கப்பல் பயணத்தில்!
உலகம் சுற்றும் திராவிடம்.-24.
-கோவி.லெனின்
1929ஆம் ஆண்டு மலேயாவுக்கு புறப்படுவதற்கு முன்பு வரை பெரியாருக்கு பெரிய மீசை இருந்தது. மலேயாவுக்குப் போய் திரும்பிய கப்பல் பயணத்தில், ஷேவிங் செய்து கொள்வதற்காக பெரியார் போனபோது, அவரைப் போலவே பல ஆண் பயணிகள் காத்திருந்தனர்.
ஷேவிங் செய்வதற்கு பெரிய க்யூ இருந்தது. நீண்ட நேரமாகும் எனத் தெரிந்தது. எதற்காக நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று கப்பலில் தன் இடத்திற்குத் திரும்பி, புத்தகங்கள் படிப்பது, மலேயா நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுவது என்று தன் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடத் தொடங்கினார்.
ஷேவிங் செய்யப்படாத முகத்தில் தாடி வளரத் தொடங்கியது. தமிழ்நாட்டுக்குத் திரும்பிய பிறகு அதுவே அவருக்குப் பொருத்தமாகிவிட்டது. அதன்பின் தாடியும் தடியும் பெரியாரின் அடையாளங்களாயின. இன்றைய மியான்மர் அன்றைய பர்மா. அங்கே தமிழர்கள் அதிகளவில் இருந்தனர். 1954ஆம் ஆண்டு உலக புத்த மத மாநாடு அங்கே நடைபெற்றது. பெரியார் அதில் கலந்து கொண்டார்.
அவருடன் அன்னை மணியம்மையாரும் பயணித்தார். புத்த மத மாநாட்டில் அண்ணல் அம்பேத்கரும் கலந்து கொண்டார். பெரியாரும் அம்பேத்கரும் சந்தித்து உரையாடினர். பர்மா புத்த மாநாட்டுக்குப் பயணித்த பெரியார் அங்கே இரண்டு வாரங்கள் தங்கியிருந்தார். அங்கிருந்த தமிழர்களை சந்தித்து, வழக்கமான தன்னுடைய பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
பர்மா தலைநகர் ரங்கூனிலிருந்து 11-12-1954 அன்று சங்கோலா என்ற கப்பலில் மீண்டும் மலேயாவுக்குப் புறப்பட்டார். ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பிறகு மலேயா தமிழர்கள் பெரியாரை வரவேற்க ஆர்வமாகத் திரண்டிருந்தனர். 14-12-1954 அன்று அவர் மலேயா சென்றார். முதல் முறை பரப்புரை செய்தது போலவே பினாங்கு, ஈப்போ, சிங்கப்பூர் உள்ளிட்ட பல இடங்களிலும் பெரியார் பல கூட்டங்களில் கலந்து கொண்டார்.
அவர் பங்கேற்ற இடங்களில் வாழ்த்து மடல்கள் வாசித்து அளிக்கப்பட்டன. தமிழர்களின் அன்பை ஏற்றுக்கொண்ட பெரியார் அவர்களிடம் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டார். “போனமுறை நான் இங்கு வந்தபோது பார்த்ததைவிட, மக்களிடம் இப்போது முன்னேற்றம் தெரிகிறது. நம்ம கடவுள்களின் யோக்கியதை பற்றி எடுத்துச் சொன்னேன். இங்கே உள்ள மக்கள் சம்பாதித்த பணத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் கட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.
இங்கே வாழ்கிற சீன சமுதாயத்தினர் பள்ளிக்கூடங்களைக் கட்டி தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். அவர்களைப் போல நம்ம பிள்ளைகளுக்கும் கல்வியைத் தரணும். அவர்களிடமுள்ள கட்டுப்பாடு நம்மிடம் இருக்க வேண்டும்” என்று பெரியார் வலியுறுத்தினார். தமிழர்களிடம் அவர் பேசிய இடங்களில் எல்லாம் ஒற்றுமையுணர்வுடன் கட்டுப்பாடு வேண்டும் என்பதையும் அழுத்தமாகச் சொன்னார்.
பாகோ என்ற எஸ்டேட்டை பார்வையிட்டு, மூவார் பகுதிக்கு பெரியார் திரும்பிக் கொண்டிருந்தார். புக்கிட் பாசிரில் அவரது கார் மறிக்கப்பட்டது. சொக்கலிங்கம் என்ற மலேயா தமிழ் வணிகர்தான் மறித்தார்.
