தமிழ் படித்தால் ...

 முன்னுரிமை!

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கும் விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் 2010-ம் ஆண்டு சட்டத்தையும், 2020 திருத்தச் சட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு, முழுமையாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கே அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர மொழிகளைப் பயிற்று மொழியாக (Medium of instruction) கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.

1-ம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, பின்னர் தமிழ் நாட்டில் தங்களது கல்வியினை, சேரும் வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.

நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும்.

அதாவது, பள்ளிக் கல்வியைப் பொருத்தமட்டில், சம்பந்தப்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும், உயர்கல்வியைப் பொருத்தமட்டில் தொழிற்பயிற்சி நிலையம் / கல்லூரி / பல்கலைக்கழக முதல்வர் / பதிவாளர் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படும். மேற்படி சான்றிதழ்கள் பணியில் உள்ள அலுவலர்களால் மட்டும் அளிக்கப்பட வேண்டும் எனவும், ஓய்வுபெற்ற அலுவலர்களால் அளிக்கப்படக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக தனித்தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் அல்லர்.

பள்ளிக்குச் சென்று பள்ளியில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு போன்ற பொதுத்தேர்வுகள் எழுதி, அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல், தனித்தேர்வராக தேர்வெழுதி அப்பாடங்களில் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.

நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும். அதாவது, பள்ளிக் கல்வியைப் பொருத்தமட்டில், சம்பந்தப்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் தனித்தேர்வைப் பொருத்தமட்டில் இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும், உயர்கல்வியைப் பொருத்தமட்டில் தொழிற்பயிற்சி நிலையம் / கல்லூரி / பல்கலைக்கழக முதல்வர் / பதிவாளர் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.

கல்வித் தகுதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட பணியாளர் தெரிவு முகமைகள் (Recruiting Agencies) / பணிநியமன அலுவலர்கள் (Appointing Authorities) உறுதி செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்படும், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களின் உண்மைத்தன்மையினை சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் பணியாளர் தெரிவு முகமைகள் (Recruiting Agencies) / பணிநியமன அலுவலர்கள் (Appointing Authorities) உறுதி செய்துகொள்ள வேண்டும்.


பூஜ்ஜியம் சதவீதம் கஞ்சா பயிரிடும் மாநிலமாக தமிழ்நாடு தற்பொழுது இருந்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பழனி கலைக்கல்லூரி மாணவர்களை நாற்காலியால் தாக்கிய உதவி பேராசிரியர் கவுதம் பணியிடை நீக்கம்.
அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி விலகல்: அபூபக்கர் சித்திக் அறிவிப்பு.
6 ஆயிரம் கோடி மோசடி வழக்கு.மதுரை நியோமேக்ஸின் ரூ.600 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை  நடவடிக்கை.

மயக்கும் விருந்து தயார்!

சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு வரும் 23ம் தேதி எடப்பாடி பழனிசாமி விருந்து வைக்க உள்ளார். அதிமுக பொதுச்செயலாளரான பின்னர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு பெரிய அளவில் எந்த விருந்தும் வைக்கவில்லை. 

பொதுச்செயலாளர் ஆனதில் இருந்து அவருக்கு ஏராளமான பிரச்னைகள் இருந்து வந்தன. பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக ஓபிஎஸ் அடுத்தடுத்து தொடுத்த வழக்குகள், ஓபிஎஸ் நீக்கம், வேலுமணி, தங்கமணியுடனான கருத்து மோதல், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, சரியான கூட்டணி அமைக்காததால் தொண்டர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி, செங்கோட்டையன் விவகாரம், இரட்டை இலை தொடர்பான வழக்கு என அடுத்தடுத்த பிரச்னைகளால் எடப்பாடி கடும் அப்செட்டில் இருந்து வந்தார். 

இதனால், கட்சியினரை பெரிய அளவில் எடப்பாடி கவனிக்கவில்லை.

கட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. பாஜ அண்ணாமலை ஆற்றிய எதிர்வினையை கூட எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி சமாளிக்க முடியாமல் திணறிவந்தார். 

இதனிடையே மூத்த தலைவர்களும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இதனால், கட்சி நிர்வாகிகளும் கடும் சோர்வில் இருந்து வருகின்றனர். இவர்களை உற்சாகப்படுத்த எடப்பாடி முடிவு செய்துள்ளார். அவர்களை சரியான முறையில் கவனித்தால்தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க முடியும் என்ற முடிவுக்கு எடப்பாடி வந்துள்ளார்.

அதேநேரத்தில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் அரசியல் கட்சியினர் வியூகம் வகுத்து செயல்பட்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக அதிமுக-பாஜ கூட்டணி அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

சென்னையில் கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கூட்டணி அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணி மட்டும்தான் கூட்டணி அரசு இல்லை என்றும் அதிரடியாக அறிவித்தார்.

பொதுக்குழுவை கூட்டி எல்லா முடிவுகளையும் எடுக்கக் கூடிய எடப்பாடி, பாஜவுடனான கூட்டணியை மட்டும் யாருக்கும் அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்து பாஜவுடன் திடீர் கூட்டணி அமைத்துவிட்டார் என அதிமுகவில் பெரும்பாலான தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். 

இந்த நிலையில் அதிமுக-பாஜ கூட்டணி சேர்ந்துள்ளதை வெளிப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விருந்து வைக்க உள்ளார். சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வரும் 23ம் தேதி இரவு விருந்து உபசரிப்பு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருந்தின் போது ஊர்வன முதல் பறப்பன வரை விருந்தில் இருக்கும் என்று தெரிகிறது. அதாவது, சிக்கன், மட்டன், இறால், மீன், முட்டை என எம்.எல்.ஏ.க்களுக்கு விதவிதமான அசைவ விருந்து படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சைவத்தை விரும்பும் எம்.எல்.ஏ.க்களுக்கும் சைவ உணவுகள் தயார் செய்யப்பட உள்ளன. இதில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மதுவுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருந்தில் பங்கேற்கும் அனைவருக்கும் விருந்து முடிந்ததும் பெரிய சூட்கேஸை எம்எல்ஏக்களுக்கு பரிசாக வழங்க எடப்பாடி முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலுக்காக எம்.எல்.ஏ.க்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் எனவும், வியூகங்களை சிறப்பாக வகுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. 

முன்னதாக அதிமுக – பாஜ கூட்டணி அறிவிக்கப்பட்ட அன்றே உள் துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்களுக்கு தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி விருந்து வைத்து அசத்தினார்.

வரும் மே 2ம் தேதி சென்னை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது, செயற்குழு உறுப்பினர்களுக்கும் தடபுடலாக மதிய உணவு பரிமாறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கடைசியாக 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூவத்தூர் தான் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக இருந்தனர். அதன்பிறகு இப்போதுதான் எடப்பாடி எம்எல்ஏக்களுக்கு விருந்தளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை