மீண்டும் ஒரு லாக் அப் மரணம்
சாத்தான் குளம்-திருப்புவனம்
நிகழ்ந்தது ஏன்?
"ஐந்து ஆண்டுகளாகியும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் நாங்கள் உயிருடன் இருக்கும் வரை வேதனையைத் தரும்."
இவை பென்னிக்ஸின் சகோதரி பெர்சிஸின் வார்த்தைகள்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீஸ் காவலில் தந்தை - மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் தாக்கப்பட்டு உயிரிழந்து ஐந்தாண்டுகளாகி விட்டன.
ஆனாலும், ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்த இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை, அவர்களது குடும்பத்தினர் நீதிக்காக காத்துக் கிடக்கின்றனர்.
இதனிடையே தான், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"காவல்நிலைய மரணங்களில் விரைந்து நீதி கிடைத்தால் தானே, இனி இப்படி செய்யக் கூடாது என்ற பயம் காவல் துறையினருக்கு இருக்கும்." என்கிறார் பெர்சிஸ்.
சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.
சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர்,
சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர்.
2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது, ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்ஸுக்கும் இடையே சிறு வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
இதையடுத்து, முதலில் ஜெயராஜை காவல்துறையினர் வாகனத்தில் அழைத்துச் சென்ற நிலையில், பின்னாலேயே பென்னிக்ஸ் இருசக்கர வாகனத்தில் சென்றது அங்கிருந்த சிசிடிவியில் பதிவான வீடியோ பின்னர் வெளியானது.
இதையடுத்து, அன்றைய தினம் பென்னிக்ஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
பின்னர், காவல்நிலையத்தில் வைத்து ஜெயராஜ் -பென்னிக்ஸை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
ஜூன் 20 அன்று சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வெண்ணிலா, இருவரின் உடல்நிலையும் நன்றாக இருப்பதாக சான்று அளித்ததைத் தொடர்ந்து, இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார். இதையடுத்து, இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன்பின், அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
அங்கு, ஜூன் 22 அன்று பென்னிக்ஸும் 23ம் தேதி ஜெயராஜும் உயிரிழந்தனர். பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு, அப்போதைய அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
"அப்பா (ஜெயராஜ்) மீதும், பென்னிக்ஸ் மீதும் எந்த குற்ற வழக்கும் இதற்கு முன்பு இருந்ததில்லை. கடைக்கு வந்து அப்பாவை ஏன் காவல்துறை அழைத்துச் சென்றனர் என்பது தெரியவில்லை, அப்பாவை அடித்துக் கீழே தள்ளியுள்ளனர்.
இதை பென்னிக்ஸ் கேள்வி கேட்டதற்கு, "போலீஸையே எதிர்த்துப் பேசுகிறாயா?" என கேட்டுதான் போலீஸார் தாக்கியுள்ளனர். இது முழுக்க முழுக்க போலீஸின் 'ஈகோ'வால் நிகழ்ந்தது" என்கிறார், பென்னிக்ஸின் சகோதரி பெர்சிஸ்.
ஜெயராஜ் - பென்னிக்ஸ் மீது காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், பின்னர் தவறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்தது.
,
காவலர் தாமஸ் பிரான்சிஸ்
ஆரம்பத்தில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்த நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்ததாக, உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணையை நடத்தியது. இதனிடையே, சம்பவம் நடந்து சில தினங்களிலேயே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ, 105 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் பெண் காவலர் ரேவதி அளித்த சாட்சியம் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையின்படி, "காவலர் முத்துராஜா, என் அப்பாவின் தொடை மீது ஏறி நின்றுள்ளார்." என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார் பெர்சிஸ்.
மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் உள்ளார்.