பெரியாரை தன்னுடைய மண்டிக்கு வரவேண்டும் என அழைத்தார். ஈரோட்டில் பெரிய மண்டியை நடத்தியவராயிற்றே பெரியார். பொதுத் தொண்டுக்கு வந்த பிறகு வியாபாரத்தை விட்டுவிட்டாலும், அந்த அனுபவம் மறந்து போகுமா? சொக்கலிங்கத்தின் மண்டிக்குச் சென்றார். “வெங்காயம் விலை எங்க நாட்டைவிட அதிகமா இருக்குது. புளி விலை பல மடங்கு குறைவா இருக்கு. இந்தோனேசியாவிலிருந்து புளி வருதா?” என்று பெரியார் கேட்டபோது, சொக்கலிங்கமும் உடனிருந்தவர்களும் ஆச்சரியப்பட்டனர்.
கடையில் இருந்த சரக்கு ஒவ்வொன்றின் தரம், விலை, மக்களின் பயன்பாடு எல்லாவற்றையும் கேட்டறிந்தார் பெரியார். அவரே வியாபாரமும் செய்தார். பொருளை எடை போடுகிற நேரத்தில், மக்களின் வாழ்க்கையையும் எடை போட்டார். பிறகு அவர்களிடம் பேசும்போது, “நம் நாட்டை ஒப்பிடும்போது இங்கே பல பொருட்களோட விலை குறைவாகத்தான் இருக்குது. நம்ம நாட்டு மக்களோட கூலியைப் பார்க்கும்போது, இங்கே நம்ம மக்கள் வாங்குற கூலி கொஞ்சம் கூடுதலாத்தான் இருக்கு.
அப்படியிருந்தும் சிக்கனமா இருந்து சேமிப்பது குறைவாகத்தான் இருக்கு. தேவைக்கு வேண்டியதை செலவு பண்ணிட்டு, மிச்சத்தை சேமித்து வைக்கணும்” என்று கணக்காக அறிவுரை வழங்கினார். பல இடங்களில் பெரியாரிடமும் மணியம்மையாரிடமும் தமிழர்கள் ஆட்டோகிராஃப் கேட்டு வாங்கினர்.
மலேயா தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையையும், அவர்களின் உழைப்பையும் பாராட்டிய மணியம்மையார், பெண்களிடம் உள்ள மூடநம்பிக்கைகளை விளக்கி, பகுத்தறிவு சிந்தனையுடன் முன்னேற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இரண்டாவது பயணத்திலும் மலேயா மக்களிடம் விழிப்புணர்வை விதைத்துவிட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பினார். பெரியார் பரப்புரைகள் உழைக்கும் மக்களான மலேயா தமிழர்களிடம் பகுத்தறிவு சிந்தனையை மேம்படுத்துவதைப் பார்த்து சனாதனக் கூட்டம் அதிர்ந்தது. 75 வயது பெரியாருக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆன்மிகத் தரப்பில் யாரை பேச அனுப்புவது என்று ஆலோசித்தனர். “அவரை அனுப்பலாமே?” என்றார் ஒருவர். “அவரா? ரொம்ப சின்ன வயசா இருக்காரே?” என்றார் இன்னொருவர். “சின்ன வயசுதான். ஆனா பெரியாருக்கு பதில் கொடுக்க அவர்தான் சரியா இருப்பாரு” என்றார் மற்றவர். பெரியார் எங்கெல்லாம் பிரச்சாரம் செய்தாரோ அங்கெல்லாம் அந்த இளம் சாமியாரை அனுப்பினர். அந்த சாமி யார்? (சுற்றும்)கல்வியில் சிறந்தது....?
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ’கல்வியில் சிறந்த தமிழ்நாடு' விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இணைந்து ’கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'அரசு உருவாக்கித் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாணவர்கள் உயர உயரப் பறக்க வேண்டும்' என்றும், 'மாணவர்களே நீங்கள் படித்தால் மட்டுமே உங்கள் குடும்பங்கள் முன்னேறும். தொடர்ந்து படியுங்கள், துணையாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்' என்றும் தெரிவித்தார்.
