இந்தியாவை நாசமாக்கும்

 இந் "தீ "

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பது தேசவிரோதம் என்பது போல ஒன்றிய அரசும் பா.ஜ.க.வினரும் பேசுவது வழக்கம். தரமான கல்வியை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்வதாகவும், மாநில மொழிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும், மும்மொழிப் பாடத்திட்டம் என்றால் இந்தி என்று நினைத்துவிடவேண்டாம் -

இந்தியாவின் எந்த மொழியையும் படிக்கலாம் என்பதுதான் அர்த்தம் என்றும் பிரதமர் மோடியில் தொடங்கி உள்துறை அமைச்சர் அமித்ஷா, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழிசை, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், டி.வி. விவாத வலதுசாரிகள் என எல்லாரும் ஒரே மாதிரி குரலில் சொல்வார்கள்.

இதைக் கேட்கும்போது நல்லாத்தானே இருக்கு என்பது போலத் தோன்றும். இதை ஏன் தமிழ்நாடு எதிர்க்கிறது என்ற கேள்வி எழும்.

 மும்மொழித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என தமிழ்நாடு அரசு முடிவெடுத்ததால் ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2512 கோடி ரூபாய் வழங்கப்படவில்லை. அதேநேரத்தில், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி செய்யும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மும்மொழித் திட்டத்தைக் கொண்ட தேசிய கல்விக்கொள்கை ஏற்கப்படும் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.

 அப்படியென்றால், மாநில மொழியான மராத்தி, தொடர்பு மொழியான ஆங்கிலம் இவற்றுடன் இந்திய மொழிகள் எதை வேண்டுமானாலும் மகாராஷ்ட்ராவில் படிக்க முடியுமா என்று கேட்டால், அதற்கான பதில், இந்தி மொழியைத்தான் ஒன்றாம் வகுப்பிலிருந்து எல்லாரும் கட்டாயமாகப் படித்தாக வேண்டும் என்பதே.

ஆம்.. மும்மொழித் திட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் இந்தி மொழி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கட்டாயம் என்கிறது அங்கு ஆளும் பா.ஜ.க. அரசு.

 மராட்டியத்தின் தலைநகரான மும்பையிலும் பிற நகரங்களிலும் தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைக்கு மூன்றாவது மொழியாக தமிழைக் கற்றுத் தரச் சொல்லி கேட்க முடியுமா? 

கர்நாடகா, பஞ்சாப், மேற்குவங்காள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு மகாராஷ்ட்ராவில் வசிப்பவர்கள் அவரவர் தாய்மொழியைக் கற்பதற்கு மகாராஷ்ட்டிரா அரசு ஏற்றுக்கொண்ட மும்மொழித் திட்டம் வழி செய்யுமா?

செய்யாது. செய்யவே செய்யாது. 20 மாணவர்களுக்கு குறையாமல் ஒரு மொழியைக் கற்க விரும்பினால் மட்டுமே அந்த மொழிக்கான ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்கிறார் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ். 

ஆனால், எந்த மாணவரும் -அவரது பெற்றோரும் கேட்காமலே அனைத்து வகுப்புகளிலும் இந்தி மொழியைக் கட்டாயமாக்கி உள்ளது மகாராஷ்ட்ராவை ஆளும் பா.ஜ.க அரசு. இதுதான் மும்மொழித் திட்டத்தின் உள்நோக்கம். 

இந்தி அல்லது சமஸ்கிருதம் இரண்டில் ஒன்றுதான் மூன்றாவது மொழியாக பெரும்பாலான பள்ளிகளில் கற்றுத்தரப்படும்.

 இதனை வெளிப்படையாகச் சொல்லாமல், மூன்றாவது மொழியாக இந்தியாவின் எந்த மொழியையும் கற்கலாம் என்று மழுப்புகிறது மோடியின் பா.ஜ.க அரசு.

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் தாய்மொழி மராத்தி. 

அந்த மாநிலத்தின் தலைநகர் மும்பை முதல் பல இடங்களிலும் இந்தி மொழியே ஆதிக்கம் செலுத்துவதை ஏற்கனவே பல அமைப்புகளும் சுட்டிக்காட்டி, தாய்மொழியான மராத்தியையே முன்னிலைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில், மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசின் இந்தி மொழித் திணிப்புக்கு சிவசேனா(உத்தவ் தாக்கரே), காங்கிரஸ், நவநிர்மாண் சேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இதை விட முக்கியமான கண்டனமும் எதிர்ப்பும் மராத்திய மாநில அரசால் அமைக்கப்பட்ட மொழி ஆலோசனைக் கமிட்டியின் தலைவர் லஷ்மிகாந்த் தேஷ்முக் என்பவரிடமிருந்தே வெளிப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸூக்கு தேஷ்முக் எழுதியுள்ள கடிதத்தில், “மும்மொழித் திட்டத்தை மாநில அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். இந்தியைத் திணிப்பது என்பது தேவையற்றது.

தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு தாய்மொழியில் பாடம் நடத்த வேண்டும். மேல்நிலைக் கல்வியில் இந்தி மொழியைப் பாடமாக வைக்கலாம். தற்போது மகாராஷ்ட்டிராவின் பள்ளிகளில் மராத்தியும், ஆங்கிலமும் மோசமான முறையில் உள்ளது. 

சரியாகக் கற்பிப்பதற்கேற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதில் மூன்றாவது மொழி என்று இந்தியைக் கட்டாயமாக்கினால் ஆசிரியர்களுக்கு சுமை கூடுவதுடன், எந்த ஒரு மொழியையும் சரியாகக் கற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுவார்கள்.

 மொழிரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் மகாராஷ்ட்ரா மேலும் சிக்கலாவதற்கு இடம்தரக்கூடாது. இந்தி மொழிக் கட்டாயம் என்பதை உடனே ரத்து செய்யவும்” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ராவில் உள்ள பல அமைப்புகளும் இதையே வலியுறுத்துகின்றன. இந்த நெருக்கடியால் மகாராஷ்டிராவில் மராத்தி மட்டுமே கட்டாய மொழி என்று பின்வாங்கி இருக்கிறார் அம்மாநில முதல்வர்.

இந்தியாவின் ஒற்றுமைக்கு உலை வைக்கிறது ஒன்றிய பா.ஜ.க  மோடி அரசின் கட்டாய "இந்’தீ’.'

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை