வெள்ளி விழா காணும்...
தமிழ்நாடு முழுவதும் இன்று 12 ஆயிரத்து 500 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.


குஜராத் மாநிலத்தின் முதல் அமைச்சர், இந்திய நாட்டின் பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளுக்கும் சேர்த்து அரசின் தலைமைப் பொறுப்பில் நரேந்திர மோடி அவர்கள் இருபத்தைந்து ஆண்டுகள் இருந்து விட்டதாக விழா கொண்டாடப்படுகிறது.
‘அரசின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள்' என்று மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கை, தன்னைத் தானே மெச்சிக் கொள்வதாக அமைந்துள்ளது.
‘உலகின் நம்பர் ஒன் நாடு இந்தியா' என்பதைத் தவிர அனைத்தும் இருக்கிறது அந்த அறிக்கையில்.
இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து மோடி என்னவாக அடையாளம் காணப்படுவார் என்றால், குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறைகளுக்காகவும், ஒன்றிய அரசின் பெரும்பாலான வசதிகளை அதானி குழுமத்துக்கு தாரை வார்த்ததற்காகவும்தான்.
2002 - குஜராத் கலவரம் எத்தகைய கோரமானது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை, அவரது குருநாதர் அத்வானியே சொல்லி இருக்கிறார். மோடி மீது கோபம் ஆன காலத்தில் அல்ல, மோடி மீது நல்ல இணக்கமாக இருந்த காலத்தில் அத்வானி அவர்கள் ஒரு புத்தகம் எழுதினார்கள்.
‘என் தேசம் என் வாழ்க்கை' என்பது அதன் தலைப்பு. அந்தப் புத்தகம் தமிழிலும் வெளியாகி இருக்கிறது. இதில் குஜராத் கலவரம் குறித்து 831, 842 ஆகிய பக்கங்களில் எழுதி இருக்கிறார் அத்வானி அவர்கள்.
“அதுவரையில் நாட்டில் மதக்கலவரங்கள் வெகுவாகக் குறைந்திருக்கிறது என்று வாஜ்பாய் ஆட்சிக்குக் கிடைத்திருந்த பாராட்டை குஜராத் சம்பவங்கள் சீர்குலைக்கின்றன என்பதால் நான் மிகவும் சோர்வுற்றேன்.
குஜராத்தில் நடந்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஆகும்” என்று சொல்லி விட்டு, அதில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்பதை நாடாளுமன்றத்தில் பட்டியல் போட்டதை அத்வானி அவர்கள் சொல்கிறார்கள். "குஜராத் வன்முறையில் 798 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 254 இந்துக்கள் கொல்லப்பட்டனர். 223 பேர் காணவில்லை.
சாவு எண்ணிக்கை பற்றிய தகவல் அதிகாரபூர்வமற்ற வகையில் அதிகமாக இருக்கக் கூடும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்” என்கிறார்.
அப்போது அத்வானி, இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர்.
2002 ஏப்ரல் 4 ஆம் தேதி பிரதமர் வாஜ்பாய் குஜராத்திற்குச் சென்றார்.
“குஜராத் வன்முறை உலக நாடுகளின் பார்வையில் இந்தியாவின் அந்தஸ்தை மோசமாகப் பாதித்துவிட்டது. இங்கு இவை எல்லாம் நடந்த பிறகு, எந்த முகத்தோடு நான் வெளிநாடுகளுக்குப் போவேன் என்று எனக்குத் தெரியவில்லை.
இந்த வெறிபிடித்த போக்கை நிறுத்தி யாக வேண்டும்” என்று பிரதமர் வாஜ்பாய் பேசியதாக எழுதி இருக்கிறார் அத்வானி.
முதலமைச்சர் மோடி பதவி விலக வேண்டும் என்று அப்போது கோரிக்கை எழுந்தது. பதவி விலகத் தேவையில்லை என்று உறுதியாக வாதிட்டுத் தடுத்தவர் அத்வானி. 'மோடியாவது ராஜினாமா செய்திருக்க முன்வந்திருக்க வேண்டும்' என்று பிரதமர் வாஜ்பாய் தன்னிடம் சொன்னதாக ( பக்கம் 934) அத்வானி எழுதுகிறார்.
