சர்க்கரை அதிகமா?
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்றால், அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால், சிறுநீரகம் சர்க்கரையை வெளியேற்ற உதவும்.
ஸ்வீட் சாப்பிட்ட பிறகு, அது பற்களின் ஈறுகளில் ஒட்டிக் கொள்கிறது. இது பல் அரிப்பு ஏற்பட்டு, நாளடைவில் பல் விழ செய்கிறது. அதனால், ஸ்வீட் சாப்பிட்டபிறகு, பல் துலக்குங்கள். இரவில் பல் துலக்குங்கள். இதனால், குளுகோஸ் அளவு குறைக்க முடியும்.
சாப்பிட்ட உடன் தூங்கக்கூடாது. அப்படி தூங்கினால், சாப்பிட்ட உணவில் இருக்கும் குளுகோஸ் கொழுப்புகளாக மாறி வயிற்றின் அடிப்பகுதியிலும், கல்லீரலிலும் படிந்துவிடுகிறது. அதனால், ஸ்வீட் சாப்பிட்ட பிறகு, 20 நிமிடம் நடைபயிற்சி செய்யுங்கள்.
சுவீட் சாப்பிட்ட பிறகு, நார்ச்சத்து, நீர்ச்சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய், டிராகன் பழம், தயிர், எலுமிச்சை சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
உடலுக்கு பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் சத்துகள் கிடைப்பதற்கு, பாதம், பிஸ்தா, முந்திரி போன்ற பருப்பு வகைகளை கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம். சூரிய காந்தி விதைகள், ஆலிவ் விதைகள் எடுத்துக்கொள்ளலாம். இதை சாப்பிடுவதால், மினரல் குறைபாடு வராமல் இருக்கும்.
விழாக்கால உணவு முறையில் இருந்து நார்மல் உணவு முறைக்கு திரும்புங்கள். ஸ்வீட் இருந்தாலும் சாப்பிடாதீர்கள்.
இரவு நேரத்தில் நன்றாகத் தூங்குங்கள். நிறைய ஸ்வீட் சாப்பிட்டுவிட்டோம். அதனால், சர்க்கரை அதிகரிக்குமே என்று கவலைப்படாமல், சர்க்கரையைக் கரைக்க முடியும் என்று நன்றாகத் தூங்குங்கள். 8 மணி நேரம் நிம்மதியாக தூங்குவது உங்களுக்கு சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். பகல் நேரத்தில் தூங்குவது, சுவீட் சாப்பிட்ட பிறகு தூங்குவது என்பது சர்க்கரையை அதிகரிக்கத்தான் உதவும். அதனால், இரவில் நிம்மதியாக தூங்குங்கள்.
சுவீட் சாப்பிட்டுவிட்டோம், சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று குளுகோமீட்டரில் சர்க்கரை அளவைப் பார்க்காதீர்கள். ஒரு வாரம் கழித்து பாருங்கள்.
சுவீட் சாப்பிடாதீர்கள், உங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துங்கள். சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் உணவுமுறையை எடுத்துக்கொள்ளுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள்.
கோட்சேவை புகழ்ந்தால்
மகாத்மா காந்தியின் நினைவு நாளில் நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்து பேசிய காலிகட் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் ஏ. ஷைஜாவை நிறுவனத்தின் டீனாக நியமித்தது வளாகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் ஷைஜாவை டீனாக (திட்டமிடல் மற்றும் மேம்பாடு) நியமித்த முடிவை ஏப்ரல் மாதம் முதல் திரும்பப் பெறக் கோரி நிறுவனத்தில் போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
டாக்டர் ஷைஜா தற்போது காலிகட் என்ஐடியில் இயந்திர பொறியியல் துறையில் பேராசிரியராக உள்ளார். 2024-ம் ஆண்டு காந்தியின் நினைவு நாளில், அவர் பேஸ்புக்கில், “இந்தியாவைக் காப்பாற்றியதற்காக கோட்சேவைப் பற்றி பெருமைப்படுகிறேன்” என்று பதிவிட்டார்.
“இந்தியாவில் பலரின் நாயகன் இந்து மகாசபை ஆர்வலர் நாதுராம் கோட்சே” என்று ஒரு வழக்கறிஞர் எழுதிய பதிவில் அவர் கருத்து தெரிவித்தார்.
பின்னர் ஷைஜா அந்தக் கருத்தை நீக்கினார், ஆனால் அந்த ஸ்கிரீன் ஷாட்கள் பரவலாகப் பரப்பப்பட்டன.
