்டியும், கால்களை சங்கிலியால் பிணைத்தும் விமானத்தில் ஏற்றினார்கள். விமானத்தில் நாங்கள் எங்கள் இருக்கையில் இருந்து நகரக் கூட அனுமதிக்கவில்லை. கழிப்பறை செல்வதற்குக் கூட கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. 

அப்படி கழிப்பறை செல்லும் போது கூட கைவிலங்கும், கால் சங்கிலியும் அகற்றப்படவில்லை. கழிப்பறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க விமானத்தில் நாங்கள் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ இல்லை. விமானம் அமிர்தசரசில் தரையிறங்கிய பிறகு கைவிலங்கு மற்றும் கால் சங்கிலி அகற்றப்பட்டது. அதன்பிறகு தான் எனக்கு உணவு வழங்கப்பட்டது” என்று பஞ்சாப்பை சேர்ந்த சுக்பால் சிங் சொல்லி இருக்கிறார்.

குஜராத்தைச் சேர்ந்த 29 வயது பெண் குஷ்பு படேல், அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர் ஆவார். அவரது சகோதரர் அருண் அளித்த பேட்டியில், '' எனது சகோதரி சுற்றுலா விசாவில் சென்றார். இப்போது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து அமிர்தசரஸ் வரும் வரை அவர் கையில் விலங்கு போட்டு வைத்திருந்துள்ளார்கள். அவர் இப்போது பேச முடியாத நிலையில் இருக்கிறார்” என்று சொல்லி இருக்கிறார். இதை வாசிக்கும்போதே உடல் நடுங்குகிறது. அந்தக் காட்சிகள் அச்சம் தருகின்றன.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தன. உடனடியாக இது குறித்து விவாதம் நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை. 'மனிதர்கள் கைதிகள் அல்ல' என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.

suran
மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி கேள்விகளை எழுப்பிய நிலையில் ஒன்றிய வெளியுறவுத் துறை அதிகாரிகள் துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்ன பதில் அளித்துள்ளார் தெரியுமா?

 ''சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்களை அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படுவது புதிது அல்ல. மீண்டும் சொல்கிறேன்.. இது புதிது அல்ல. பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை 15 ஆயிரத்து 756 பேர் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இந்தப் பணிகளை அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் செய்து வருகின்றனர். 

அமெரிக்க விமானம் மூலம் நாடு கடத்தப்படுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை கடந்த 2012 முதல் அமலில் உள்ளது. இதில் பெண்கள், குழந்தைகள் கிடையாது. இந்தப் பயணங்களின் போது மருத்துவத் தேவைகள் கவனிக்கப்படுகின்றன. கழிவறை செல்ல அனுமதிக்கப்படுகிறது. இது அனைத்து விமானங்களுக்கும் பொருந்தும். இந்த நடைமுறை தான் கடந்த 5ஆம் தேதியன்று அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கும் கடைப்பிடிக்கப்பட்டன” என்று சொல்லி இருக்கிறார்.

''ராணுவ விமானத்தைப் பயன்படுத்தி மிகப்பெரிய நாடு கடத்தல் இதுவாகும்'' என்று அமெரிக்க அதிகாரி சொல்கிறார். ஆனால் இது புதிதல்ல என்கிறார் இந்திய அமைச்சர்.

மனிதாபிமானம் இல்லாமல், மனித உரிமை மீறலாக ஏன் அழைத்து வரப்பட்டார்கள் என்று கேட்டால், இது புதிதல்ல, இப்படித்தான் அமெரிக்க சட்டம் சொல்கிறது என்கிறார். இந்திய ஒன்றிய அமைச்சர்.

இப்படி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிந்ததும், இந்திய அரசு அமெரிக்க அரசிடம் பேசியதா? இந்தியப் பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் நண்பர்கள் என்பது நாடு அறிந்தது. இதைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் பேசினாரா? பேசியிருக்க வேண்டாமா?

''இந்தியர்களை கண்ணியமாக அழைத்து வர இந்திய விமானம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்'' என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகிறார். நியாயம் உண்டு.

இது வெறும் மனித உரிமை மீறல் மட்டுமல்ல, இந்தியர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக இந்தியா அவமதிக்கப்பட்டுள்ளது.

பிற நாடுகள் செய்தது போல் இந்தியாவே தனி விமானம் மூலம் இந்தியர்களை அழைத்து வந்திருக்கலாமே ?அதை செய்து அவமானத்தை தவிர்த்திருக்கலாமே ?

பதவி விலகல் 

மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக வன்முறை நிலவி வருகிறது.] குக்கி மற்றும் மைத்தேயி ஆகிய இன மக்கள் இடையே ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுவிட்டனா். மேலும் பலர் மாயமாகிவிட்டனா். இந்த வன்முறையால் மணிப்பூர் மாநிலமே தீப்பற்றி எரிகிறது. இதனை தடுக்க பாஜக அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் மணிப்பூர் மாநில முதல் அமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவரது இந்த முடிவுக்கு முடிவுக்கு வராத மணிப்பூர் வன்முறை தான் காரணம் என கூறப்படுகிறது. பிரேன் சிங் ஏற்கனவே மணிப்பூர் வன்முறை சம்பவத்தால் மனமுடைந்து காணப்பட்டார்.

மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அண்மையில் அவர் அறிவித்தார். இதற்கிடையே மணிப்பூர் மாநில முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிரேன் சிங், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அஜய் குமாரிடம் கொடுத்தார். இவரது ராஜினாமா சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 பிரேன் சிங் கூறுகையில்,"ஒவ்வொரு மணிப்பூரியின் நலனைப் பாதுகாப்பதற்காக, சரியான நேரத்தில் நடவடிக்கைகள், தலையீடுகள், மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக மத்திய அரசுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது முழு ஆண்டும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

suran

கடந்த மே 3 (2023) முதல் நடந்து வரும் நிகழ்வுகளுக்கு நான் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் வருத்தப்படுகிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் இப்போது, கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்ட பிறகு, 2025 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புகிறேன்" என்றார்.

நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்று மணிப்பூர் வன்முறை ஆகும். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த பாஜக அரசு தவறிவிட்டது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்கிடையே கலவரம் நிறைந்த மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மணிப்பூர் அரசு தீவிர நடவடிக்கைகளை செய்து வருகிறது. இதற்கிடையே பாஜக முதல் அமைச்சர் பிரேன் சிங், தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?