அகரம் இப்போ சிகரம் ஆச்சு!

உத்தரகாண்ட்டில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் - அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் காட்சி!

*மத்தியப் பிரதேசத்தில் குப்ரேஷ்வர் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண்கள் உயிரிழப்பு.பலர் படுகாயம்.
*மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை.
*இந்தியா மீதான #வரி இருமடங்கு உயர்த்தப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.
*2026 தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும்: தென்காசியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.







அகரம் இப்போ சிகரம் ஆச்சு!

ஒரு தனியார் அறக்கட்டளையால் 50க்கும் மேற்பட்ட டாக்டர்களை உருவாக்க முடிகிறது. 15ஆயிரம் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்க முடிகிறது. 

அதுவும், இதெல்லாம் தங்களுக்கு சாத்தியமாகுமா என்ற ஏக்கத்துடன் தவிக்கும் ஏழை-எளிய குடும்பத்து பிள்ளைகளை.

நடிகர் சூர்யா தொடங்கிய அகரம் பவுண்டேஷன் சார்பில் கல்விப் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்தப் பணியில் சூர்யாவுடன் அவரது மனைவியான நடிகை ஜோதிகா, சூர்யாவின் சகோதரர் நடிகர் கார்த்தி ஆகியோர் இணைந்து செயலாற்றுவதுடன், சூர்யா-கார்த்தி ஆகியோரின் தந்தையான நடிகர் சிவகுமாரும் அவரது மனைவியும் உறுதுணையாக இருக்கிறார்கள். 

அதனால், 15 ஆண்டுகளாக அகரம் பவுன்டேஷன் பல்வேறு கல்வி சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஏழை குடும்பத்தைச் சேர்ந்த படிப்பில் ஆர்வமுள்ள மாணவ-மாணவியரின் உயர்கல்விக் கனவை நிறைவேற்றுவதில் அகரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கல்விப் பணிக்கான முறையான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ள அகரம், இது குறித்து வழிகாட்டுதல்களுக்கும் செயல்பாடுகளுக்கும் கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது.

 ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வி உதவி தேவைப்படுபவர்கள் யார், அவர்களில் எத்தனை பேருக்கு அறக்கட்டளையால் உதவ முடியும் என்பதையெல்லாம் கவனித்து, அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் அகரம் தனித்தன்மையுடன் திகழ்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, பொதுவாக எல்லா மாநிலங்களிலும் திரைப்பட நடிகர்-நடிகையர் மீது மக்களுக்கு ஆர்வம் இருக்கும். அவர்களின் செயல்கள் கவனிக்கப்படும். 

பாராட்டு, விமர்சனம் எல்லாமும் மக்களிடமிருந்து வெளிப்படும். நடிகர் சிவக்குமார் தொடங்கி அவரது மகன்கள், மருமகள் ஆகியோர் திரைப்பட உலகில் புகழ்பெற்று விளங்குவதால் அவர்களின் அறக்கட்டளை மீது மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

 அதேநேரத்தில், மக்களின் விருப்பம் சார்ந்து செயல்படாமல், சமுதாயத்திற்கு எது தேவையோ, அதில் எவை சாத்தியமோ அவற்றை கவனத்தில் கொண்டு சூர்யாவும் அவருடன் இணைந்து நிற்பவர்களும் செயல்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏழை குடும்பங்களில் பெரும் மாற்றத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கியிருக்கிறது அகரம்.

அதன் 15வது ஆண்டுவிழாவில் நடிகரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் உள்பட பலர் பங்கேற்றதும், அறக்கட்டளையால் பயன் பெற்று மருத்துவர்களாக, பொறியாளர்களாக, அறியலாளர்களாக உள்ளவர்கள் தங்கள் மனம் திறந்து பேசியதும் நிகழ்வில் எல்லாரையும் கவரக்கூடியதாகவும், தொலைக்காட்சி சேனல்கள் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்புகிற வகையிலும் அமைந்தன.

 திரைக்கலைஞராக மட்டுமின்றி, சமுதாயத்தில் அக்கறை கொண்டவராக நடிகர் சூர்யா மேற்கொண்ட பணிகள் நிச்சயம் அவருக்கு மன நிறைவைத் தந்திருக்கும் என்பதை நிகழ்வின் போதான அவருடைய உணர்ச்சிகளும் முகபாவமும் காட்டின. 

வருங்காலத்தில் அறக்கட்டளை மூலம் இன்னும் பல பணிகளை செய்ய வேண்டிய பொறுப்பும் அவருடைய தோளில் ஏறியுள்ளன. குடும்பத்தினர், நண்பர்கள், கல்வியாளர்கள் துணையுடன் அகரம் அறக்கட்டளை பணிகளை சூர்யாவால் தொடர முடியும்.

அறக்கட்டளை நிகழ்வில் கமல்ஹாசன் எம்.பி. பேசியதில் இந்தியாவின் கல்விச் சூழல் குறித்த முக்கியமான செய்தி ஒன்று இடம்பெற்றிருந்தது. 

அகரம் மூலம் டாக்டர்களான ஏழை குடும்பத்து மாணவ-மாணவிகள் அனைவரும் 2017க்கு முன் எம்.பி.பி.எஸ். சேர்ந்தவர்கள். தற்போதுள்ள நிலையில், இப்படிப்பட்ட டாக்டர்களை உருவாக்க முடியாது என்று கமல் சொன்னார். 

அதற்கு காரணம், 2017 முதல் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு, ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவிட்டது.

நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்று டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்றால் நிச்சயம் கோச்சிங் சென்டர்களுக்கு செல்ல வேண்டும். அதற்கு இலட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டும். 

நீட் தேர்வில் முதல் முறையிலேயே தேர்ச்சி பெறுகிறவர்களின் சதவீதம் மிகவும் குறைவு. இரண்டு முறை, மூன்று முறை எழுதினால்தான் தேர்ச்சி அடையக்கூடிய சூழல் உள்ளது. 

அதற்கு கூடுதலாக பயிற்சிக் கட்டணம் செலுத்த வேண்டும். ஏழை மாணவமணிகளுக்கு அது சாத்தியமில்லை.

மத்தியில் பா.ஜ.க அரசு அமைந்ததிலிருந்து ஒரே நாடு, ஒரே கல்விக் கொள்கை என்ற வல்லாதிக்கத்தை முன்வைத்து, கல்வியில் பிற மாநிலங்களைவிட பல படிகள் முன்னேறியுள்ள தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. 

தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் ஆபத்துகளை பற்றி மக்களிடம் விளக்கியவர்களில் சூர்யாவும் ஒருவர்.

 அதனால் அவர் மீது பா.ஜ.கவினரும் ஆதரவு அமைப்பினரும் விமர்சனங்களை வைத்தார்கள். இழிவுபடுத்தினார்கள். அதையெல்லாம் மீறி தனது பொதுப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு பல்வேறு துறைகளில் ஏழை மாணவர்களை சாதிக்க வைத்திருக்கிறார்.

இந்தியாவின் பிற மாநிலங்களைவிட ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூக நீதியை பின்பற்றியது தமிழ்நாடு. அது பல தடைகளையும் தாண்டி தொடர்கிறது. இதுதான் தமிழ்நாட்டின் பெருமை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி