பழி போடும் பழனி!
சட்ட விரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு சீல்.
பழிபோடும் பழனிசாமி
தூத்துக்குடியில் அமைதியாக ஊர்வலம் சென்று கொண்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்திக் கலைத்து 13 பேரைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட கொலைபாதகச் செயலுக்குக் காரணமான எடப்பாடி பழனிசாமி, கரூர் விவகாரத்தில் காவல் துறையின் மீது பழிபோடுவது அவரது குரூர அரசியலின் கீழ்த்தரமான புத்தியையே காட்டுகிறது.
“அ.தி.மு.க. அரசாங்கம் இருக்கும் போது பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்திருக்கின்றன, ஒவ்வொரு கூட்டங்களுக்கும் நாங்கள் உரிய பாதுகாப்பளித்தோம்” என்று பேட்டி கொடுத்திருக்கிறார் பழனிசாமி.
13 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியானபிறகு, 'அதை டி.வி.யில் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன்' என்று சிரித்தபடியே சொன்னவர்தான் இந்த பழனிசாமி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் முழு உண்மையை அம்பலப்படுத்திவிட்டது. பழனிசாமிக்குத் தெரிந்தே தான் அந்தக் கொலைகள் அரங்கேற்றப்பட்டதாக அந்த ஆணையமே சொல்லியது.
அறிக்கையின் 2 ஆவது பாகம் - 219 ஆவது பக்கத்தில் இடம் பெற்றுள்ள 252 ஆவது கருத்து இது :
"..... have been updating the Chief Minister Tr. Edapadi K. Palanisamy with minute to minute development which took place in Thoothukudi and as such to say that the then Chief Minister come to know of the shooting only through the media would be incorrect or inaccurate - the Commission would opine” என்று சொல்லி இருக்கிறது அந்த அறிக்கை.

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'அந்த சம்பவத்தை மற்றவர்களைப் போல ஊடகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்து கொண்டேன்' என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஆனால் இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டி.ஜி.பி. ராஜேந்திரன், அப்போதைய உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில்நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்ததாகக் கூறினார்கள். எனவே, ஊடகங்கள் மூலமாகத்தான் அந்தச் சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது தவறான கருத்து என்பது இந்த ஆணையத்தின் கருத்தாகும்”- என்று ஆணையத்தின் அறிக்கை சொல்கிறது. இப்படிப்பட்ட பழனிசாமிதான், இன்று மகா யோக்கியரைப் போல பேட்டி தருகிறார்.
சாத்தான்குளத்தில் தந்தையையும் மகனையும் காவல் நிலையத்தில் வைத்து கொன்று விட்டு, 'உடல் நலக் குறைவால் மரணம்' என்று அறிக்கை விட்டது பழனிசாமியின் அரசு என்பதை மக்கள் மறந்துவிடவில்லை. பென்னிக்ஸ் மூச்சுத் திணறலால் இறந்தார், ஜெயராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்' என்றும் அறிக்கை வெளியிட்டார் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி. அவர்தான் இன்று மகா யோக்கியரைப் போல பேட்டி தருகிறார்.
விஜய் தனது கூட்டத்துக்கு காவல் துறை சொல்லும் எந்தக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவது இல்லை. கூட்டம் கூட்டிக் காண்பிப்பதற்காக நெருக்கமான சாலைகளைக் கேட்பதும், கூட்டம் கூட வேண்டும் என்பதற்காக 8 மணி நேரம் கழித்து வருவதும், சுற்றிலும் மரங்களிலும் வீடுகளின் மேலும், ஆபத்தான மின்விளக்கு கம்பங்களின் மீதும், கோவில் கோபுரங்களின் மீதும் ரசிகர்கள் நிற்பதைப் பார்த்து ரசிப்பதும் என ஒரு கூட்டத்துக்கான எந்த இலக்கணமும் இல்லாமல் தலைக்கனமாக நடந்து கொண்டதன் விளைவு தான் அப்பாவி மக்கள் 41 பேர் மூச்சுத்திணறலால் மரணம் அடைந்த மாபெரும் சோகம் ஆகும். இதில் கூட பழனிசாமி தனது பச்சை சந்தர்ப்பவாத அரசியலைச் செய்கிறார்.
“நான் ஊடகங்களில் பார்க்கின்ற போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. முந்தைய பரப்புரைகளின் போதும் காவல்துறை உரிய பாதுகாப்பை கொடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது” என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி.

சம்பவ இடத்தில் 500 காவலர்கள் இருந்துள்ளார்கள். பத்தாயிரம் பேர் வருவார்கள் என்று சொல்லி இடம் வாங்கிவிட்டு, 27 ஆயிரம் பேரைக் கூட்டியது யார் தவறு? விஜய் கட்சியினர் முன்பு கேட்ட இடம் குறுகலானது என்பதால் பெரிய இடத்தை காவல் துறை கொடுத்துள்ளது. அந்த இடத்தை முறையாகப் பயன்படுத்தாதது யார் தவறு? எட்டு மணி நேரமாக காத்திருப்பவர்களுக்கு தண்ணீர் இல்லை, உணவு இல்லை. வெளியே செல்வதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை. 'நான் வெளியே போகணும்னு சொன்னேன். ஆனால் விட மாட்டேன்னு அவரு கட்சிக்காரங்க சொல்லிட்டாங்க. எங்களை சுத்தி கயிறு போட்டு கட்டிட்டாங்க' என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண் கதறியபடி சொல்கிறார். இதெல்லாம் யார் தவறு?
சந்தடி சாக்கில், தனது கூட்டத்துக்கும் பாதுகாப்பு இல்லை என்று பழனிசாமி சொல்கிறார். பழனிசாமிக்கு கூட்டமே கூடுவது இல்லை. அவரது பச்சை பஸ்ஸை பார்த்தாலே மக்கள் ஓடுகிறார்கள். இவர் பேசத் தொடங்கியதும் மக்கள் கலைகிறார்கள். பெரும்பாலும் காலியான சாலைகளில்தான் பழனிசாமி செல்கிறார்.
பல இடங்களில் அவருக்கு கருப்புக் கொடி காட்டுகிறார்கள். சொந்தக் கட்சிக்காரர்களே கருப்புக் கொடி காட்டுவதாகத்தான் அவரது பயணங்கள் அமைந்துள்ளன. 'இந்தக் கேவலம் தேவையா?' என்பதைப் போலத்தான் பழனிசாமியின் பஸ் பயணங்கள் அமைந்துள்ளன. ஆனாலும் வெட்கமே இல்லாமல், 'எனக்கும் பாதுகாப்பு இல்லை' என்கிறார் பழனிசாமி.
ஒருவேளை காவல் துறையினரை அதிகமாக நிறுத்தி கூட்டம் கூட்டி காட்ட நினைக்கிறாரா பழனிசாமி?