அந்நியன்கள்?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அமெரிக்கா, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பேச்சுரிமையை வலியுறுத்தியும் இங்கிலாந்து தலைநகர் லண்டலில் நேற்று முன் தினம் மாபெரும் போராட்டம் வெடித்தது.
வலது சாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில், வலது சாரிகள் ஒன்றிணைந்து நடத்திய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ராஜ்ஜியத்தை ஒன்றுபடுத்துங்கள் – ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்றவர்கள், இங்கிலாந்தில் வெளிநாட்டினர் குடியேற அனுமதிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே குடியேறிய வெளிநாட்டினரை வெளியேற்ற வேண்டும் என்றும் , இங்கிலாந்து அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
ஒரே நேரத்தில் ஒன்றரை லட்சம் வலதுசாரிகள் திரண்டு போராட்டம் நடத்தியதில் லண்டன் நகரம் ஸ்தம்பித்தது. வலதுசாரிகள் ஒன்றிணைந்து போராடுவது இதுவே முதல் முறை என்பதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த போராட்டம்.

இந்த போராட்டத்திற்கு போட்டியாக, ஸ்டண்ட் அப் டு ரேசிசம் குழுவால் ‘பாசிசத்திற்கு எதிரான அணிவகுப்பு’ எனும் போராட்டமும் நடந்தது. இரு குழுவினருக்கும் இடையே மோதலும் வெடித்தது.
இங்கிலாந்தில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், நடப்பாண்டில் 28ஆயிரம் பேர் சட்டவிரோதமாக படகுகள் மூலம் இங்கிலாந்தில் குடியேறி இருக்கிறார்கள் என்பதால், ’’எங்கள் நாட்டை திரும்ப பெற விரும்புகிறோம்’’ என்ற முழக்கத்துடன் இந்த போராட்டம் வெடித்துள்ளது.

‘யுனைட் தி கிங்டம்’ போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பிரான்சின் தீவிர வலதுசாரி அரசியல் பிரமுகர் எரிக் செம்மூர், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் இருவரும் வீடியோ கான்பரன்ஸ் வழியாக பேசி ஆதரவு தெரிவித்தனர்.
’’நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும். நாடாளுமன்றத்தை கலைத்து இங்கிலாந்தில் அரசாங்கத்தை மாற்ற வேண்டும். தேர்தலுக்காக அடுத்த நான்காண்டுகள் இங்கிலாந்து காத்திருக்க முடியாது’’ என்று போராட்டக்காரர்களுக்கு ஊக்கம் தந்தார்.
இடதுசாரி கட்சி கொலைகார கட்சி என்று சொன்ன மஸ்க், இடது சாரிகளிடம் வன்முறைதான் உள்ளது. அமெரிக்காவில் பழைமைவாத ஆர்வலர் சார்லி கிர்க் கொல்லப்பட்டதை இடதுசாரிகள் வெளிப்படையாக கொண்டாடுகிறார்கள். புரிந்துகொள்ளுங்கள் மக்களே’’ என்று பேசியது தங்கள் போராட்டத்திற்கான முன்னேற்றம் என்று நெகிழ்ந்துள்ளார் ராபின்சன்.

போராட்டத்தின் போது எல்லை மீறியவர்களை தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் உண்டாகியதில், போலீசார் மீது தண்ணீர் பாட்டிலை வீசி அத்துமீறியதில் 26 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். பதிலுக்கு போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். 25 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறார்கள்.
இலங்கை, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் இங்கிலாந்தில் நிறைய பேர் வசித்து வருகிறார்கள்.
லண்டன் போராட்டம் அவர்களை பதைபதைக்க வைத்திருக்கிறது. இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி தாக்குதல் அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், வலது சாரியினர் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளது இலங்கை, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் அச்சமடைந்துள்ளனர்.