மோடியை அழைத்து, “ராஜினாமா செய்யுங்கள்” என்று தான் சொன்னதாக அத்வானி சொல்கிறார். கோவா தேசிய நிர்வாகக் குழுவில் இதனை மோடியும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ‘எது எப்படி இருந்தாலும் ஆட்சிக்குத் தலைமை ஏற்றிருப்பவன் என்ற முறையில் என் மாநிலத்தில் நடந்த சம்பவங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்' என்று மோடி அக்கூட்டத்தில் சொல்லி இருக்கிறார். வரலாற்றில் இதுதான் பேசப்படும்.
பிரதமர் பதவிக்கு வந்த பிறகு தனிப்பட ஒரு குழுமத்துக்காக தனது பதவியைப் பயன்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு இதுவரை மோடி பதில் அளிக்கவில்லை.
07.02.2023 அன்று அதானியும் மோடியும் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி நாடாளுமன்றத்தில் ராகுல் கடுமையாக விமர்சித்தார்.
“2014 ஆம் ஆண்டு 8 பில்லியன் டாலராக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இப்போது 140 பில்லியன் ஆனது எப்படி? 2014ஆம் ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 609 ஆவது இடத்தில் இருந்தவர், 2022ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தைப்பிடித்தது எப்படி? விமான நிலையம் என்றாலும் அதானிதான்.
துறைமுகம் என்றாலும் அதானிதான். முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ள இயலாது என்ற விதியைத் திருத்தினார்கள். அதானிக்கு 6 விமான நிலையங்கள் தரப்பட்டன. இஸ்ரேலுக்கு பிரதமர் செல்கிறார். அவருக்குப் பின்னாலேயே நடந்து அதானி செல்கிறார்.
உடனே இஸ்ரேல் - இந்தியா இடையிலான அனைத்து தொழில்துறை ஒப்பந்தங்க- ளும் அதானிக்கு வந்து விடுகிறது. இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் செல்கிறார். உடனே மாயமந்திரமாக எஸ்.பி.ஐ. வங்கி அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்குகிறது. வங்கதேசத்திற்கு மோடி முதல் முறையாகச் செல்கிறார்.
அங்கு மின் விநியோகத்திற்கான திட்டம் முடிவாகிறது. சில நாட்களுக்குப் பின் வங்கதேசத்தின் மின்வாரியம் 25 ஆண்டுகளுக்கு மின் விநியோக உரிமையை அதானிக்கு வழங்குகிறது.
1500 மெகாவாட் மின்சார ஒப்பந்தம் அதானிக்குக் கிடைக்கிறது. இதுதான் உங்கள் வெளியுறவுக் கொள்கை” - என்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதில் அளிக்காத மோடி, 2024 தேர்தல் நடக்க இருக்கும் போது திடீரென அதானி பற்றிப் பேசினார்.
“அம்பானி,அதானியிடமிருந்து காங்கிரஸ் எவ்வளவு பணம் பெற்றது? எத்தனை வாகனங்களில் பணத்தைப் பெற்றது? ஏதோ ஒன்று நடந்திருப்பதாக நான் உணர்கிறேன்” என்று பேசினார். ‘உங்களுக்கு இப்படித்தான் வந்ததா?' என்று திருப்பிக் கேட்டார் ராகுல்.
இந்திய நாடாளுமன்றம் ஒவ்வொரு முறையும் கூச்சலும் குழப்பமுமாக ஆவது அதானி விவகாரத்தில்தான். உலகின் பலநாட்டுப் பத்திரிக்கைகள் கிழிப்பது இந்தச் செய்தியை வைத்துத்தான். உலகின் பலநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் அதானி.
ஜூன் 2022ஆம் ஆண்டு இலங்கை காற்றாலைமின்உற்பத்தி உரிமத்தை அதானிக்கு வழங்க வேண்டும் என மோடி அழுத்தம் கொடுத்ததாக மகிந்த ராஜபட்சே சொன்னார்.
25 ஆண்டுகள் கழித்து நினைவுகூர இருப்பவை இவை இரண்டும்தான்.