அரசியலுக்கு சரிபட்டு வரமாட்டார்.!
உலகம் சுற்றும்
திராவிடம்.-25.
-கோவி.லெனின்
தோட்டத் தொழிலாளர்கள் நிறைந்த மலேயாவில் சனாதன-வர்ணாசிரமத்தின் வேர்களை அசைத்துவிட்டது பெரியாரின் பரப்புரை. மலேயா ரேடியோ நிலையத்திற்கு பெரியார் நேரடியாக சென்று அங்குள்ள ஒலிப்பதிவுக்கூடம், ஒலிபரப்பும் முறை, ஒலித்தட்டுகள் சேகரிப்பு நிலையம் உள்ளிட்டவற்றை பார்த்தார்.
அவருடைய வருகை குறித்து மலேயா தமிழ் மக்களுக்கு செய்தி விடுக்குமாறு வானொலி நிலைய அதிகாரி கேட்டுக்கொண்டார்.
பெரியார் பேசியதை மலேயா வானொலி ஒலிப்பதிவு செய்தது.
“தமிழ் மக்கள் தங்களிடையே உள்ள மூடப்பழக்க வழக்கங்களையும், சாதி வேற்றுமைகளையும் விட்டொழித்து, மிக்க ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும் அல்லது ஆசையாகும்.
நீங்கள் உங்கள் வருவாயை உங்களுடைய குடும்பத்திற்கும், குழந்தைகளின் கல்விக்கும் செலவழித்தது போக, மீதியை நன்கு சேமித்து எதிர்காலத்தில் சுதந்திரமான வருவாயை ஏற்படுத்திக்கொள்ளத்தக்கத் தொழிலை செய்யக்கூடிய தன்மையைப் பெறவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் பெரியார்.
இரண்டு முறை மலேயா பயணம் மேற்கொண்ட அவருடைய பேச்சின் தாக்கம் பல இடங்களிலும் வெளிப்பட்டது. மூவார் நகரில் வசித்த ரா.ம.தண்ணிமலை செட்டியார் என்பவர் தன் அம்மாவின் மரணத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் புரோகிதர்களை அழைத்து, சமஸ்கிருத மந்திரம் ஓத வைத்து, திதி கொடுப்பது வழக்கம்.
பெரியாரின் பரப்புரையின் தாக்கத்தால் , புரோகிதத்தைத் தவிர்த்து ஏழை மக்களுக்கு சாப்பாடு போட ஆரம்பித்தார். அதுபோலவே முரு.சொக்கலிங்க செட்டியார் என்பவரும், தைப்பிங் நகரில் வசித்த சுருட்டுக்கடை முதலாளி தி.சு.க.வடிவேலு பிள்ளை என்பவரும் தங்கள் தந்தையர் நினைவுநாளில் திதி கொடுக்கும் வழக்கத்திற்குப் பதிலாக ஏழைகளுக்கு உணவளிக்கத் தொடங்கினர். மலேயா தமிழ் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த இவர்கள் இப்படி செய்யத் தொடங்கியது சனாதனக் கூட்டத்திற்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. அதனால்தான் இளம் சாமியார் ஒருவரை மலேயாவுக்கு அனுப்பி பெரியார் பரப்புரை செய்த இடங்களில் பதில் கூட்டங்களைப் போடச் செய்தனர். அந்த சாமியார்தான், குன்றக்குடி அடிகளார். அருள்நெறியுடன் பொதுவுடைமைக் கொள்கையிலும் நாட்டமுடைய அடிகளாரை காஞ்சி மடத்தின் உத்தரவுப்படி சனாதனக் கூட்டம் தனது ஆளாகப் பயன்படுத்தி வந்தது. வெளிநாடுகளிலும் தமிழ்நாட்டிலும் அருள்நெறித் திருக்கூட்டம் என்ற பெயரில் பெரியாரைப் பின் தொடர்ந்து அடிகளார் பிரச்சாரம் செய்தார்.
அவரது பேச்சு பெரியாரின் கவனத்திற்கும் சென்றது. பெரியாருக்கு எதிராக அடிகளார் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் நண்பர்களின் விருப்பம். யார் போய் அடிகளாரை சந்திப்பது என்ற கேள்வியும் இருந்தது. பெரியாரே நேரில் போய் அடிகளாரை சந்தித்தார். ஈரோட்டில் சென்னியப்ப முதலியார் இல்லத்தில் குன்றக்குடி அடிகளார் தங்கியிருப்பதை அறிந்து அங்கு இருவரும் சந்தித்து உரையாடினர். பெரியார் அவரிடம், “எனக்கும் கடவுளுக்கும் என்ன விரோதம்? அவரை நான் பார்த்தது கூட இல்லை. எனக்குத் தேவை மனிதன் மீதுள்ள இழிவு அகற்றப்படவேண்டும். அவ்வளவுதான்” என்றார். “இருவரும் சேர்ந்து உழைப்போம்” என்றார் அடிகளார்.
அதன்பின் பெரியாரும் அடிகளாரும் இணைந்தே பயணித்தனர். எந்த பெரியாருக்கு எதிராக குன்றக்குடி அடிகளாரைத் தூண்டி விட சனாதனக் கூட்டம் நினைத்ததோ, அந்தக் கூட்டத்தின் திட்டம் தவிடுபொடியானது.
பெரியாரிடம் கொள்கைப் பாடம் கற்றவர்களான அண்ணாவும், கலைஞரும் மலேயாவுக்குப் பயணித்து அங்குள்ள தமிழர்களிடம் பேசினர். அவர்கள் சென்றபோது மலேசியா, சிங்கப்பூர் என இருநாடுகளாக மலேயா பிரிக்கப்பட்டுவிட்டது.
1965ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் நாள் சிங்கப்பூரில் தரையிறங்கிய பேரறிஞர் அண்ணாவுக்கு விமானநிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசிய திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்ப் பண்பாட்டு அமைப்பினர், பத்திரிகை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அண்ணாவை அழைத்திருந்தனர். அண்ணாவுடன் இரா.செழியன் பயணித்தார். சிங்கப்பூரில் மாபெரும் வரவேற்புப் பொதுக்கூட்டம். அண்ணாவைக் கண்டு ஆர்ப்பரிக்கும் சிங்கப்பூர் தமிழர்களை, அந்த கூட்டத்திற்கு தலைமையேற்ற சிங்கப்பூரின் மிக முக்கிய பிரமுகர் ஆச்சரியமாகப் பார்க்கிறார்.
அண்ணாவின் சொற்களுக்கு எழும் கைத்தட்டல் அவரது ஆச்சரியத்தை அதிகமாக்குகிறது. அண்ணா என்ன பேசுகிறார் என்பது முழுமையாகப் புரியாவிட்டாலும் உணர்வினை அவரால் புரிந்துகொள்ள முடிகிறது.
அவர் தனது தலைமை உரையில், “இப்படி ஒரு கூட்டத்தை இதற்கு முன் நான் எனது வாழ்நாளில் கண்டதில்லை. இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவுக்குப் பிறகு அண்ணாவுக்கு கூடிய கூட்டமே பெரிய கூட்டம்” என்று குறிப்பிட்டார். அவர்தான், சிங்கப்பூர் பிரதமராக 30 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பு வகித்து, இன்று காணும் சிங்கப்பூரை கட்டமைத்த மகத்தானத் தலைவர் லீ குவான்யூ.
(சுற்றும்)
அரசியலுக்கு சரிபட்டு வரமாட்டார்.!
புதிதாக அரசியல் கட்சித் தொடங்கியுள்ள நடிகர் விஜய் தற்போது சனிக்கிழமை தோறும் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
இந்த கூட்டங்களில் அவர் தொடர்ந்து தவறான தகவல்களை கூறி வருவது தற்போது அம்பலமாகி வருகிறது.
அந்த வகையில் இன்று நாமக்கல்லில் நடிகர் விஜய் பேசியபோது, சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு நாமக்கலில் நினைவு அரங்கம் அமைப்பதாக கூறியும், அதனை இன்னும் அமைக்கவில்லை என திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசை விமர்சித்தார்.
இந்த நிலையில், அவரின் இந்த விமர்சனமும் தவறானது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
உண்மையில், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு நாமக்கலில் நினைவு அரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு சார்பில் 06.09.2021 அன்று சட்டமன்ற கூட்டத் தொடரில் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, 10.05.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக நினைவு அரங்கத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடைந்து நினைவரங்கம் திறக்கப்படவுள்ளது.அதே போல முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு சென்னை காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை 2023ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல்கள் எதுவும் அறியாமல் நடிகர் விஜய் நாமக்கல்லில் விமர்சித்துள்ளார்.
எழுதித் தருவதை சரிபார்க்காமல் உளறித் தள்ளுவது நல்ல அரசியல்வாதிக்கு அழகல்ல.
விஜய் அரசியலுக்கு சரிபட்டு வரமாட்டார்.!