குழப்பமோ..குழப்பம்!

அரசுப் பணிகள் குறித்து மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு. உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளின் நிலை குறித்தும் ஆலோசனை.

துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமாவுக்கு பாஜக மேலிட அழுத்தம் காரணமா? உடல்நிலை மட்டுமின்றி வேறு காரணங்களும் இருப்பதாக பரபரப்பு தகவல்.

தேர்தல் ஆணையம் கொண்டு வந்திருக்கும் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  திமுக உள்ளிட்ட தமிழ்நாடு எம்பிக்கள் தமிழில் முழக்கமிட்டு நாடாளுமன்றம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்!
பஹல்காம் தாக்குதல், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தல். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் 2வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் என்ன தவறு என எடப்பாடி பழனிசாமி மீண்டும் கேள்வி. தங்களுக்கு விருப்ப பட்டவர்களுடன் கூட்டணி அமைப்போம் என்றும் பேச்சு.
தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடம். திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த மணிமகுடம்;- அமைச்சர் தங்கம் தென்னரசு .
பாகிஸ்தானின் (Pakistan) பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானின் சிந்த் பகுதி தொடர் மழையின் காரணமாக மிகுந்த சேதத்தை சந்தித்துள்ள நிலையில், அங்கு மழை தொடர்பான சேதங்கள் மற்றும் பாதிப்புகள் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு ஆலைகள் விபத்து விவகாரத்தில், விதிமுறையை மீறியதாக 400-க்கும் மேற்பட்ட ஆலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!
சென்னை ஆலந்தூரில் உள்ள தனியார் ஹோட்டலில் 7 வயது சிறுமியை, அவரது தந்தை கொலை செய்து பின்அவரது கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது  ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.






நாடாளுமன்ற (பரிதாப)நிலை.

மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று (ஜூலை 21) முதல் தொடங்குவதால் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. என்னென்ன பிரச்சினைகளை முன்னெடுத்துப் பேசுவது என்பதுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் நோக்கமாகும்.

 இரண்டு முக்கிய பிரச்சினைகளை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தன.

முதலாவது பிரச்சினை-ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான பாகிஸ்தான் மீதான ராணுவத் தாக்குதல் தொடங்கப்பட்டதும் அது நிறுத்தப்பட்டதும் ஏன் என்பதற்கான நேர்மையான-முழுமையான விளக்கம் வேண்டும் என்பதுதான். காஷ்மீர் பெஹல்காம் சுற்றுலாப் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில், பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பாகிஸ்தான் மீது நடத்தியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

 பாகிஸ்தான் தரப்பிலிருந்தும் பதில் தாக்குதல்கள் வெளிப்பட்ட நிலையில், இரு நாடுகளிடமும் பேசி போரை நிறுத்திவிட்டேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். டிரம்ப் அறிவிப்பை இந்தியா மறுப்பதும், டிரம்ப் மீண்டும் மீண்டும் பல முறை அதையே சொல்வதுமாக ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் போய்க் கொண்டிருக்கிறது.

இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்கள், தீவிரவாதிகள் குடும்பத்தினரின் வசிப்பிடங்கள், பாகிஸ்தானின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவை குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

 எனினும், பெஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் என இந்தியத் தரப்பில் வெளியிடப்பட்ட படங்களில் இருந்த நபர்கள் உள்ளிட்ட அந்த தீவிரவாதிகள் பிடிபட்டார்களா? 

கொல்லப்பட்டார்களா? 

அவர்களின் செயல்பாடு என்னவானது?

 என்பன பற்றி பாஜக அரசு இதுவரை எந்த தெளிவான பதிலையும் அளிக்கவில்லை.

அரசியலில் கவனத்தை ஈர்ப்பதற்காக அவ்வப்போது பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க அரசுக்கு வழக்கமாக உள்ள நிலையில், அப்பாவி இந்திய சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்படுமளவுக்கு ஒரு சுற்றுலாத்தலம் போதிய பாதுகாப்பின்றி இருந்தது ஏன் என்பது பற்றியோ, அப்பாவிகளை அநியாமாக சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் கதி என்ன என்பது பற்றியோ பா.ஜ.க. வாய் திறக்கவில்லை. 

இதைத்தான் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.

ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, “நாடாளுமன்ற விதிமுறைகளுக்குட்பட்டே இது குறித்து விவாதிக்கப்படும். பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப் பயணம் இல்லாத நாட்களில் நாடாளுமன்றத்தில் பேசுவார். ஆனால், எல்லாவற்றுக்கும் அவர் நாடாளுமன்றத்தில் பேச வேணடும் என்று எதிர்பார்க்க முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் இடம்பெற வேண்டிய இரண்டாவது அம்சம், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் வாக்காளர் நீக்கம் நடவடிக்கையாகும். 

ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை ஆதாரங்களாகக் கொள்ள முடியாது என்றும், பிறப்புச் சான்றிதழ்-வாழ்விடச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதால் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் உள்ளிட்டோரின் வாக்குகள் நீக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், ஏறத்தாழ 2 கோடி பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டு, ஆளும் பா.ஜ.க.கூட்டணிக்கு சாதகமான நிலை உருவாக்கப்படும் என்பதுதான் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு.

 உச்சநீதிமன்றமும் தேர்தல் நெருக்கத்தில் ஏன் இந்த நடவடிக்கை என்று கேட்டிருக்கிறது.

பீகார் மாநிலத்தில் உள்ள பட்டியல் இன மக்களில் 27.4% பேர் தேர்தல் ஆணையயத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை எனத் தெரிவித்துள்ளனர். 

நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ.க.கூட்டணி ஆட்சியில் பீகாரில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், இந்தத் தேர்தலில் வேலையில்லாத் திண்டாட்டம்தான் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என 58% தலித் வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், அவர்களின் வாக்குகளும், சிறுபான்மையினரான முஸ்லிம் சமுதாயத்தினரின் வாக்குகளும் நீக்கப்பட்டால், எதிர்ப்புணர்வு வாக்குகள் குறைந்து ஆளுந்தரப்புக்கு சாதகமான சூழல் அமையும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

தற்போது பீகாரில் முன்னெடுக்கப்படும் இதே அளவுகோலுடன் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்களிலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அமையும் என்ற எச்சரிக்கையை எதிர்க்கட்சிகள் விடுக்கின்றன. 

இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. விதிகளுக்குட்பட்டுத்தான் விவாதிப்போம் என்கிறது ஆளுங்கட்சியான பா.ஜ.க.

இதுதான் இன்றைய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் (பரிதாப)நிலை.


குழப்பமோ..

குழப்பம்!

திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது ஆட்சியில் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியே அடுத்தும் தொடரப் போகிறது.

 இதில் எந்த மாற்றமும் இல்லை. இது பழனிசாமிக்கு நன்கு தெரியும். ஆனால் அதனை மறைக்க தினந்தோறும் ஏதாவது சவால்களை, சவடால்களாக விட்டுக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. தன்னை பலவான் போல அவர் காட்டிக் கொள்ள இப்படி பேசுகிறார். ஆனால் அவரது பலவீனத்தையே இந்தப் பேச்சுகள் காட்டுகிறது.

பழனிசாமியை மிரட்டிப் பணிய வைத்தது பா.ஜ.க. என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், பா.ஜ.க. சொல்வதற்கு எல்லாம் தலையாட்டி இருக்கிறார் பழனிசாமி என்பதும் அனைவர்க்கும் தெரியும். 

'இதனை நாங்கள் மறைக்க விரும்பவில்லை' என்பதைத்தான் உள்துறை அமைச்சர்அமித்ஷா அளித்த நான்கு பேட்டிகளும் நாட்டுக்குச் சொன்னது. 'அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும்’என்று அமித்ஷா சொன்னார். ‘முதலமைச்சர் பதவிக்கு அ.தி.மு.க.வில் இருந்து ஒருவர் வருவார்' என்று அமித்ஷா சொன்னாரே தவிர, பழனிசாமி என்று அவரது பெயரைச் சொல்லவில்லை.

 ஏனென்றால் பா.ஜ.க. தலைமை தனக்கு அடக்கமான ஒருவரை பா.ஜ.க.வில் இருந்து உருவாக்கிவிட்டது. அதுதான் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆவார்.

கோவையில் ஜக்கி வாசுதேவ் விழாவில் அமித்ஷாவுக்கு இணையாக வேலுமணி அமர வைக்கப்பட்டதும், கோவைக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்ட விழாவில் வேலுமணிக்கு முக்கியத்துவம் தரப்பட்டதும் சாதாரணமாக நடந்தவை அல்ல. 

திட்டமிட்டு நடத்தப்பட்டவை ஆகும். இதுவும் பழனிசாமிக்குத் தெரியாது என்று சொல்ல முடியாது. அதனால்தான் தனது ‘சுந்தரா டிராவல்ஸ்' பயணத்தை வேலுமணி ஊரில் இருந்து தொடங்கினார் பழனிசாமி.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, திட்டமிட்டு தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக பேட்டிகள் அளித்து,‘அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி ஆட்சிதான்'என்பதை வலியுறுத்திச் சொல்லி வந்தார். அது போன்ற பேட்டிகளை தொடர்ச்சியாக வர வைத்தார்கள். இவை அனைத்தும் பழனிசாமியை நிலை குலைய வைத்துள்ளன.

அப்படிச் சொல்லவில்லை, இப்படிச் சொல்லவில்லை என்று பழனிசாமி விளக்கம் அளித்தார்,“அமித்ஷா அவர்கள், 'எங்கள் கூட்டணி, ஆட்சி அமைக்கும்... என்றுதான் சொன்னார்” என்று சொற்களைப் பிரித்து நிருபர்களுக்கு வகுப்பு எடுத்தார் பழனிசாமி. 