ஆனாலும் இங்கிலாந்து பிரதமரின் பேச்சு அவர்களுக்கு ஆதரவைத் தந்திருக்கிறது. இந்தப் போராட்டம்
குறித்து இங்கிலாந்து பிரதமர் கெயர் ஸ்டார்மர், ‘’நமது நாட்டின் கொடி பன்முகத்தன்மையை குறிக்கிறது. சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் மரியாதை அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நாடு பிரிட்டன்.
ஆதலால் இன ரீதியான மிரட்டலை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அதே நேரம் நமது நாட்டின் மதிப்புகளுக்கு தகுந்தபடி அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உண்டு’’ என்று தெரிவித்திருக்கிறார்.
பிரதமரின் இந்த பேச்சு புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலைத் தந்திருக்கிறது.
உலகம் சுற்றும் திராவிடம்-13.
-கோவி.லெனின்
“மிஸ்டர் ஈ.வி.ராமசாமி.. உங்க மேல பிரிட்டிஷ் போலீசார் கண் வச்சிட்டாங்கன்னு நினைக்கிறோம்” என்றார்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள்.
“தெரியும்.. உரிமைக்காகப் போராடுவதை அதிகாரம் விரும்பாது. நீங்க இங்கே போராடுறீங்க. நான் உங்ககூட சேர்ந்திருக்கேன். எப்படி கண்காணிக்காம இருப்பாங்க?”-பெரியார் கேட்டார்.
பெரியார் தன்னுடைய ஐரோப்பிய பயணத்தில் அரசாங்கத்தைச் சேர்ந்த ஆட்களை சந்தித்ததைவிட, முற்போக்கு அமைப்புகள், சுதந்திர சிந்தனையாளர்கள், கம்யூனிஸ்ட்டுகள் போன்றவர்களுடன்தான் அதிக நேரத்தை செலவிட்டார்.
ரஷ்யாவில் கம்யூனிச அரசாங்கம் அமைந்தபிறகு, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு கம்யூனிஸ்ட்டுகள் மீது கண் வைத்திருந்தன. அவர்களை சந்திப்பவர்களும் கண்காணிக்கப்பட்டனர். பெரியார் தன் பயணத்தின் நோக்கம் என்னவோ அதன்படி நடந்துகொண்டு, அந்தந்த நாட்டின் சட்டத்தை மதித்தே செயல்பட்டார்.
ஜெர்மனியில் 10 லட்சம் நாத்திகர்கள் அப்போது இருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. தங்களுக்கென அமைப்பை உருவாக்கி பகுத்தறிவு பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிலும் கத்தோலிக்க கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறி பகுத்தறிவு சிந்தனையுடனும் கடவுள் மறுப்புக் கொள்கையுடனும் வாழ்கிறவர்கள் அடிக்கடி சந்தித்து வந்தார்கள். கிட்டதட்ட 20 லட்சம் பேர் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறி விட்டதாக பத்திரிகைகளில் வெளியான ஆய்வுக் கட்டுரை, ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்களை அதிர வைத்திருந்தது.
ஸ்பெய்ன் நாட்டுக்குச் சென்றிருந்த பெரியார் அங்கு பல தேவாலயங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருப்பதையும், மதகுருமார்கள் தங்களின் ஆதிக்கப்பிடிமானம் தளர்ந்து போய்விட்டதாகக் கவலைப்படுவதையும் அங்கு நடந்த பகுத்தறிவாளர் கூட்டங்கள் மூலம் அறிந்தார். ஆஸ்திரியா நாட்டில் உலக நாத்திகர்களின் தலைமை ஸ்தாபனம் உருவாகவும், செக்கோஸ்லோவேகியாவில் உலக நாத்திகர்கள் மாநாட்டைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதை பெரியார் அறிந்தார்.
ஐரோப்பிய நாடுகள் தங்களின் பழமைமிக்க மதச் சடங்குகளைப் பின்பற்றுவோரைத் தக்கவைக்க பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தன. ஐரோப்பிய கள நிலவரத்தைப் பெரியாரால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.
ஐரோப்பிய பெண்கள் அமைப்பினர் பெரியாரைப் பேச அழைத்தார்கள். இந்திய சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி கேட்டார்கள்.
“எங்கள் நாட்டில் இந்து சம்பிரதாயப்படி பெண் என்பவர் இழிபிறவி. போன ஜென்மத்துல அவங்க செஞ்ச பாவ காரியத்தாலதான் இந்த ஜென்மத்துல பெண்ணாகப் பிறந்திருக்காங்க அப்படிங்கிறது சாஸ்திர விதி. ஒரு குடும்பத்துல எத்தனை பெண் குழந்தைகள் இருந்தாலும், ஒரு ஆண் குழந்தைகூட இல்லைன்னா அந்தக் குடும்பத்தை பிள்ளையில்லாத வீடுன்னுதான் எங்க நாட்டுல சொல்லுவாங்க.
ஒரு வீட்டில் எல்லாரும் சோகமா இருந்தாங்கன்னா, பொம்பள புள்ள பொறந்த வீடு மாதிரி ஏன் எல்லாரும் மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்கன்னு கேப்பாங்க” என்று பெரியார் சென்னபோது ஐரோப்பிய வெள்ளைக்காரப் பெண்கள் அவரிடமிருந்து மேலும் எதிர்பார்த்தார்கள்.

“புருசன் எத்தனை பொஞ்சாதி வேணும்னாலும் வச்சிக்கலாம். பொண்டாட்டி அவன் நினைப்புலதான் வாழணும். மேல்நாட்டுல இருக்கிற மாதிரி கல்யாணத்தை ரத்து செய்ய முடியாது. குடும்ப சொத்திலும் பெண்களுக்கு பங்கு கிடையாது. புருசன் சொத்திலும் உரிமை கிடையாது. கணவன் இறந்துபோய்விட்டால், மனைவி இளம் வயதில் இருந்தாலும் இன்னொரு கல்யாணத்தை நினைச்சுப் பார்க்க முடியாது. விதவைக்கோலத்தில் உட்காந்திருக்கணும். பத்திய சாப்பாடுதான் அளவா கிடைக்கும். நல்ல உடுப்பு, புஷ்பம், வாசனை திரவியம் எதுவும் பயன்படுத்த முடியாது” என்று இந்தியாவில் அன்றைக்கு இருந்த பெண்களின் நிலையை ஐரோப்பிய பெண்கள் கூட்டத்தில் பெரியார் சொன்னதுடன், இதை மாற்றுவதுதான் சுயமரியாதை இயக்கத்தின் வேலைத்திட்டம் என்பதை விளக்கினார்.
ஏறத்தாழ 25 நாட்கள் இங்கிலாந்தில் இருந்த பெரியாருக்கு போலீசின் நெருக்கடி அதிகமானது. பெரியாரின் ஐரோப்பிய பயணம் நிறைவு கட்டத்தில் இருந்தது.
அவர் மிகவும் விரும்பி பார்க்க ஆசைப்பட்ட சோவியத் யூனியன் எனும் ரஷ்யாவில் ஏற்கனவே மூன்று மாத காலம் தங்கிவிட்டார். அதுதான் இந்த பயணத்தின் உச்சம்.
(சுற்றும்)
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்