’கல்வியில் சிறந்த தமிழ்நாடு' விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இங்கே பேசிய மாணவர்களின் பேச்சைக் கேட்க கேட்க, நான் மிகவும் எமோஷனல் ஆகிவிட்டேன். ஏனென்றால், உங்களுடைய கருத்துக்களையும், பின்னூட்டத்தையும் கேட்கும்போது, நாம் உழைக்கின்ற உழைப்புக்கான பலன், நம்முடைய கண் முன்னாலேயே தெரிகிறது என்று நான் இங்கே உணர்ந்திருக்கிறேன்; அதற்காக பெருமைப்படுகிறேன்.
எனக்கு முன்னால் பேசிய எல்லோரும், தமிழ்நாடு எந்தளவுக்கு கல்விக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது, எப்படியெல்லாம் திட்டங்களைக் கொண்டு வந்து, எத்தனை இடர்கள் வந்தாலும், தன்னுடைய மாணவர்களை முன்னேற்றுகிறது என்று பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு முக்கியக் காரணம், எங்களை பாராட்டிக் கொள்வதற்காக அல்ல, இன்றைக்கு நாங்கள் உங்களை கொண்டாடுவதை பார்த்து, அடுத்தடுத்து வரவிருக்கும் மாணவர்களும், இன்னும் படிப்பு மீது ஆர்வம் அதிகமாக வேண்டும்.
அதுதான் முக்கியம். அதிலும், மாண்புமிகு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த விழாவுக்கு வந்து, நம்மையெல்லாம் பெருமைப்படுத்தி இருக்கிறார். மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.
கனிமொழி மூலமாக, மாணவர்கள் நிகழ்ச்சி என்று சொல்லி அழைத்ததும், உடனே சரி என்று சொல்லி, பல பணிகளுக்கு இடையிலே இங்கே வந்திருக்கிறார். நம்முடைய அரசின் மகளிர் விடியல் பயணம் திட்டம் போலவே, தெலங்கானா மாநிலத்திலும், மகாலட்சுமி திட்டம் என்கிற பெயரில், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அதேபோல, தெலங்கானா மாநிலத்தில் செயல்படுத்துகின்ற நல்ல திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த நாங்களும் தயாராக இருக்கிறோம். இதுதான் ஆரோக்கியமான ‘வளர்ச்சி’ அரசியல்.
போராட்டங்களில் உருவான தெலங்கானா மாநிலத்தை போராட்டக் குணத்துடன் பாதுகாத்து, இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிரதிநிதியாக அவர் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.
அதற்காக நான் முதலில் அவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே கூடியிருக்கின்ற மாணவ, மாணவியரை பார்க்கும்போது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. மாணவச் செல்வங்களே, நீங்கள் படித்து முன்னேறுவதால், நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குடும்பமும் முன்னேறப் போகிறது; உங்களுடைய அடுத்தடுத்த தலைமுறைகளும் முன்னேறப் போகிறது!
குடும்பங்கள் முன்னேறினால், மாநிலங்கள் முன்னேறும். மாநிலங்கள் முன்னேறினால், நாடு முன்னேறும். அதனால்தான், நாம் தொடர்ந்து கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் கால் முளைத்த சதி. இந்த சமூகத்தை ஆட்கொண்டதால் நம்முடைய கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. வரலாறு நெடுக இந்த ஆதிக்கத்துக்கு எதிராக, கலகம் செய்த புரட்சியாளர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்!
அந்த தொடர்ச்சியின் உச்சமாக திராவிட இயக்கம், தமிழ் மண்ணில் நிகழ்த்திய புரட்சிதான், இன்றைக்கு நாம் இந்தளவுக்கு வேகமாக நடைபோட காரணமாக இருக்கிறது.
அன்றைக்கு, சென்னை மாகாணப் பள்ளிகளில், மதிய உணவுத் திட்டத்தை நீதிக்கட்சி அறிமுகப்படுத்தினார்கள். தொடர்ந்து, பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைவரையும் எப்பாடுபட்டாவது பள்ளிகளுக்கு அழைத்து அவர்களை படிக்க வைக்கவேண்டும் என்ற காரணத்திற்காகதான். அதுதான், படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு கொண்டு வந்திருக்கின்ற காலை உணவுத் திட்டமாக உருப்பெற்றிருக்கிறது.