இவர் சொற்களைப் பிரித்து விளக்கம் அளிக்க, அமித்ஷா தமிழிலா பேட்டி அளித்தார்? அவரிடம் ஆங்கிலத்தில் “If you win, will you join the government” என்று கேட்டபோது, “Yes” என்று தான் அமித்ஷா சொன்னார்.

“திடீரென்று தைரியசாலியாக ஆகிவிட்டாரே என்று பார்த்தால் அடுத்த நாளே...” - பழனிசாமியை பங்கம் செய்த முரசொலி!

“சட்டசபைத் தேர்தலுக்குபின் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும். 

அதில் பா.ஜ.க.வும் ஒரு அங்கமாக இருக்கும்”என்பது 'தினமலர்' நாளிதழுக்கு (27.6.2025) அமித்ஷா அளித்த பேட்டி ஆகும். 'ஆட்சியில் பா.ஜ.க. பங்கேற்குமா?' என்ற கேள்விக்கு, 'ஆம்’ என்றும் பதில் அளித்தார் அமித்ஷா. (இந்தியன் எக்ஸ்பிரஸ் 12.07.2025) -இவை இரண்டுமே, பா.ஜ.க.வுக்கு பழனிசாமி அடிமைச்சாசனம் எழுதித் தந்துவிட்டார் என்பதற்கான சாட்சியங்கள்.

‘மக்களுடன் நல்லது செய்யும் கட்சியுடன்தான் கூட்டணி வைக்கிறோம்' என்று சொல்லி பா.ஜ.க. கூட்டணியை நியாயப்படுத்தினார் பழனிசாமி.'நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.வுக்கு என்ன?' என்று கேட்டார் பழனிசாமி.'மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டுக்கு நிறைய திட்டங்களைக் கொண்டுவருவோம்' என்றும் சொன்னார் பழனிசாமி. 

இது அ.தி.மு.க.வில் இருக்கும் தொண்டர்களாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை. 'பழனிசாமி இப்படி பேச வேண்டாம்' என்று முன்னாள் அமைச்சர்கள் சிலரே அவருக்குச் சொல்லி இருக்கிறார்கள். எனவே, பா.ஜ.க.வை ஆதரித்து பேசுவதைக் குறைத்தார்.

இந்த நிலையில், திருத்துறைப்பூண்டியில் கடந்த 19 ஆம் தேதியன்று பேசிய பழனிசாமி, 'அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும், ஆட்சியில் பங்கு தர நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல' என்று குறிப்பிட்டார்.

 “பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கலாமா என்று கேட்கிறார்கள். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். இது எங்கள் கட்சி. அதிமுக ஆட்சியில் பா.ஜ.க.வுக்கு பங்கு இருக்கும் என்று சொல்கிறார்கள். 

அது உண்மை இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, ஆட்சியில் பங்கு தர நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று சொல்லி இருக்கிறார். இது பச்சோந்தித் தனத்தின் அடுத்த கட்டம் ஆகும்.

கூட்டணி ஆட்சி என்று சொன்னது அமித்ஷா. எனவே, பழனிசாமி பதில் சொல்ல வேண்டியது பா.ஜ.க. பக்கம் திரும்பித் தானே தவிர, தி.மு.க. பக்கமாக அல்ல.

பழனிசாமி திடீரென்று தைரியசாலியாக ஆகிவிட்டாரே என்று பார்த்தால் அடுத்த நாளே இன்னொரு பச்சோந்தி பல்டியை அடித்தார்.“கூட்டணி ஆட்சி அமைக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்று அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.

 அ.தி.மு.க.வை பா.ஜ.க. விழுங்குவதாக தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் திட்டமிட்டு பரப்புரை செய்வதாலேயே அப்படிச் சொன்னேன்” என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. அடுத்தடுத்த நாட்களில் அவர் என்ன சொல்ல இருக்கிறாரோ என்று அ.தி.மு.க. தொண்டர்கள்தான் பயத்தில் இருக்கிறார்கள்.

தகுதியால் முதலமைச்சர் ஆனவர் அல்ல பழனிசாமி. 

சசிகலா தயவால் முதலமைச்சர் ஆனவர் பழனிசாமி. 

இப்போது அதேபோல ‘யாராவது’ தன்னை முதலமைச்சர் ஆக்கிவிட மாட்டார்களா என்று அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. 

அவரது நிலை தடுமாற்றத்துக்கு அதுதான் காரணம். அவர் தகுதியைச் சொல்ல ஒரே ஒரு உருப்படியான காரணத்தை அவரால் சொல்ல முடியவில்லை. அவரது உளறல்கள் இதன் வெளிப்பாடுகள்தான்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய