குஜராத் கல்வி மாடல்?
2023-ஆம் ஆண்டு குஜராத் தேர்வு வாரியம் வெளியிட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளின் அறிக்கை ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகின்றது. இது குஜராத் மாடலின் போலித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வி வாரியத்தால் (Gujatat Secondary Education Board – GSEB) 10-ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் மே 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது. பகுதி வாரியாக தேர்வு முடிவுகளை ஆய்வு செய்து “குஜராத் வாரிய முடிவுகள் : 10-ஆம் வகுப்பில் 157 பள்ளிகளில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை“ என்கிற தலைப்பில் டி.என்.ஏ (DNA) என்கிற இணையதளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 272 பள்ளிகளில் 100 சதவிகித தேர்ச்சியும், 184 பள்ளிகள் 30 சதவிகிதத்திற்கும் குறைவான தேர்ச்சியும், 157 பள்ளிகளில் பூஜ்ஜிய தேர்ச்சியும் மாணவர்கள் பெற்றுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தமாக, குஜராத் கல்வி வாரியத்தின் தேர்ச்சி விகிதம் 64.62 சதவிகிதம் ஆகும். அதில், 76 சதவிகித தேர்ச்சி விகிதத்துடன் சூரத் முதலிடத்தில் உள்ளது. 40.75 சதவிகித தேர்ச்சி வீதத்துடன் தாஹோத் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
தேர்வில் தோல்வியடைந்து மீண்டும் தேர்வு எழுதிய 1,65,690 மாணவர்களில் 27,446 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக “ஆஜ் தெக்” என்கிற இந்திய செய்தி நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில், குறிப்பாக தாய்மொழி குஜராத்திலேயே 96,000 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது அம்மாநில அரசின் கல்வி கட்டமைப்பு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது. முக்கியமாக, கணிதப் பாடத்தில் 2.94 லட்சம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2023-ஆம் ஆண்டு வெளியான டி.என்.ஏ செய்தி நிறுவன அறிக்கையின் “ஸ்க்ரீன் ஷாட்” (Screenshot) தற்போது சமூகவலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இதன் மூலம் மோடியின் குஜராத் மாடலின் கல்வி கட்டமைப்பு எவ்வாறு சீரழிக்கப்பட்டுள்ளது என்பது மீண்டும் ஒருமுறை அம்பலப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளையும், பள்ளிகள் இல்லாத கிராமத்தையும் உருவாக்குவதுதான் பாசிச கும்பல் கூறும் வளர்ச்சியின் உண்மை முகம் என்பது குஜராத்தின் கல்வி கட்டமைப்பைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.
இந்த நிலையை நாடு முழுவதும் ஏற்படுத்துவதற்குத்தான், தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிற மாநிலங்களுக்கான கல்வி நிதியைத் தராமல் தொடர்ந்து வஞ்சித்து வருவது பாசிச மோடி அரசு.
எனவே, மோடி கும்பலின் இந்த பாசிச சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராகப் போராடாமல் இருந்தால் தற்போது குஜராத்தில் கல்வி கட்டமைப்பு சிதைக்கப்பட்டுள்ளது போலவே, ஒட்டுமொத்த அரசு கல்வி கட்டமைப்பும் சிதைக்கப்படும்.
தண்ணீரைப் பூட்டி வை!எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் தான் அதிக பட்ச வெயில் அடிக்கிறது.
இதனால் மக்கள் கிலோ மீட்டர் கணக்கில் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அரசு அமைத்துள்ள குடிநீர் பைப்களில் சில நேரங்களில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருகிறது.
இதையடுத்து மகாராஷ்டிரா மக்கள் தண்ணீருக்கு பணத்தை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
அகோலா மாவட்டத்தில் உள்ள உக்வா என்ற கிராமத்தில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் பைப்களில் தண்ணீர் வருகிறது. சில நேரங்களில் 45 முதல் 60 நாள் கழித்துதான் பைப்பில் தண்ணீர் வருகிறது. இதனால் உக்வா கிராம மக்கள் தண்ணீர் வரும் போது பெரிய தொட்டிகளில் சேமித்து வைத்துக்கொள்கின்றனர்.
அந்த தண்ணீர் ஒரு மாதத்திற்கு தேவை என்பதால் அதிகமான வீடுகளில் தண்ணீர் தொட்டிக்கு மக்கள் பூட்டுப்போட்டுள்ளனர். யாராவது தண்ணீரை திருடிச்சென்றுவிடக்கூடாது என்பதற்காக இது போன்ற முன்னேற்பாடு செய்துள்ளனர்.
இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த சந்தா என்ற பெண் கூறுகையில்,''எங்களுக்கு பணத்தை விட தண்ணீர் முக்கியமானதாக இருக்கிறது. யாராவது தண்ணீரை திருடிச்சென்றுவிட்டால் நாங்கள் தண்ணீருக்காக அடுத்த இரண்டு மாதம் காத்திருக்கவேண்டும். அல்லது ரூ.600 கொடுத்து டேங்கர் தண்ணீர் வாங்கவேண்டும்'' என்றார்.
இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் தண்ணீர் பிரச்னையால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.
தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி இக்கிராமத்திற்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த யாரும் திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுக்கின்றனர்.
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக
உள்ளூர் பெண்களே உள்ளூர் ஆண்களை திருமணம் செய்ய மறுக்கின்றனர் என்று அக்கிராம ஆண்கள் குறைபட்டுக்கொண்டுள்ளனர்.
ஜூன் இறுதியில் மழை தொடங்கும். அதுவரை இந்த பிரச்னை இருக்கத்தான் செய்யும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் இந்த சித்ரவதையை அனுபவித்து வருவதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். நந்துர்பர் மாவட்டத்தில் உள்ள தன்காவ் பகுதி பழங்குடியின மக்கள் தண்ணீருக்காக 7 முதல் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து செல்கின்றனர்.
வழியில் சில நேரங்களில் பெண்களை பாம்பு கடித்துவிடுகிறது.
இது குறித்து பஞ்சாயத்து தலைவர் விர் சிங் கூறுகையில்,''தண்ணீருக்காக பல முறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு தண்ணீர் கிடைக்குமா என்று தெரியவில்லை.
மக்கள் அடிபம்பு மூலம் தண்ணீர் எடுக்கின்றனர்.
அதிலும் தண்ணீர் மிகவும் குறைவாக வருகிறது. இதனால் தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருக்கவேண்டிருக்கிறது'' என்றார்.
நிலத்தடி நீரை தமிழ்நாட்டிலும் அதிகமாக எடுத்து வரும் நிலை உள்ளது.
அகோலா அவலநிலை வரும் முன் சுதாரிப்போம்.