இவர் தவிர, உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
"பொதுமக்கள், இயக்கங்கள் என பலதரப்பினரும் இதற்கு எதிராக போராடியும் இன்னும் வழக்கில் விசாரணையே நிறைவு பெறவில்லை. இத்தனை ஆண்டுகளாகும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக இந்த வழக்குக்கு நீதிபதியே இல்லாமல் இருந்தது, கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நீதிபதி முத்துக்குமரன் நியமிக்கப்பட்டார்.
பொறுப்பு நீதிபதி இருக்கும்போது வாரத்தில் ஒருமுறைதான் வழக்கை விசாரிக்க முடியும்." என்கிறார் பெர்சிஸ்.
சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி மாற்றப்பட்டது குறித்த சர்ச்சைகள் முன்பு எழுந்துள்ளன.
இந்த வழக்கை விசாரித்து வந்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 2022, ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டது சர்ச்சையானது.
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், "மாவட்ட நீதிபதிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்வது வழக்கமான நடைமுறை." என தெரிவித்திருந்தார். ஆனாலும், இதுபோன்ற முக்கிய வழக்குகளில் விசாரணை முடிவடையும் வரை நீதிபதிகளை மாற்றாமல் இருக்க வேண்டிய தேவை உள்ளது குறித்தும் அவ்வப்போது கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கு தாமதமானதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது.
"குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் தனித்தனி வழக்கறிஞர்களை வைத்துள்ளனர். ஒவ்வொரு வழக்கறிஞரும் சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்கின்றனர், அதனாலும் மிகுந்த காலதாமதம் ஆகிறது." என கூறுகிறார் பெர்சிஸ்.
நேரடி சாட்சியங்கள், காவல் நிலையத்துக்கு வெளியே இருந்தவர்களின் சாட்சியங்கள், மருத்துவமனை காணொளிகள், ஆடைகளில் ரத்தக் கறை உள்ளிட்ட ஆதாரங்கள் தெளிவாக உள்ளதாக குறிப்பிடுகிறார் அவர். "மருத்துவமனை வாயிலில் இருவருடைய உடைகளிலும் ரத்தம் கசிந்திருந்ததை சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் காட்டுகின்றன."
"இருவருடைய மரணத்துக்குப் பிறகு வாழ்க்கையில் எந்த நல்ல காரியங்களுக்கும் மகிழ்ச்சியாக செல்ல முடியவில்லை, எங்கள் குடும்பத்தினர் அழாமல் உறங்கிய நாட்களே இல்லை.
அவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கிறோம். நீதி வேண்டி ஐந்தாண்டு கால அலைச்சலும் இதனுடன் சேர்ந்திருக்கிறது." என வேதனைப்படுகிறார் பெர்சிஸ்.
பென்னிக்ஸுக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் ஒரு இளைய சகோதரியும் உள்ளனர்.
பென்னிக்ஸின் நண்பர் ராஜாராம், ஜெயராஜ்-பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் இரவில் இருந்தபோது வெளியே தான் இருந்துள்ளார். இருவருடைய அலறல் சத்தமும் தனக்கு கேட்டதாக நினைவுகூர்கிறார் வழக்கறிஞர் ராஜாராம்.
"அப்பாவை (ஜெயராஜ்) காவல்துறையினர் அழைத்துச் சென்றதால் தான் பென்னிக்ஸ் காவல் நிலையம் சென்றார்.
இருவருடைய அலறல் சத்தமும் கேட்டது. என் சாட்சியத்தை நீதிமன்றத்திலும் தெரிவித்திருக்கிறேன்.
மருத்துவமனை வாயிலில் பென்னிக்ஸை சந்தித்தபோது, 'என்னை விரைவில் வெளியே எடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள்' என தெரிவித்தார்" என கூறுகிறார் ராஜாராம்.
ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினர் சார்பாக இந்த வழக்கில் வாதாடிவரும் வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸிடம் பேசினோம்.
"இந்த வழக்கில் இதுவரை ஐந்து நீதிபதிகள் மாறியுள்ளனர், இது எதேச்சையாக நடக்கிறதா, அரசியல் அழுத்தமா என்பது தெரியவில்லை. வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்றே குற்றம் சட்டப்பட்டோர் தரப்பு நினைக்கிறது.
