உலகம் சுற்றும் திராவிடம்


2,

 அண்ணாவின் அந்தக் கோரிக்கையை கேட்டு போப் ஐந்தாம் பால் தன் புருவங்களை உயர்த்தினார். கோவாவின் விடுதலைக்காக பாடுபட்டு, போர்ச்சுகல் நாட்டு சிறையில் இருக்கும் மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் அண்ணாவின் கோரிக்கை.


மோகன் ரானடேவை அண்ணா நேரில் பார்த்தது கிடையாது. அண்ணா யார் என்று கூட மோகன் ரானடேவுக்கு தெரியாது.

ரானடே, பகுத்தறிவு-முற்போக்கு  சிந்தனையாளரல்ல. சாவர்க்கர் போன்ற வலதுசாரிகளின் அரசியலால் ஈர்க்கப்பட்டவர்.

வழியும் சிந்தனையும் மாறுபட்டிருந்தாலும், தன் மண்ணின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஒருவர், அந்த மண் விடுதலை பெற்ற பிறகும், அதனை அடிமைப்படுத்தி வைத்திருந்த அந்நிய நாட்டின் சிறையில் இருப்பது நியாயமுமல்ல, மனிதாபிமானமுமல்ல என்பதே அண்ணாவின் எண்ணம்.


போர்ச்சுகல் நாடு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் நாடு என்பதால்,போப் சொன்னால் போர்ச்சுகல் அரசு நிச்சயம் கேட்கும் என்பதை உணர்ந்தே அண்ணா அந்த கோரிக்கையை வைத்தார் .


சில மாதங்கள் கழித்து போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பன் அருகே உள்ள சிறைச்சாலையில் இருந்து ரானடி விடுதலை செய்யப்பட்டார். 

ஏறத்தாழ 16 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பிறகு இந்தியாவுக்கு திரும்பியவரை அடைய பிரதமர் இந்திரா காந்தி டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார். 


"உங்கள் கோவாவுக்கு நீங்கள் போவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன” என்றார் பிரதமர். அப்போது ரானடே, “நான் முதலில் மெட்ராஸ் போக விரும்புகிறேன்” என்றார். இந்திராகாந்தி ஆச்சரியத்துடன் பார்த்தார். ரானடேவோ, “என்னுடன் இருந்தவர்கள் கூட என்னை மறந்தவிட்ட நிலையில், என் விடுதலைக்காக போப்பிடம் வலியுறுத்தி, இந்த விடுதலையை சாத்தியமாக்கிய முதலமைச்சர் அண்ணாதுரையைப் பார்க்க வேண்டும்” என்றார்.


இந்திராகாந்தி சற்று துயரமான குரலில், “அண்ணாதுரையை நீங்கள் பார்க்க முடியாது.  உடல்நலன் பாதிக்கப்பட்டு அவர் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்” என்றார். ரானடே கலங்கியபடி 

சென்னைக்கு வந்தார். அண்ணா புதைக்கப்பட்ட கடற்கரை சதுக்கத்தில் கதறிய ரானடே, தன் விடுதலைக்கு காரணமான  அண்ணா எனும் முகமறியா மாமனிதருக்கு கண்ணீரால் நன்றி செலுத்தினார்.


அமெரிக்கா செல்லும் வழியில் வாடிகன் நகரில் கிடைத்த சில மணித்துளிகள் சந்திப்பில் பெரும் காரியத்தைச் செய்தவர் அண்ணா. அதனால்தான் அவர் பேரறிஞர்.

                         -கோவி.லெனின்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி