மோடியின் பொய்கள்.
இந்தியாவிற்கு கேடு தரும்!
மூன்றாவது முறையாக அவர் பிரதமராக இருக்கிறார். 11 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை அவர்தான் ஆட்சி செய்து வருகிறார்.
தற்போது தேர்தல் நடக்கவிருக்கும் பீகார் மாநிலத்திலும் அவரது கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட நிலையில், தேர்தல் பிரச்சாரம் செய்கின்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்ல வேண்டும்.
பீகார் மாநிலத்தில் தனது கட்சியின் கூட்டணி ஆட்சியில் மாநிலம் என்னென்ன வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறது என்பதையும், பீகார் மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவில் உயர்ந்துள்ளது என்பதையும் சொல்லி வாக்கு கேட்பதுதான் பிரதமர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருப்பவருக்கு அழகு. அதற்கு நேர்மாறாக ஒவ்வொரு தேர்தல் களத்திலும் செயல்படுகிறார் பிரதமர் மோடி.
தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பீகாரிகளை தி.மு.க அரசு துன்புறுத்துவதாக பிரதமர் மோடி தனது தேர்தல் பரப்புரையில் பேசியிருப்பது கடும் அதிர்ச்சிக்குரியது மட்டுமல்ல, கடுமையான கண்டனத்திற்கும் உரியதாகும்.
தமிழ்நாட்டில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டிருப்பதால் வடமாநிலத்தவர் தங்கள் குடும்பத்தினரையும் இங்கே அழைத்து வந்து தங்குகிறார்கள்.
அந்தக் குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை, அதன் மூலம் கிடைக்கக்கூடிய பொருட்கள், மருத்துவ காப்பீடு ஆகியவை கிடைக்கின்றன.
ஒரு சிலர் வாக்காளர் அடையாள அட்டை வரை பெற்றுள்ளனர்.
தமிழர்களுக்கும் வடமாநிலத்தவருக்குமான வேலைவாய்ப்பு சிக்கல்கள், ஊதிய இடைவெளி ஆகியவை இருந்தாலும் தமிழ்நாட்டில் பிறமாநிலத் தொழிலாளர்கள் அமைதியான வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் தமிழ்மொழியின் தொன்மையையும் பா.ஜ.க. ஒரு போதும் ஏற்காது. எந்த ஒரு மாநிலமும் பலதரப்பட்ட மக்களுடன் அமைதியாக வாழ்ந்தால் பா.ஜ.க.வுக்குப் பொறுக்காது.
அதனால் கலவரத்தை உண்டாக்கும் நோக்கத்துடன் செயல்படுவது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் செயல்திட்டங்களில் ஒன்று.
மணீஷ் காஷ்யப் என்ற யூ-டியூபர் இரண்டாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பீகாரிகள் மீது தாக்குதல் என போலியான வீடியோ ஒன்றை வெளியிட, அதை மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள் உள்பட பலரும் பகிர்ந்து, தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க. அரசைக் கண்டித்தனர்.
போலி வீடியோ வெளியிட்ட மணீஷ் காஷ்யப்பை தமிழ்நாடு போலீஸ் கைது செய்தது. பின்னர் அந்த போலி வீடியோ யூ-டியூபர் மணீஷ் காஷ்யப் வெளிப்படையாக பா.ஜ.க.வில் சேர்ந்தார்.
இது பா.ஜ.க.வின் செயல்திட்டங்களில் ஒன்று. இப்படி பல திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் அமைதியைக் குலைத்து, கலவரத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
ஒடிசா மாநிலத்தில் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, அங்குள்ள பூரி ஜெகநாதர் கோவில் பெட்டகச் சாவி தற்போது தமிழ்நாட்டில் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
அதை பிரதமர் உள்பட அனைவரும் ஆதரித்தனர். அதாவது, ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கிடம் செல்வாக்காக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிதான், ஆட்சியை வழிநடத்துகிறார் என்றும், அவர் புகழ்மிக்க கோவிலின் பெட்டக சாவியைத் திருடிக்கொண்டு போய் தனது மாநிலத்தில் வைத்து விட்டார் என்றும் குற்றம்சாட்டும் வகையிலும், தமிழர்களைத் திருடர்கள் என்று இழிவுபடுத்தும் வகையிலும் அபாண்டமான பிரச்சாரத்தை நாட்டின் உள்துறை அமைச்சரே மேற்கொண்டார்.

எந்தவொரு தேர்தலிலும் மோடியும் அமித்ஷாவும் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பதில்லை.
எதிர்க்கட்சிகள் மீது நியாயமான விமர்சனத்தையும் வைப்பதில்லை. ராமர் கோவில் கட்டுவதை எதிர்க்கிறார்கள் என்று உத்தரபிரதேசத்தில் மதரீதியான சர்ச்சையை பிரதமரே தூண்டினார்.
ஹனுமனை இழிவுபடுத்துகிறார்கள் என்று கர்நாடகத்தில் பதற்றத்தை உண்டாக்கினார்கள். என் அம்மாவைத் திட்டிவிட்டார்கள் என்று பல தேர்தல் களங்களில் கண்ணீர் விட்டவர்தான் பிரதமர் மோடி.
இப்போதுகூட பீகாரில் பேசும்போது, சத் பூஜையை கிண்டல் செய்கிறார்கள் எதிர்க்கட்சிகள் என்று எல்லாவற்றையும் மதக்கண்ணோட்டத்தில், மொழி பாகுபாடு கண்ணோட்டத்திலும் பேசுவதே பிரதமர் உள்ளிட்ட பா.ஜ.க.வினரின் வழக்கமாக இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பிரச்சாரம் செய்யும்போது கூட தங்கள் பதவிக்குரிய கண்ணியத்துடன் பேசியவர்கள்தான் நேரு முதல் மன்மோகன்சிங் வரையிலான பிரதமர்கள்.
கண்ணியம் என்றால் என்ன விலை என்கிற அளவில் செயல்படுகிறது பிரதமர் மோடி தலைமையிலான அரசு.
பீகாரில் உள்ள ஒரு மாநிலக் கட்சி கூட வாக்கிற்காக இப்படி பிரிவினை பரப்புரையை மேற் கொள்ளாத நிலையில் அப்படி பிரிவினைவாதம் பேசுபவர்களை தடுக்கும் பொறுப்பு உள்ள எல்லோருக்குமான பிரதமர் பதவியில் உள்ள மோடியே அவ்வாறு இருமாநில மக்களிடையே கசப்புணர்வை ஊட்டும் வகையில் தன் கட்சிக்காக வாக்குகளுக்காக இப்படி தரம் தாழ்ந்து பேசுவது அசிங்கம்,கேவலம்.
அவர்வகிக்கும் பதவிக்கு மோடி சிறிது கூட தகுதி வாய்ந்தவரல்ல என எடுத்துக்காட்டுகிறது.
இதே மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் தான் தமிழ்நாட்டுக்கு எதையோ வாரிக் கொடுத்தது போல. பேசுவதும் தமிழை,தமிழர்களை மிக மதிப்பதாகவும் இன்னொரு நாவால் வடைசுடுவதும் வழக்கம்.
அண்ணாமலை போன்ற தமிழினத் துரோகிகள் இதுபோன்ற பேச்சின் ஆபத்தை உணராமல் மோடிக்கு காவி சங்கி என்ற ஒரே காரணத்திற்காக பீகாரிகள் தமிழ் நாட்டில் கொடுமைப் படுத்தப்படுவது உண்மைதான் என்பது அவர்களின் கருவில் குற்றம் எனத்தான் எண்ணத் தோன்றுகிறது.