அவர் மீதான புகார்களின் பேரில், கோழிக்கோடு நகர போலீசார் ஷைஜா மீது ஐ.பி.சி பிரிவு 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே தூண்டுதல்) கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
பல்வேறு இடதுசாரி மற்றும் காங்கிரஸ் அமைப்புகளும் அவரை நிறுவனத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
அப்போது, அவர், “காந்திஜியின் கொலையைப் பாராட்டுவதற்காக நான் கருத்து தெரிவிக்கவில்லை. நான் ஒருபோதும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. கோட்சேவின் “நான் காந்தியைக் கொன்றது ஏன்” என்ற புத்தகத்தைப் படித்திருந்தேன். கோட்சே ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. அவரது புத்தகத்தில் சாமானிய மக்களுக்குத் தெரியாத பல தகவல்களும் வெளிப்பாடுகளும் உள்ளன. கோட்சே தனது புத்தகத்தில் நமக்கு அறிவூட்டியுள்ளார்.
இந்தப் பின்னணியில், வழக்கறிஞரின் பேஸ்புக் பதிவில் நான் கருத்து தெரிவித்திருந்தேன். மக்கள் எனது கருத்தைத் திரித்துக் கூறத் தொடங்கியுள்ளதை உணர்ந்தபோது, அதை நீக்கிவிட்டேன்” என்று கூறியிருந்தார்.
அவரை புதன்கிழமை தொடர்பு கொண்டபோது, டாக்டர் ஷைஜா சமீபத்திய முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினார்.
காங்கிரஸ் கோழிக்கோடு மாவட்டக் குழுத் தலைவர் பிரவீன் குமார், அவரது டீன் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
“மத்திய அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரல் செயல்படுத்தப்படுவதை இது காட்டுகிறது. காந்திஜியை அவமதித்த ஒரு பேராசிரியருக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அவரது நியமனம் திரும்பப் பெறப்படும் வரை நாங்கள் போராட்டத்தைத் தொடங்குவோம்” என்று அவர் கூறினார்.
அவிநாசியும் தனபாலும்!
அவிநாசி லிங்கேஸ்வரருக்கு அடுத்து அவிநாசி தொகுதியை அதிகம் ஆள்வது அதிமுக தான்” என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அந்த அளவுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் நிரம்பிய இந்தத் தொகுதியில் 2006 தொடங்கி கடந்த நான்கு தேர்தல்களாக தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது அதிமுக.
தனித் தொகுதியான அவிநாசியில் இரண்டாவது முறையாக எம்எல்ஏ-வாக இருக்கிறார் ப.தனபால். 2016-ல் முதல் முறையாக இங்கு வென்ற இவரை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தார் ஜெயலலிதா.
அது தவறோ என அந்த மக்கள் நினைக்குமளவுக்கு தனபாலின் செயல்பாடுகள் இப்போது அங்கு விமர்சிக்கப்படுகின்றன.
“முன்பு தான் சபாநாயகரா இருந்தார். இப்ப அவர் எம்எல்ஏ தானே... தொகுதியைக் கவனிக்காம என்ன செய்கிறார்?” என்று அவிநாசியில் சாமானியர்களும் கேள்வி எழுப்புகிறார்கள். “அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நடத்திய போராட்டத்தின் போது தென்பட்ட தனபாலை அதற்குப் பிறகு இந்தப் பக்கம் பார்ப்பதே அரிதாகிவிட்டது” என்கிறார்கள் தொகுதிவாசிகள்.
புதுப்பாளையம் மற்றும் கோதபாளையம் குளங்களில் உள்ள மான்களால் பாதிக்கப்படும் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல ஆளில்லை. சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அவிநாசி.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இங்குள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு இல்லை.
இதைக் கேட்க ஆளில்லை. அதேபோல், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டை விவகாரம், உள்ளாட்சி அமைப்புகள் விரிவாக்கம் என அரசுக்கு எதிராகப் போராடி மக்களின் அபிமானத்தைப் பெற அவிநாசிக்குள் பிரச்சினைகளுக்குப் பஞ்சமில்லை.
மக்களவைத் தேர்தலில் தனது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனை நீலகிரி தொகுதியில் நிறுத்தினார் தனபால்.
இப்போது, வயது மூப்பு காரணமாக தேர்தல் அரசியலைவிட்டு ஒதுங்கிக் கொண்டு மகனையே அவிநாசி தொகுதியில் நிறுத்தலாமா என ஆழம் பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியொரு நிலை வந்தால் லோகேஷின் வெற்றி அத்தனை சுலபமில்லை என்கிறார்கள்.
தனபாலுக்கு சொந்த ஊர் சங்ககிரி. அவிநாசியை கவனிக்கமுடியாமல் போனதற்கு அவர் வெளியூர்க்காரராக இருப்பதும் ஒரு காரணம். “ தொகுதி எம்எல்ஏ-வை, நினைத்தவுடன் பார்த்து தங்களது குறைகளைச் சொல்ல முடியவில்லையே என்ற ஆதங்கம் மக்களுக்கு இருக்கிறது. இதுகுறித்து கருத்தறிவதற்காக நாம் தனபாலை அவரது அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோம்.
ஆனால், அதை எடுத்துப் பேசவும் அவருக்கு நேரமில்லை!