தொடக்கக்கல்வி முடித்துக் கொண்டு, மேல்நிலைக் கல்விக்கு செல்லக்கூடிய மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று சட்டமன்ற உறுப்பினராக நான் முதன்முதலாக அவையில் எடுத்து வைத்த கோரிக்கையை ஏற்று, இலவச பஸ் பாஸ் திட்டத்தை அன்றைய முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
அடுத்து, தலைவர் கலைஞர் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரிக் கல்விக்கு செல்வதற்கு முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணம் இல்லை என்று சொன்னார்.
அனைத்து சமூகத்தினருக்கும் கல்விச் சாலைகளில் இடம் கிடைக்க, இடஒதுக்கீட்டை உயர்த்தினார்.
இப்படி, ஏராளமான போராட்டங்கள் நிறைந்தது நம்முடைய கல்விப் பயணம்! இந்தப் பயணத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போகத்தான், நம்முடைய திராவிட மாடல் அரசு நான்கு ஆண்டுகளாக புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், மாடல் ஸ்கூல்ஸ், ஸ்மார்ட் வகுப்பறைகள், விளையாட்டுத் துறைக்கு சிறப்பு கவனம் செலுத்தும் திட்டங்கள் என்று ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு வேளை உணவு தருவதாலோ, மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாலோ, 'என்ன பெரிய மாற்றம் வந்துவிடும்?' என்று சிலர் நினைக்கலாம். காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்ததில் இருந்து, மாணவர்களுடைய வருகை அதிகரித்திருக்கிறது.
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்ததில் இருந்து, ப்ளஸ் 2 முடித்த மாணவர்களில் 75 விழுக்காடு மாணவர்கள் உயர்கல்வியில் சேருகிறார்கள். குறிப்பாக, பெண்கள் உயர்கல்வியில் சேருவது அதிக அளவில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது.
அரசுப் பள்ளியில் படித்த ஆயிரத்து 878 மாணவர்கள் கடந்த 4 ஆண்டுகளில், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்கச் சென்றிருக்கிறார்கள். இன்றைக்கு கல்வியில், தமிழ்நாடு பெற்றிருக்கின்ற எழுச்சி, இந்தியாவில் இருக்கின்ற பல மாநிலங்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது!
நம்முடைய திட்டங்களை அவர்கள் மாநிலங்களில் செயல்படுத்த முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் கல்விக்கு தடை ஏற்படுத்தலாம் என்று மத்தியில் நினைக்கிறார்கள். நம்முடைய வளர்ச்சியைப் பார்த்து, ஒதுக்க முடியாமல், தடை ஏற்படுத்துகின்ற சிலருக்கு பயத்தை வர வைக்க வேண்டும்.
நிச்சயம் நம்முடைய திட்டங்களாலும், உங்களுடைய சாதனையாலும் அது நடைபெறும். என்னுடைய இலக்கு, அனைவருக்கும் கல்வி. அனைவருக்கும் உயர்தரக் கல்வி. கல்வி நிலையங்களுக்குள்ளே எந்த காரணத்தாலும், எவர் ஒருவரும் வராமல் இருக்கக் கூடாது; தடுக்கப்படக் கூடாது.
மாணவர்களான உங்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான், நம்முடைய அரசு உருவாக்கித் தரக்கூடிய வாய்ப்புக்களை எல்லாம் நீங்கள் பயன்படுத்திக் கொண்டு உயர, உயர பறக்கவேண்டும். அதைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடையவேண்டும். அப்படிப்பட்ட மகிழ்ச்சியைத் தான் இங்கே பேசிய பலர் கொடுத்திருக்கிறீர்கள்.
இனியும் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் இளங்கலை முடித்துவிட்டு வேலைக்குச் சென்றாலும், நல்ல வேலையில் முன்னனியில் சென்று இருந்தாலும், முதுகலையையும் படிக்க வேண்டும். ஆராய்ச்சிப் படிப்புக்கும் செல்ல வேண்டும். உலகம் மிகவும் பெரியது.
உங்களுடைய வெற்றி அனைத்து திசைகளிலும் எதிரொலிக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து படியுங்கள்.
உங்களுடைய படிப்புக்குத் துணையாக உங்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கல்வியிலேயே உயர்ந்த தமிழ்நாடாக மாறவேண்டும்; மாறும்; நிச்சயமாக மாற்றுவோம்." என்று அவர் கூறியுள்ளார்.