பாதுகாப்பும்,துப்பாக்கிச் சூடும்!
“நான் ஊடகங்களில் பார்க்கின்ற போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
முந்தைய பரப்புரைகளின் போதும் காவல்துறை உரிய பாதுகாப்பை கொடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.எனது ஆட்சியில் அனைத்து மக்களும் பாதுகாப்புடன் மகிழ்ச்சியாக இரிந்தனர்” என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி.
தூத்துக்குடியில் அமைதியாக ஊர்வலம் சென்று கொண்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்திக் கலைத்து 13 பேரைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட கொலைபாதகச் செயலுக்குக் காரணமான எடப்பாடி பழனிசாமி, கரூர் விவகாரத்தில் காவல் துறையின் மீது பழிபோடுவது அவரது குரூர அரசியலின் கீழ்த்தரமான புத்தியையே காட்டுகிறது.
“அ.தி.மு.க. அரசாங்கம் இருக்கும் போது பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்திருக்கின்றன, ஒவ்வொரு கூட்டங்களுக்கும் நாங்கள் உரிய பாதுகாப்பளித்தோம்” என்று பேட்டி கொடுத்திருக்கிறார் பழனிசாமி.
13 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியானபிறகு, 'அதை டி.வி.யில் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன்' என்று சிரித்தபடியே சொன்னவர்தான் இந்த பழனிசாமி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் முழு உண்மையை அம்பலப்படுத்திவிட்டது.
பழனிசாமிக்குத் தெரிந்தே தான் அந்தக் கொலைகள் அரங்கேற்றப்பட்டதாக அந்த ஆணையமே சொல்லியது.
அறிக்கையின் 2 ஆவது பாகம் - 219 ஆவது பக்கத்தில் இடம் பெற்றுள்ள 252 ஆவது கருத்து இது :
"..... have been updating the Chief Minister Tr. Edapadi K. Palanisamy with minute to minute development which took place in Thoothukudi and as such to say that the then Chief Minister come to know of the shooting only through the media would be incorrect or inaccurate - the Commission would opine” என்று சொல்லி இருக்கிறது அந்த அறிக்கை.
“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'அந்த சம்பவத்தை மற்றவர்களைப் போல ஊடகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்து கொண்டேன்' என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஆனால் இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டி.ஜி.பி. ராஜேந்திரன், அப்போதைய உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில்நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்ததாகக் கூறினார்கள்.
எனவே, ஊடகங்கள் மூலமாகத்தான் அந்தச் சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது தவறான கருத்து என்பது இந்த ஆணையத்தின் கருத்தாகும்”- என்று ஆணையத்தின் அறிக்கை சொல்கிறது. இப்படிப்பட்ட பழனிசாமிதான், இன்று மகா யோக்கியரைப் போல பேட்டி தருகிறார்.
சாத்தான்குளத்தில் தந்தையையும் மகனையும் காவல் நிலையத்தில் வைத்து கொன்று விட்டு, 'உடல் நலக் குறைவால் மரணம்' என்று அறிக்கை விட்டது பழனிசாமியின் அரசு என்பதை மக்கள் மறந்துவிடவில்லை.
பென்னிக்ஸ் மூச்சுத் திணறலால் இறந்தார், ஜெயராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்' என்றும் அறிக்கை வெளியிட்டார் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி. அவர்தான் இன்று மகா யோக்கியரைப் போல பேட்டி தருகிறார்.
விஜய் தனது கூட்டத்துக்கு காவல் துறை சொல்லும் எந்தக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவது இல்லை. கூட்டம் கூட்டிக் காண்பிப்பதற்காக நெருக்கமான சாலைகளைக் கேட்பதும், கூட்டம் கூட வேண்டும் என்பதற்காக 8 மணி நேரம் கழித்து வருவதும், சுற்றிலும் மரங்களிலும் வீடுகளின் மேலும், ஆபத்தான மின்விளக்கு கம்பங்களின் மீதும், கோவில் கோபுரங்களின் மீதும் ரசிகர்கள் நிற்பதைப் பார்த்து ரசிப்பதும் என ஒரு கூட்டத்துக்கான எந்த இலக்கணமும் இல்லாமல் தலைக்கனமாக நடந்து கொண்டதன் விளைவு தான் அப்பாவி மக்கள் 41 பேர் மூச்சுத்திணறலால் மரணம் அடைந்த மாபெரும் சோகம் ஆகும்.
இதில் கூட பழனிசாமி தனது பச்சை சந்தர்ப்பவாத அரசியலைச் செய்கிறார்.
சம்பவ இடத்தில் 500 காவலர்கள் இருந்துள்ளார்கள். பத்தாயிரம் பேர் வருவார்கள் என்று சொல்லி இடம் வாங்கிவிட்டு, 27 ஆயிரம் பேரைக் கூட்டியது யார் தவறு? விஜய் கட்சியினர் முன்பு கேட்ட இடம் குறுகலானது என்பதால் பெரிய இடத்தை காவல் துறை கொடுத்துள்ளது.
