இந்திய பெருங்கடல் பள்ளம்?

 இந்திய பெருங்கடலின் ஆழத்தில் ஒரு வினோதமான புவியியல் அம்சம் உள்ளது. அதுதான் இந்திய பெருங்கடல் ஜியோயிட் தாழ்வு (IOGL). 

இது பூமியிலேயே மிகப்பெரிய "ஈர்ப்பு விசைப் பள்ளம்" (Gravity Hole) என்றழைக்கப்படுகிறது. 

இது உலகளாவிய சராசரியை விட 330 அடி ஆழத்திற்குக் கீழே செல்கிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகளுக்குப் பெரும் புதிராக இருந்த இந்த மர்ம முடிச்சை, இந்திய விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு அவிழ்த்துள்ளது.

பூமியின் கடற்பரப்பின் வடிவத்தை ஈர்ப்பு விசை தீர்மானிக்கிறது. ஈர்ப்பு விசை குறைவாக உள்ள இடங்களில் கடல்மட்டம் இயல்பை விட தாழ்ந்து காணப்படும்.

 இந்திய பெருங்கடல் ஜியோயிட் தாழ்வு பகுதியில் ஈர்ப்பு விசை மிகக் குறைவாக இருப்பதால், இது பிரம்மாண்டமான "ஈர்ப்பு விசை பள்ளமாக" காட்சியளிக்கிறது.

 பொதுவாக, இதுபோன்ற பெரிய ஈர்ப்பு விசை மாற்றங்கள், ஆழமான அகழிகள் அல்லது எரிமலை செயல்பாடுகள் போன்ற மேற்பரப்பு அம்சங்களால் ஏற்படும். 

ஆனால், இந்தப் பகுதியில் உள்ள கடல் தரை எந்தவித பெரிய புவியியல் மாற்றங்களையும் கொண்டிருக்கவில்லை. அப்படியானால், இந்த தாழ்வுக்குக் காரணம் என்ன?

இந்த மர்மத்தை தீர்க்க, இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 2023-ல் ஒரு திருப்புமுனையான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் கடந்த 140 மில்லியன் ஆண்டுகால பூமியின் ஆழமான அடுக்குகளின் இயக்கத்தை அதிநவீன கணினி மூலம் உருவகப்படுத்தினர்.

பூமிக்கு அடியில் டெத்திஸ் பெருங்கடலின் குளிர்ந்த, அடர்த்தியான அடுக்குகள் மூழ்கின. இந்த மூழ்கும் அடுக்குகள், ஆப்பிரிக்கப் புவித் தட்டின் அடியில் இருந்த சூடான, இலகுவான பொருளுடன் (LLSVP எனும் பகுதி) மோதின. 

இந்த மோதலின் அழுத்தத்தால், வெப்பமான மற்றும் மிதக்கும் தன்மை கொண்ட 'ப்ளூம்ஸ்' எனப்படும் பொருள் புகைபோல கீழ் அடுக்கில் இருந்து இந்தியப் பெருங்கடலை நோக்கி எழுந்தது. 

இந்தச் சூடான, இலகுவான பொருட்களின் எழுச்சிதான், பூமியின் நிறைப் பரவலை (Mass Distribution) மாற்றுகிறது. இதன் காரணமாக, பூமியின் மேற்பரப்பில் நாம் இன்று காணும் அந்தத் தனித்துவமான ஈர்ப்பு விசைத் தாழ்வு உருவாகிறது.

இந்த ஈர்ப்பு விசை பள்ளம் திடீரென ஏற்பட்டதல்ல. இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகள் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மோதியதில் தொடங்கி, பல மில்லியன் ஆண்டுகளாக மெதுவாக நடந்துவரும் புவியியல் இயக்கவியல் செயல்பாட்டின் விளைவே இது. 

கணினி மாதிரிகள் IOGL-இன் தோற்றத்தை விளக்கினாலும், புவி அடுக்கு ப்ளூம்களின் ஆழம் மற்றும் வடிவம் குறித்து மேலும் துல்லியமான தகவல்கள் தேவைப்படுகின்றன.

வெப்பமான, அடர்த்தி குறைந்த பகுதிகள் வழியாக நில அதிர்வு அலைகள் மெதுவாகப் பயணிக்கும். எனவே, விஞ்ஞானிகள் ஐ.ஓ.ஜி.எல் பகுதியை சுற்றி அதிக நில அதிர்வு அலை ஆய்வுகளை (Seismic Data) மேற்கொள்ள வலியுறுத்துகின்றனர். இந்நில அதிர்வு தரவுகளை ஈர்ப்பு விசை அளவீடுகளுடன் இணைப்பதன் மூலம், பூமியின் உட்புற இயக்கவியல் குறித்த மிகத் துல்லியமான மாதிரிகளை உருவாக்க முடியும் என்று நம்புகின்றனர். 

இந்த ஆய்வு, பூமியின் ஆழமான உட்புறத்தில் ஏற்படும் இயக்கங்கள் கூட மேற்பரப்பில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உலகிற்குப் புரிய வைத்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை