எதிர்வரும் கொடும் அபாயம்.
அதிமுக தொடங்கியபோது, தன்னுடைய கொள்கை அண்ணாயிசம் என்றார் எம்.ஜி.ஆர்,. அதை பழனிசாமி அடிமையிசம் என மாற்றி, இப்போது அமித் ஷாவே சரணம் என்று மொத்தமாக சரண்டராகிவிட்டார்” - முதல்வர் ஸ்டாலின்


தற்போது அமல்படுத்தப்படும் E20 திட்டத்திற்கு கரும்பிலிருந்து 55 சதவிகிதம் எத்தனாலும், அரிசி போன்ற தானியங்களிலிருந்து 45 சதவிகிதம் எத்தனாலும் எடுக்கப்போவதாக மோடி அரசு கூறியுள்ளது.
ஏற்கெனவே, இத்திட்டதிற்காக 2024-2025ஆம் ஆண்டில் 52 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை மோடி அரசு ஒதுக்கியுள்ளது.
பெட்ரோலில் எத்தனால் கலக்கும் “E20” என்ற திட்டத்தை பாசிச மோடி அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலில் 800 மி.லி பெட்ரோலும், 200 மி.லி எத்தனாலும் கலக்கப்படும்.
பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டமானது, ஏற்கெனவே இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.
2003-ஆம் ஆண்டில் 5 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோல் சோதனை முயற்சியில் சில மாநிலங்களில் மட்டும் விற்கப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு 2014 இலிருந்து 2022 வரை எட்டு ஆண்டு காலத்திற்குள் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு 10 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இப்போது நாம் பயன்படுத்தும் பெட்ரோல் E10 பெட்ரோல்தான்.
இந்நிலையில், தற்போது 2026-க்குள் E20 திட்டத்தை நிறைவேற்றி விடுவோம் என்றும், 2030-க்குள் E30 திட்டத்தைக் கொண்டு வருவதை இலக்காக வைத்துள்ளோம் என்றும் ஒன்றிய அரசு கூறுகிறது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு இரண்டு முக்கிய காரணங்களைக் கூறுகிறது. முதல் காரணம், இந்தியா உலகிலேயே அதிகளவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது. மொத்த எண்ணெய் தேவையில் 85 சதவிகிதத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது.
எனவே, பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலந்தால், இந்த கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க முடியும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. இரண்டாவது காரணம், பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் உலக வெப்பமயமாதலுக்கு காரணமான கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறுகிறது.
ஆனால், மோடி அரசின் எந்தவொரு நடவடிக்கைக்கு பின்னாலும் அதன் காவி – கார்ப்பரேட் நலன் அடங்கியிருப்பது போல E20 திட்டத்திற்கு பின்னணியிலும் கார்ப்பரேட் சேவையே பிரதானமாக உள்ளது. குறிப்பாக, ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் மகன்கள் இருவரும் எத்தனால் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
நிதின் கட்கரி மகன் நிகிலுக்குச் சொந்தமான சியான் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் வருவாய் ஜூன் 2024-இல் ரூ.18 கோடியாக இருந்தது. ஆனால், ஜூன் 2025-இல் சுமார் ரூ.523 கோடியாக உயர்ந்துள்ளது. இதிலிருந்தே இத்திட்டம் யாருடைய நலனை மையப்படுத்திக் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
அதேபோல், இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் தரவுகளின் படி, 2014 முதல் 2025 வரை, பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் ரூபாய் 1.44 லட்சம் கோடி அந்நியச் செலாவணியைச் சேமித்துள்ளதாக ஒன்றிய அரசு கூறுகிறது.
ஆனால், மோடி அரசின் இந்த E20 திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணவுப்பாதுகாப்பும் கேள்விக்குள்ளாக்கப்படும்.
எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் கரும்பிலிருந்துதான் அதிகமாகத் தயாரிக்கப்படுகிறது.
கரும்பை நொதிக்க வைத்து அதிலிருந்து எத்தனால் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.
இந்த வழிமுறையில் எத்தனால் தயாரிப்பதற்குத் தாமதமாகும் என்பதால், கரும்பு சாற்றில் ஈஸ்ட் கலந்து அதிலிருந்தும் எத்தனால் பிரித்தெடுக்கப்படுகிறது. கரும்பில்லாமல் அரசி, சோளம் ஆகிய தானியங்களிலிருந்தும் எத்தனால் தயாரிக்கப்படுகிறது.
குறிப்பாக, 2013-இல் 38 கோடி லிட்டர் எத்தனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2021-2022ஆம் ஆண்டில் எத்தனால் உற்பத்தி 433.6 கோடி லிட்டராகவும் 2023-2024ஆம் ஆண்டில் 707 கோடி லிட்டராகவும் உயர்ந்துள்ளது. இந்த பதினெட்டு மடங்கு அதிக உற்பத்தி எவ்வாறு சாத்தியமானது?
ஏற்கெனவே கூறியபடி, அதிகளவு எத்தனால் கரும்பிலிருந்து (சுமார் 80 சதவிகிதம்) தயாரிக்கப்படுகிறது. மீதமுள்ள சுமார் 20 சதவிகிதம் எத்தனால் அரிசியிலிருந்தும், சோளம் உள்ளிட்ட தானியங்களிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.
மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எத்தனால் உற்பத்திக்காக இந்திய உணவுக் கழகத்தின் கிடங்கிலிருந்து குறைந்த விலையில் அரிசியை மோடி அரசு விற்று வந்துள்ளது. இந்த ஒன்பது ஆண்டுகளில் எத்தனால் உற்பத்தி 10 மடங்கு அதிகமாகியுள்ளதற்கு இது முக்கிய காரணமாகும்.
இந்தியா என்பது வறுமை, பசி நிறைந்த மக்கள் வாழக்கூடிய நாடு. உலகப் பசிக் குறியீட்டில் உள்ள 127 நாடுகளில், இந்தியா 105வது இடத்தில் உள்ளது. இச்சூழலில் உணவுக் கழக கிடங்கிலிருந்து பொது விநியோக முறை மூலம் ஏழை எளிய மக்களுக்குச் செல்ல வேண்டிய இவ்வளவு டன் அரசியை கார்ப்பரேட்டுகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளார்கள்.
இந்நிலையில், தற்போது அமல்படுத்தப்படும் E20 திட்டத்திற்கு கரும்பிலிருந்து 55 சதவிகிதம் எத்தனாலும், அரிசி போன்ற தானியங்களிலிருந்து 45 சதவிகிதம் எத்தனாலும் எடுக்கப்போவதாக மோடி அரசு கூறியுள்ளது.
ஏற்கெனவே, இத்திட்டதிற்காக 2024-2025ஆம் ஆண்டில் 52 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை மோடி அரசு ஒதுக்கியுள்ளது.
அப்படியென்றால் E20 முழுமையாக நிறைவேற்றும்போதும், E30 இலக்கை நோக்கிப் போகும்போதும் என்னவாகும் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. இன்னும் பல மடங்கு தானியங்கள் உணவுக்கான அடிப்படையிலிருந்து திசைதிருப்பி எத்தனாலுக்காக கொடுக்கப்படும்.
இந்நிலையானது இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை மிகப்பெரிய கேள்விக்குறியாக்கும்.
மேலும், எத்தனால் தயாரிப்பதற்காக இந்தியாவில் இருக்கும் மொத்த நிலத்தில் 10-இல் 1 பங்கு நிலத்தை கரும்பு பயிரிடுவதற்காக ஒதுக்க வேண்டியிருக்கும். இதனால் உணவு தானியங்கள் பயிரிடுவதற்கான பரப்பு பெரிய அளவு குறையும். உணவுப் பொருள் உற்பத்தி குறையும். இதனால், ஏழை மக்களுக்கு உணவுப் பொருள் கிடைக்காத நிலையும், தேவை அதிகமாகி உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகமாகும் வாய்ப்பும் உருவாகும்.
ஐ.இ.இ.எஃப்.ஏ (IEEFA) நிறுவனம் ஆய்வின்படி, உணவுப் பொருட்கள் விளைவிக்கப்படுகின்ற 30,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை எத்தனால் உற்பத்திக்காக ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதேபோல், கரும்பு என்பது நீர் அதிகம் தேவைப்படும் ஒரு பயிர்.
எத்தனால் பயன்பாட்டுக்காக கரும்பு அதிகம் பயிரிடும்போது நாடு முழுக்க நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்படும். நிதி ஆயோக் அறிக்கையின்படி, ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 2,860 லிட்டர் நீர் தேவைப்படும்.
1,700 கோடி லிட்டர் எத்தனாலை கொள்முதல் செய்யும் திட்டம் ஒன்றிய அரசிடம் உள்ள நிலையில், 48,62,000 கோடி லிட்டர் தண்ணீர் இதற்காக தேவைப்படும். அதாவது, 1,716 டி.எம்.சி நீர் தேவைப்படும்.