அந்த இடத்தை முறையாகப் பயன்படுத்தாதது யார் தவறு?
எட்டு மணி நேரமாக காத்திருப்பவர்களுக்கு தண்ணீர் இல்லை, உணவு இல்லை. வெளியே செல்வதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை.
'நான் வெளியே போகணும்னு சொன்னேன். ஆனால் விட மாட்டேன்னு அவரு கட்சிக்காரங்க சொல்லிட்டாங்க. எங்களை சுத்தி கயிறு போட்டு கட்டிட்டாங்க' என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண் கதறியபடி சொல்கிறார். இதெல்லாம் யார் தவறு?
சந்தடி சாக்கில், தனது கூட்டத்துக்கும் பாதுகாப்பு இல்லை என்று பழனிசாமி சொல்கிறார். பழனிசாமிக்கு கூட்டமே கூடுவது இல்லை. அவரது பச்சை பஸ்ஸை பார்த்தாலே மக்கள் ஓடுகிறார்கள். இவர் பேசத் தொடங்கியதும் மக்கள் கலைகிறார்கள்.
பெரும்பாலும் காலியான சாலைகளில்தான் பழனிசாமி செல்கிறார்.
பல இடங்களில் அவருக்கு கருப்புக் கொடி காட்டுகிறார்கள். சொந்தக் கட்சிக்காரர்களே கருப்புக் கொடி காட்டுவதாகத்தான் அவரது பயணங்கள் அமைந்துள்ளன. 'இந்தக் கேவலம் தேவையா?' என்பதைப் போலத்தான் பழனிசாமியின் பஸ் பயணங்கள் அமைந்துள்ளன.
ஆனாலும் வெட்கமே இல்லாமல், 'எனக்கும் பாதுகாப்பு இல்லை' என்கிறார் பழனிசாமி.
ஒருவேளை காவல் துறையினரை அதிகமாக நிறுத்தி கூட்டம் கூட்டி காட்ட நினைக்கிறாரா பழனிசாமி?
-கோவி.லெனின்.
திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.எம்.நாயர், சமூக நீதி அடிப்படையிலான வகுப்புவாரி இடஒதுக்கீட்டுத் தொகுதிகளை வலியுறுத்தி இங்கிலாந்துக்கு மேற்கொண்ட பயணத்திலிருந்தே, உலகளாவிய அரசியல் சூழல்களையும், பொருளாதார வளர்ச்சியையும் கவனிக்கும் பார்வை திராவிடத் தலைவர்களுக்கு இருந்து வந்தது.
கம்யூனிச அரசாங்கம் நடந்த சோவியத் யூனியன் எனும் ரஷ்யாவையும், ஐரோப்பிய நாடுகளின் முற்போக்கு கொள்கைகளையும் தெரிந்துகொள்வதற்காகவே ஓராண்டு கால அளவிலான பயணத்தை மேற்கொண்டவர் பெரியார்.முதலமைச்சராக அண்ணாவும், கலைஞரும், அவர்களைத் தொடர்ந்து இன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் கல்வி, மருத்துவம், தொழில், பண்பாடு, சுற்றுலா ஆகிய துறைகளில் தமிழ்நாடு முன்னேறுவதற்கும் பயன்பட்டு வருகின்றன.
2021க்குப் பிறகு தொழில்துறையில் தமிழ்நாடு பெற்றுள்ள முதலீடுகளால் உருவான தொழிற்சாலைகளும் அவை வழங்கியுள்ள வேலை வாய்ப்புகளும் முக்கியத்தும் வாய்ந்தவை.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் துறைகள் வெளியிடும் புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. அந்தளவுக்கு தொழில் வளர்ச்சிக்கான கட்டமைப்பு தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெர்மனிக்கு செல்கிறார். டசல்டோர்ஃப் விமான நிலையத்திலிருந்து அவர் வெளியே வரும்போது இந்திய தூதரக அதிகாரிகள் பூங்கொத்து அளித்து வரவேற்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து ஜெர்மனி வாழ் தமிழர்கள் திரண்டிருந்து வரவேற்பு அளிக்கின்றனர். அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் அரங்கம் நிறைந்திருக்கிறது.
மலேயாவில் பெரியார் சந்தித்த தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களுக்கும், ஐரோப்பாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்த உயர்நிறுவனங்களில் பணியாற்றும் தமிழர்களுக்குமிடையிலான கல்வி-பொருளாதார-சமூக நிலையிலான முன்னேற்றம்தான் கடந்து வந்து கால இடைவெளியின் தடயங்கள்.

இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து வந்த முதலமைச்சர் தனது மாகாணத்தில் உள்ள முதலீட்டாளர்களை சந்திக்க வந்திருக்கிறார் என்பதை அறிந்ததும், தமிழ்நாட்டு முதலமைச்சரை தனது தலைமைச் செயலகத்திற்கு அழைத்தார் ஹெண்ட்ரிக்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜாவும் தங்கியிருந்த விடுதியிலிருந்து புறப்பட்டபோது, நார்த்ரைன்-வெஸ்ட்பாலியா மாகாண முதலமைச்சரின் சிறப்பு கான்வாய் விடுதி வாசலில் காத்திருக்கிறது.
ஒரு நாட்டின் பிரதமருக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்குமோ அப்படிப்பட்ட வரவேற்புடன் தமிழ்நாட்டின் முதலமைச்சரை தன் கான்வாய் மூலம் தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து இரு தரப்பு தொழில் வர்த்தக உறவுகள் குறித்து உரையாடினார் அந்த மாகாணத்தின் தலைமை அமைச்சர்.
வெளிநாடுகளிலுள்ள வசதிகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திட திராவிட இயக்க ஆட்சியில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது போலவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணை நின்ற திராவிடத் தத்துவத்தை உலக நாடுகளில் பரவிடச் செய்வதற்கான தொடர் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் எந்தவித பதவிகளுக்கும் ஆசைப்படாமல் கருத்துப் பரப்பலையே முதன்மையாகக் கொண்டுள்ளது.
‘பெரியாரை உலக மயமாக்குவோம், உலகை பெரியார் மயமாக்குவோம்‘ என்கிற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கருத்தரங்குகளை நடத்தி பெரியார் கொள்கைகயையும், சமூக நீதி தத்துவத்தையும் தொடர்ந்து பரப்பி வருகிறார்.
அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா வாழ் தமிழர்களிடம் மட்டுமின்றி அந்நாட்டின் பகுத்தறிவாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் பங்கேற்கும் மன்றமாக செயல்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெரியாரின் கொள்கைகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, புத்தகங்களாக வெளிவருகின்றன. ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு செய்பவர்கள் பெரியார் சிந்தனைகள் மீது ஈடுபாடு கொண்டு, தமிழ்நாட்டுக்கு வந்து ஆய்வுகளைத் தொடர்கின்றனர்.

கால் நூற்றாண்டுக்கு முன்பு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பங்கேற்று சிறப்பித்தார்.
அந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆன்டனி கல்லூரியின் ஏசியன் ஸ்டடீஸ் சென்டர் சார்பில் 4-9-2025 அன்று முன்னெடுக்கப்பட்ட சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்று, பெரியார் படத்தை திறந்து வைத்தது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு.
1932ஆம் ஆண்டில் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் துணையுடன் இலண்டன் நகரில் உள்ள பூங்காவிலும் சதுக்கங்களிலும் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் பெரியார்.
தொழிலாளர்கள் சுயமரியாதை கொண்டவர்களாக உரிமைகளைப் பெற வேண்டும் என்று இங்கிலாந்தில், தான் பங்கேற்றக் கூட்டத்தில் பேசியவர் பெரியார்.
அவருடைய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அவருடைய படத்தை, பெரியாரின் கொள்கை வாரிசாக-இயக்கத்தின் நான்காம் தலைமுறைத் தலைவராகத் திறந்து வைத்து உரையாற்றினார் தமிழ்நாடு முதலமைச்சர். சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் குறித்த ஆய்வுப் புத்தகங்கள் வெளியிடப்பட்டு, இரண்டு நாள் கருத்தரங்கமும் நடைபெற்றது.
ஒரு நூற்றாண்டுக்கு முன் உடலுழைப்புத் தொழிலாளர்களாக பர்மா, இலங்கை, மலேயா, மடகாஸ்கர் தீவுகள் எனப் பயணித்த தமிழர்கள், கடந்த அரை நூற்றாண்டாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு உயர்படிப்பு முடித்து உயர்ந்த வேலைகளுக்கு செல்கிறார்கள்.
ஒரு நூற்றாண்டுக்கு முன் கப்பலில் பயணித்து இலண்டன் நகரில் அலைந்து, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்காக பாடுபட்டு அங்கேயே இறந்தார் நீதிக் கட்சித் தலைவர் டாக்டர் தாரவாட் மாதவன் நாயர்.
அந்த சமூக நீதிக் கொள்கையை ஆய்வு செய்து, சுயமரியதை இயக்கத்தின் வெற்றிகரமான தாக்கத்தைக் கொண்டாடுகிறது, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம். உலகப் பல்கலைக்கழகங்கள் எங்கும் திராவிடம் பரவுகிறது. திராவிடத் தலைவர்களின் உலகப் பயணம் தொடர்கிறது.