உலகம் சுற்றும் திராவிடம் 9
பெரியார் சென்றது சுற்றுலா அல்ல. கற்றுலா. பல நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையையும், அந்நாட்டு அரசாங்க அமைப்பு முறையையும், மக்களுக்கும் அரசுக்குமான உறவையும், மதம்-கடவுள் போன்றவற்றை அவர்கள் எப்படி கையாளகிறார்கள் என்பதையும் பெரியார் கற்றுக் கொள்ள விரும்பினார்.

உண்மையைப் பேசியதற்காகவும், பொதுமக்களை குறிப்பாக இளைஞர்களை சிந்திக்கத் தூண்டியதற்காகவும் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொன்றது கிரேக்க அரசு. ‘உன்னையே நீ அறிவாய்’ என்ற சாக்ரடீசின் சிந்தனை உலகம் முழுவதும் பரவியது.
பெரியாரோ தன்னை நோக்கிய விமர்சனம் என்கிற விஷத்தை விழுங்கி, இன்றளவும் உயிர்த்திருக்கின்ற சிந்தனையாளர். தன் மீதான சொல்லடி, கல்லடி, செருப்பு வீச்சு, கலவரம், சிறைவாசம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு சளைக்காமல் பயணித்தவர். அதனால்தான், முன்னோடி பகுத்தறிவுவாதியான சாக்ரடீஸ் சிலை முன்பாக நிதானமாக நின்று சிந்தித்தார் பெரியார்.
“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தை திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். இந்தப் பணியை செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, மற்றவர்கள் இதைச் செய்ய முன் வராததால் நான் இதனை செய்கிறேன்” என்று வெளிப்படையாகச் சொன்னவர் பெரியார்.
அவருடைய இந்த பெரும்பணிக்கு பதவி எதுவும் கிடைக்காது என்பதும், பாராட்டு கிடைக்காது என்பதும் அவருக்குத் தெரியும். விமர்சனங்களுக்கு அஞ்சாமல் அவர் பணியைத் தொடர்ந்தார்.
முதல் உலகப் போருக்குப் பிறகு, உலகின் அரசியல் போக்கும் சிந்தனைகளும் மாறியிருந்தன. சோவியத் யூனியன் என்கிற புதிய பொதுவுடைமை பூமி புரட்சியால் உருவாகியிருந்தது. மன்னர்களின் ஆட்சி அதிகாரம் குறைந்து, குடியரசு ஆட்சிகள் பல நாடுகளில் உருவாகியிருந்தன.
அறிவியல் தொழில்நுட்பமும் மருத்துவக் கண்டுபிடிப்புகளும் பெருகிக் கொண்டிருந்தன. மேலை நாடுகளில் இதற்கான கட்டமைப்புகள் வலுப்பெற்று வந்த நிலையில்தான், பெரியார் தனது பயணத்தை மேற்கொண்டார்.
வெப்ப நாடான இந்தியாவிலிருந்து கடுமையான கப்பல் பயணத்தில் ஐரோப்பாவுக்கு சென்றவருக்கு அங்குள்ள குளிர் சிரமப்படுத்தியது.
முதல் சில நாட்கள் அவரது உடையில் பெரிய மாற்றமில்லை. “தலைக்கு மாத்திரம் ஒரு கம்பளிக் குல்லாய் போட்டுக் கொண்டேன். ஆகாரம், ரொட்டி, முட்டை, காப்பி இவைகள்தான். முட்டை இவ்விடம் மிக மலிவு. 2 அணாவுக்கு 5 முட்டை கிடைக்கின்றது” என்று பெரியார் சொல்கிறார்.
பெரியார் தனக்கானத் தேவைகளைக் குறைத்துக் கொண்டு, பொது காரியங்களுக்கு முன்னுரிமை தருபவர். குடிஅரசு 27-12-1931 இதழில் பண்டிதர் திருஞானசம்பந்தர் என்பவர் பெரியாரின் பயணம் பற்றி எழுதுகிறார்.
“யான் நமது பெரியாரைக் கப்பலில் ஏறி காணச் சென்றபோது அவர் நான்காவது டெக்கில் புழுதி நிறைந்த இடத்தில், நாற்றங்கள் வீசுகின்றவிடத்தில், விகாரமான நாகரிகமற்ற பாமர மக்களுடன் வீற்றிருந்த காட்சி கண்டு பகைவர்களும் கண்கலங்குவரென்றால் மற்றும் யாது வரைவது.