குறிப்பாக, ஏ1 ஸ்ரீதர் ஆரம்பத்தில் நானே எனக்காக வாதாடுகிறேன் என்றார். பின்னர், சட்ட உதவி மையத்திலிருந்து அவருக்கு வழக்கறிஞரை அமர்த்தினர்.
ஆனால், மீண்டும் எனக்கு நானே தான் வாதாடுவேன் என கூறினார் ஸ்ரீதர்.
அதன்பின், இன்னொரு வழக்கறிஞரை வைத்து நடத்த அனுமதியுங்கள் என மனு போட்டார், திரும்பவும் நானே வாதாடுகிறேன் என கூறுகிறார். வேண்டுமென்றே கேட்ட கேள்விகளையே மீண்டும் கேட்டு விசாரணையை இழுத்தடிக்கிறார்." என காலதாமதத்துக்கான காரணத்தை விளக்கினார் அவர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஒருவர் பின் ஒருவராக ஜாமீன் கேட்டு மனு போடுவதன் மூலமும் வழக்கை இழுத்தடிப்பதாகக் கூறுகிறார் அவர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த வழக்குக்கு என ஒரு சிறப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தி, தினமும் விசாரித்திருந்தால் வழக்கு முடிவுக்கு வந்திருக்கும் என்கிறார் அவர்.
"ஆனால், சிபிஐ நடத்தும் வழக்கில் மாநில அரசு தலையிட முடியாது, விரைந்து வழக்கை முடிவெடுக்க வேண்டும் என, அரசு அறிக்கை வேண்டுமானால் வெளியிடலாம். அரசு இதில் தலையிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என கூறுகிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.
சிபிஐ தங்களால் முடிந்தளவுக்கு சாட்சிகளை விசாரித்திருக்கிறது எனக்கூறிய வழக்கறிஞர் ராஜீவ், மருத்துவமனைக்கு அவர்கள் இருவரையும் ரத்தம் சொட்ட அழைத்துச் சென்ற காட்சிகள், அவர்கள் அமரவைக்கப்பட்ட இருக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
"காவல்நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் அவர்களுடையதுதான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது." என அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கை தொடர்ந்து கண்காணித்து வரும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஆசீர்வாதம், "விரைவான விசாரணை நடந்தால்தான் நீதி கிடைக்கும். மாஜிஸ்திரேட் பாரதிதாசன் 50 முறைக்கு மேல் தன் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
இத்தனை பேரின் கடும் உழைப்புக்கு மத்தியிலும் இவ்வழக்கில் இன்னும் நீதி கிடைக்காதது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பெரியளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கிய சாட்சியான ரேவதி மன அழுத்தத்தில் உள்ளார், அவரால் இன்னும் சுதந்திரமாக வெளியே செல்லக்கூட முடியவில்லை." என்றார்.
இந்த வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மதுரை நீதிமன்றத்துக்கு 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் வழக்கு விசாரணை முடிவடையவில்லை..
தேசிய மனித உரிமை ஆணையம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி, 2018-19ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 11 காவல் மரணங்களும் 89 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன.
இந்திய அளவில் 137 காவல் மரணங்களும் 1797 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன.
2019 - 20ல் தமிழ்நாட்டில் 12 காவல் நிலைய மரணங்களும் 57 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஏப்ரல் 5 முதல் 16ஆம் தேதிக்குள் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
சமீபத்திய உதாரணமாக, காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் உள்ளது.
"காவல் நிலைய மரணங்களை இந்த அரசு மூடி மறைக்கவில்லை.
அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுக்கிறது. அதைத் தடுக்க வேண்டும் என உறுதியுடன் இருக்கிறது. எல்லா சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார், திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன்.
இவை அனைத்துக்கும் மத்தியில், விரைந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்.
- கட்டுரைக்கு உதவி பிபிசி,