மனித அரக்கர் நாடு இஸ்ரேல்!
உலகப் புகழ் பெற்ற புகைப்படம் ஒன்று 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.

பார்க்கின்ற எவரையும் உலுக்கிவிடும் வகையிலான படம் அது.
இயற்கை மழை பொய்த்ததால் ஏற்படக்கூடிய பஞ்சம், பொருளாதாரம் சீரழிந்ததால் நாடு முழுவதும் ஏற்படக்கூடிய வறுமை, அதன் காரணமாக ஏற்படக்கூடிய பட்டினி இவற்றை காலந்தோறும் உலக நாடுகள் கண்டு வருகின்றன.
இவற்றைவிட கொடுமையான பஞ்சமும் பட்டினியும் போர்களால் ஏற்படுகின்றன. அதன் கொடூர சாட்சியாக இன்று இருக்கிறது, காசா.
பாலஸ்தீன பகதியான கசா மீது இஸ்ரேல் தொடர்ந்து ராணுவத் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. காசாவில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் தகர்ந்து தரைமட்டமாகிக் கிடக்கின்றன.காசா நகரத்தில் வடக்கு பகுதியிலிருந்து கான் யூனூஸ் என்கிற தெற்கு பகுதி வரை இடம்பெயர்ந்துள்ள பாலஸ்தீனியர்கள் டென்ட் கொட்டகைகளில்தான் தங்கியிருக்கின்றனர்.
எந்த நேரமும் விமானங்கள் குண்டு வீசும் என்கிற நிலையில், தகர கொட்டகைகளிலும், ஏற்கனவே சிதைக்கப்பட்ட கட்டடங்களின் மிச்ச மீதிப் பகுதிகளிலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு உணவு கிடைப்பதே பெரும் போராட்டமாக இருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் மனிதநேய அமைப்புகள், செஞ்சிலுவை சங்கங்கள் போன்றவை பசிப் பட்டினியில் வாடும் காசா பகுதி மக்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கான முகாம்களை ஏற்படுத்தும்போது, ஒரு வேளை உணவுக்காக நீண்ட வரிசையில் பெரியவர்களும் குழந்தைகளும் நிற்கின்ற காட்சியைக் காணும் எவருக்கும் கண்ணீர் கசியும்.
ஒட்டிய வயிறு, வெளியே தெரியும் எலும்புகள், கண்களில் மரண பயம், உணவு பாத்திரத்தை பிடிக்க வலிமையில்லாத கைகள், நடை தளர்ந்த கால்கள் என வரிசையில் நிற்கும் குழந்தைகளின் நிலைமை மிகவும் கொடூரமானது.

பட்டினியால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் காசா பகுதியில் உயிரிழந்துள்ள நிலையில், உணவு வழங்கும் இடத்தில் நடந்த குண்டு வீச்சு தாக்குதல் உலகளவதில் அதிர்ச்சியை உண்டாக்கியது.
பல நாடுகள் இந்தக் கொடூரத்தைக் கண்டித்த போதும், இஸ்ரேல் பிரதமரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிடிவாரண்ட்டை எதிர்கொண்டிருப்பவருமான பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனத்தை அழிப்பதையே குறியாகக் கொண்டு யுத்தத்தைத் தொடர்ந்து வருகிறார்.

அதற்காக ஏறத்தாழ 20 இலட்சம் பேரை அழிப்பதற்கும் தயாராகிவிட்டது.
போரினால் ஏற்படும் இழப்புகள், வலிகள் இவற்றைக் காட்டிலும், உணவு கிடைக்காமல் பட்டினியால் ஏற்படும் சாவுகள் பெருங் கொடூரமாக அமைந்துள்ளன. போர்ச்சூழல் நிலவும் பகுதிகளில் மருத்துவம், உணவு, குடிநீர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஒரு போதும் தடையிருப்பதில்லை.
இன அழிப்பு செய்யும் அரசுகள் மட்டுமே அவற்றைத் தடுத்து நிறுத்தும். 2008-2009ஆம் ஆண்டுகளில் இலங்கை சிங்கள அரசு அதை செய்தது. இஸ்ரேல் யூத அரசும் அதையே செய்கிறது.
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு அரசியல்ரீதியாகவும், ராணுவரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவி வருகின்றன.
இந்தியாவில் பா.ஜ.க. அரசு அமைந்ததிலிருந்து இஸ்ரேலை ஆதரித்து வருகிறது. உலகின் வலிமையான நாடுகள் சில இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிடுவது வழக்கமாக உள்ளது.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப் போவதாக இஸ்ரேலுக்கு எதிராக ஆஸ்திரேலியா குரல் உயர்த்தியிருக்கிறது. ஆனால், இத்தகைய வார்த்தை தாக்குதல்களுக்கு இஸ்ரேல் ஒரு போதும் மதிப்பளிப்பதில்லை. காரணம், மேற்கு நாடுகளின் ஆதரவு தனக்கு நிலையாக இருக்கிறது என்ற தெனாவெட்டுதான்.
உலக நாடுகள் வார்த்தை தாக்குதல்களுக்குப் பதில், அரசியல்ரீதியான-பொருளாதார ரீதியான தாக்குதல்களைத் தொடுத்தால் மட்டுமே, காசா கொடூரங்கள் முடிவுக்கு வரும். இஸ்ரேலின் கொட்டம் அடங்கும். உலகில் மனிதம் உயிர்த்திருக்கும்.
மீண்டும் யூதர்கள் நாடற்ற அகதிகளாக,நாதியற்று அலையும் நிலைகூட வரலாம்.