அவர் பிரயாணத்தை, அவருடன் மாறுபட்டவர்களும், அவர் உண்மை தியாகத்தை நன்கறிவர். அவர்பால் சுயநலங்கருதிய அழுக்கர்களே புறங்கூறவும், பொறாமை கொண்டு தூற்றவும் செய்வர்.”
பெரியார் தன் ஐரோப்பிய பயணம் பற்றி சொன்ன வார்த்தைகள் ஒவ்வொருவரும் கவனிக்கத்தக்கவை.
“பட்டிக்காட்டில் உள்ளவனுக்கு தாலுக்கா ஒரு கண்காட்சி. தாலுக்காவை விட்டு வெளியே வராதவனுக்கு ஜில்லா ஒரு கண்காட்சி. ஜில்லாவிலிருப்பவனுக்கு மாநிலத்தின் தலைநகர் கண்காட்சியாகும். தலைநகரில் இருப்பவனுக்கு பம்பாய்-லண்டன் போன்ற பெரிய நகரங்கள் கண்காட்சியாகும். இம்மாதிரி பெரிய நகரங்களைப் பார்ப்பதும் ஒரு கண்காட்சி போன்றுதான் ஆகும்.
ரயிலைவிட்டு இறங்கி வண்டியில் ஏறி, தாஜ்மகால் ஓட்டலில் இறங்கித் தங்கிவிட்டு வந்தால் விஷயம் தெரியாது. விஷயம் தெரியவேண்டுமென்றால் வீதியில் நன்றாகத் திரிய வேண்டும்.
அப்போதுதான் அந்நாட்டு மக்கள் என்ன கருதுகிறார்கள், அவர்களது நிலை என்ன- வாழ்க்கைமுறை எப்படி என்பவைகள் தெரியும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற பல நாடுகளை சுற்றிப் பார்த்தவன் பி.ஏ. படிப்பாளிக்குச் சமமாகும். வேண்டுமானால் இங்கிலீஷ் பேச எழுத காலேஜில் பயிலவில்லை எனலாம். ஆனால் இந்தச் சுற்றுப்பயணத்தில் தானாவே சிறிது சிறிதாக அந்த அறிவும் ஏற்பட்டுவிடும்” என்ற பெரியார், ஐரோப்பிய நாடுகளின் பல வீதிகளில் சுற்றினார்.
மக்களை சந்தித்தார். பல புதிய இடங்களுக்கு சென்றார். மற்றவர்கள் செல்லத் தயங்கும்- சென்றாலும் சொல்லத் தயங்கும் நிர்வாண சங்கத்திற்குப் பெரியார் சென்றார். (மேலும்)
-கோவி.லெனின்
சமோசா காதலால் மோதல்!
கணவர் சமோசா வாங்கி வராததால் ஏற்பட்ட வாய்த்தகராறு அடி தடியில் முடிவடைந்தது. இது தொடர்பாக மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது உத்தர பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேசம் பிலிபித் பகுதியில் உள்ள அனந்த்பூரைச் சேர்ந்தவர் சிவம் குமார். இவரது மனைவி சங்கீதா. கடந்த மாதம் 30-ம் தேதி அன்று சிவம் குமாரிடம் சமோசா வாங்கி வரும்படி சங்கீதா கூறியுள்ளார்.
ஆனால், சிவம் குமார் வெறும் கையுடன் வீடு திரும்பியுள்ளார்.

இது குறித்து சிவம் குமாரிடம் சங்கீதாவின் பெற்றோர் கேள்வி எழுப்பினர். இதற்கு சிவம் குமார் கோபத்தில் பதில் அளித்ததால், வாய்த் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. சங்கீதா, அவரது தாய் உஷா, தந்தை ரம்லாடைட், மாமா ராமோதர் ஆகியோர் சிவம் குமார் மீது தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவம் குறித்து சிவம் குமாரின் தாய் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து சங்கீதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். காயம் அடைந்த சிவம் குமார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
ஒரு சமோசா பிரச்சினையால் ஏற்பட்ட வாய்த்தகராறு, அடிதடியில் முடிந்ததாக பிலிப்பித் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அபிஷேக் யாதவ் தெரிவித்தார்.