புனித மரணம்?

 உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை கரையில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வை உலகின் மிகப் பெரிய மக்கள் திரள் விழா என அந்த மாநில அரசும் இந்துத்வா அமைப்புகளும் பெருமிதத்துடன் சொல்லி வருகின்றன.

 இத்தகைய பெருந்திரள் நிகழ்வுகளில் மிக முக்கியமானது மக்களின் பாதுகாப்பும் பயண ஏற்பாடுகளும்தான். அது இந்த கும்பமேளா நிகழ்வில் போதுமான அளவில் இல்லை என்பதைத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் உயிர்ப்பலிகள் நிரூபிக்கின்றன.

கடந்த மாதம் அமாவாசை நாளில் குவிந்த பக்தர்களை நீராட அனுமதிப்பதில் போதிய ஒழுங்கு இல்லாதததால், மத்திய-மாநில ஆளுங்கட்சிகளில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டு அவர்களைத் தனி வழியில் அழைத்துச் சென்று நீராட வைத்த நிலையில், பல ஊர்களிலிருந்தும் பிரயாக்ராஜ் நகருக்கு வந்திருந்தவர்கள் பல மணிநேரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

 பொறுமையிழந்த மக்கள், தடுப்பரண்களைத் தள்ளிக் கொண்டு நீராடச் சென்ற போது, ஏற்பட்ட நெரிசலில் இறக்க நேரிட்டது. அரசுத் தரப்பில் 40க்கும் குறைவாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கு சொல்லப்பட்ட நிலையில், அதன் உண்மைக் கணக்கு 170க்கு மேல் தாண்டும் என்று ஊடகங்கள் பலவும் கருத்துகளை வெளியிட்டிருந்தன.

இந்த நெரிசல் பலிகளுக்கு முன்பாகவே, கும்பமேளா விழாமேடை ஒன்று சரிந்ததில் சிலர் உயிரிழந்தார்கள். 

அப்போதே பாதுகாப்பு நடவடிக்கைகளையும், நாளொன்றுக்கு சராசரியாக வரக்கூடியவர்களின் எண்ணிக்கையையும் சரியாகவோ தோராயமாகவோ கணித்து, கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். எனினும், மேடை சரிவு, நெரிசல் ஆகியவற்றால் ஏற்பட்ட பலிகளுக்குப்பிறகும் தற்காலிக முகாம்கள் தீப்பிடித்து எரிவது உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருந்தன

.கும்பமேளாவுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் பலரும் ரயில் பயணிகளாக இருக்கிற நிலையில் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், டெல்லி ஆகிய மாநிலங்களின் ரயில் நிலையங்களில் நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதக்கூடிய நிலை உள்ளது. 

அத்தனை பேருக்கும் ஒரே நாளில்-ஒரே நேரத்தில் ரயில் பயணத்திற்கான வசதியை திடீரென இந்திய ரயில்வேயால் ஏற்படுத்த முடியாது. இதனை உயரதிகாரிகள், ஆட்சியாளர்கள் அறிந்திருந்தாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக வருவது பற்றி உரிய முறையில் அக்கறை செலுத்தவேயில்லை.

டெல்லி ரயில் நிலையத்தில் கூடிய மக்கள் கூட்டம் ரயில் பெட்டிகளில் போட்டிப் போட்டுக் கொண்டு ஏற முயன்றதால் பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டது. குழந்தைகளைக் கையில் வைத்திருந்த பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். 

ரயிலுக்குள்ளேயும் செல்ல முடியாமல், கீழேயும் இறங்க முடியாமல் மூச்சுத் திணறுமளவுக்கு அவர்கள் தவித்துக் கொண்டிருந்த நிலையில், ரயிலுக்குள் இடம் கிடைக்காத இளைஞர்களும் பிற பயணிகளும் ரயில் பெட்டிகளின் மீது தாக்குதல் நடத்தி, கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினார்கள். ப்ளாட்பாரத்திலிருந்து புறப்பட்ட ரயில்கள் மீது, காத்திருந்த பயணிகளின் கல், பாட்டில், கட்டைகள் என வீசியதால் கண்ணாடிகள் உடைந்து உள்ளே பயணித்துக்கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் ரத்தக் காயமடைகின்ற அளவுக்கு நிலைமை சென்றது.

இதைவிடவும் கொடூர நிலைமை என்னவென்றால், ரயிலில் இடம் பிடிப்பதற்காக ப்ளாட்பாரத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கானப் பயணிகள் போட்டிப் போட்டதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பரிதாபகரமாக உயிரிழந்தார்கள். 

உலகம் அதிசயிக்கும் மக்கள் பெருந்திரள் விழா என இந்தியாவை பா.ஜ.க. ஆட்சியினர் அடையாளப்படுத்தும் நிகழ்வில், இந்தியத் தலைநகரின் ரயில் நிலையத்தில் இத்தகைய உயிர்ப்பலிகள் நிகழ்ந்தது நாட்டில் உள்ள எல்லாரையும் அதிர வைத்தது. அண்மைக்காலத்தில் இப்படியான தொடர்ச்சியான உயிர்ப்பலிகளை இந்தியா சந்தித்ததில்லை.

நாட்டில் இயல்பாக ஒன்று நடந்தால்கூட அது பிரதமர் மோடியின் சாதனை என்று தம்பட்டம் அடிக்கப்படும் நிலையில், அதுவே மக்கள் மனதிலும் பதிந்த கிடக்கிறது. 

அதன் தாக்கத்தால், கும்பமேளாவுக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட் வாங்காமல் பயணிக்க பிரதமர் மோடி அனுமதித்திருக்கிறார் என்று வாட்ஸ்ஆப்பில் பரவிய பெண் குரலின் உண்மைத்தன்மையை உணராமல், வழக்கம்போல இந்த வதந்தியையும் நம்பி, ரயில் நிலையங்களில் குவிந்து, பிரயாக்ராஜ் செல்லும் ரயில்களின் ரிசர்வேஷன் பெட்டிகளிலும் டிக்கெட்டின்றி பயணித்த வடமாநிலத்தவர்கள் ஏராளம். 

அதனால் ஏற்பட்ட மோதல்களும், நெருக்கடிகளும் பல பிரச்சினைகளை உருவாக்கியிருக்கின்றன.

குதிரை காணாமல் போனதும் லாயத்தைப் பூட்டுவது போல, டெல்லி ரயில் நிலையத்தில் 18 பேர் பலியானபிறகு, பீகார் மாநில ரயில் நிலையங்களுக்கு வருபவர்கள் டிக்கெட் இல்லாமல் உள்ளே செல்ல அனுமதி இல்லை எனக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் 60 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகமும் அதற்குரிய பாதுகாப்பு அமைப்பும் தெரிவித்துள்ளது. கும்பமேளா தொடரும் நிலையில், புனிதப் பலிகள் தொடராமல் மக்களின் உயிரைப் பாதுகாத்தால் நல்லது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?