அதேபோல் சோள உற்பத்தியில் 34 சதவிகிதம் எத்தனால் உற்பத்திக்காகத் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், சோள இறக்குமதியை அதிகப்படுத்த வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கப்போவதாக ஒன்றிய அரசு கூறுகிறது. அதாவது, E20 திட்டம் மூலமாக 50 சதவிகிதம் கார்பன் மோனாக்சைடை குறைக்கப்போவதாகவும், 20 சதவிகிதம் ஹைட்ரோகார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கப் போவதாகவும் கூறுகிறது.
ஆனால், எத்தனாலிலிருந்து நைட்ரஸ் ஆக்சைடு அதிக அளவில் வெளியேறுகிறது. இது குறித்து ஆராயும் வல்லுநர்கள், E20 மூலம் 5 சதவிகிதம் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைத்தாலே பெரிய விசயம் என்று கூறுகின்றனர்.
அதாவது, 5 சதவிகித பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதற்காக, நம்முடைய நம் நாட்டின் உணவுப் பாதுகாப்பில் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி வரும் என்பதுதான் மேற்கண்ட செய்திகள் உணர்த்தும் உண்மை.
அதேபோல், எத்தனால் தயாரிப்பின்போது அதிகளவு அளவில் வெப்பம் வெளியேற்றப்படும் நிலை உள்ளது. இது வெப்பமயமாதலை மேலும் அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது. அப்படியென்றால், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கிறோம் என்ற ஒன்றிய அரசின் வாதம் இங்கே முழுவதுமாக அடிபட்டுப் போகிறது.
அடுத்து முக்கியமான விசயம், எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு ஏற்படும் ஆபத்து. எத்தனால் வாகன எஞ்சினில் ஒருவித அரிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அதேபோல், எத்தனால் ஆவியாவதற்கு நேரம் பிடிக்கும் தன்மை கொண்டது.
இதனால், நீண்ட நாட்கள் வாகனத்தைப் பயன்படுத்தாமல் விட்டு மீண்டும் பயன்படுத்தத் தொடங்கும்போது வாகனமானது ஒத்துழைக்காமல் போகும் வாய்ப்புள்ளது.
அதேபோல் E20 பயன்படுத்துவதால், நான்கு சக்கர வாகனங்களுக்கு 6–7 சதவிகிதம் வரையிலும், இரு சக்கர வாகனங்களுக்கு 3-4 சதவிகிதம் வரையிலும் மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
அதேபோல் BS4, E5, E10 க்காக உருவாக்கப்பட்ட எஞ்சின் கொண்ட வாகனங்கள் E20 பயன்படுத்தும்போது பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவில் பயன்பாட்டிலிருக்கும் பெரும்பான்மையான வாகனங்கள், BS4 கூட கிடையாது BS3 தான் பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது.
அப்படியென்றால் E20 க்கு ஏற்ப வாகனங்களை மாற்றியமைப்பதற்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுவர்.
வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படுகிற ஐரோப்பிய நாடுகளிலேயே E20 நடைமுறைப்படுத்தப்படவில்லை. E10 முறை வரைதான் வந்துள்ளார்கள். E20 குறித்து பரிசோதனை நிலையில்தான் உள்ளனர்; அதற்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேற்கண்ட செய்திகளிலிருந்து தொகுப்பாகப் பார்க்கும்போது, மோடி அரசு கூறும் E20 பயன்பாடு என்பது, மிகப்பெரும் அபாயத்தை நாட்டிற்கு உருவாக்கும் செயல்திட்டமே ஆகும்.
அதாவது, கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்காக இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை மிகப்பெரிய அளவிற்கு கேள்விக்குள்ளாக்கி; வாகனங்களைப் பயன்படுத்துவோரை அதிகபட்ச செலவினங்களுக்குத் தள்ளும் நடவடிக்கை என்பது தெளிவாகிறது.
ஏற்கெனவே ரசியாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கினாலும் உள்நாட்டில் பெட்ரோல் விலை குறையவில்லை. இதில், அம்பானிதான் பெரிய அளவில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், E20 திட்டம் கொண்டு வருவதால் பெட்ரோல் விலை குறையும் என்றும் எதிர்பார்க்க முடியாது.
மொத்தத்தில் E20 என்பது அதானி, அம்பானி வகையறா கார்ப்பரேட்டுகள், எத்தனால் உற்பத்தி என்ற பெயரில், நாட்டின் நிலங்களைக் கொள்ளையடிக்கவும், வளங்களைச் சூறையாடவும், உழைக்கும் மக்களை மென்மேலும் சுரண்டிக் கொழுக்கவும், உணவுப் பாதுகாப்பை அழித்து கோடிக்கணக்கான இந்திய மக்களை மரணத்தை நோக்கித் தள்ளும் ஏற்பாடேயன்றி, வேறு எதுவும் கிடையாது.
-அய்யனார்