கேள்விகளும்? பதில்களும்!
குடியரசுத் தலைவர் எழுப்பிய14 கேள்விகளும்?
உச்ச நீதிமன்றம் பதில்களும்!
தமிழ்நாடு உள்ளிட்ட எதர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்கள் மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் போட்டு, முடிவெடுப்பதில் காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் மாநில மசோதாக்களை பரிசீலனைக்காக அரசியல் சாசனத்தின் 200 மற்றும் 201 பிரிவுகளின் கீழ் ஒப்புதல் அளிக்க, நிறுத்தி வைக்க குறிப்பிட்ட கால வரம்புகளை நிர்ணயித்தது.
இந்த தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றம் அளித்த பதில்கள்:
1.இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது அவருக்கு இருக்கும் சட்ட வாய்ப்புகள் என்ன?
ஆளுநருக்கு 3 சட்ட வாய்ப்புகள் உண்டு.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம்.
மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கலாம்.
மசோதாவை நிறுத்தி வைக்கலாம். அப்படி நிறுத்தி வைக்கும் போது, அந்த மசோதாவை மீண்டும் சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை.
அது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
ஒரு மசோதாவை முதல் முறையாக சமர்ப்பிக்கும்போது மட்டுமே ஆளுநர் அதை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்ப முடியும். சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு அவ்வாறு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியாது.
2.இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது ஆளுநர் மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டவரா?
பொதுவாக மாநிலங்களின் ஆளுநர்கள் மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் செயல்படுவார். ஆனால் அரசியல் சாசனத்தின் பிரிவு 200-ன் கீழ், ஆளுநர் தன் விருப்ப அதிகாரத்தையும் பயன்படுத்தலாம். அதன்படி அவர், மசோதாவை திருப்பி அனுப்பலாம் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம்.
3.ஆளுநரின் விருப்ப அதிகாரத்தை நீதித்துறை ஆய்வு செய்ய முடியுமா?
அரசியல் சாசனத்தின் பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் செயல்பாடுகள் பொதுவாக நீதி விசாரணைக்கு உட்பட்டவை கிடையாது. ஆளுநர் எடுக்கும் முடிவை நீதிமன்றம் மறுஆய்வு செய்ய முடியாது. இருப்பினும், ஒரு மாநில சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோதா மீது நீண்டகாலம் எந்த ஒரு விளக்கமும் தராமல், காலவரையற்று கிடப்பில் போட்டு வைத்திருந்தால் நீதிமன்றம் தலையிடும்; நீண்டகாலம் குடியரசுத் தலைவர் கிடப்பில் போட்டு வைத்தால் குறிப்பிட்ட வரம்புக்குள் நீதிமன்றம் தலையிடும்.
4.இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 361, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு தடையாக உள்ளதா?
அரசியல் சாசனத்தின் பிரிவு 361 ஆளுநருக்கு தனிப்பட்ட விலக்குரிமையை = வழங்குகிறது. அதாவது, அவர்கள் தங்கள் அலுவலகக் கடமைகளை நிறைவேற்றியதற்காக தனிப்பட்ட முறையில் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. இருப்பினும், அரசியல் சாசனத்தின் பிரிவு 200 இன் கீழ் ஆளுநர் நீண்ட காலமாக செயல்படாத நிலையில் நீதிமன்றம் தலையிட முடியும்.
5.இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆளுநரால் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?
அரசியலமைப்புச் சட்டம் 200-வது பிரிவின் கீழ் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு மூலம் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது. அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயிப்பது பொருத்தமானதாக இருக்காது.
6.இந்திய அரசியலமைப்பின் பிரிவு 201 இன் கீழ் ஜனாதிபதி அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?
அரசியல் சாசனத்தின் பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானது.
7.அரசியலமைப்பு சட்டத்தின்படி குடியரசுத் தலைவரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
அரசியலமைப்புச் சட்டத்தின்படி குடியரசுத் தலைவரின் செயல்பாடுகளுக்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு மூலம் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது.
8.ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும்போது இந்திய அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையையோ கருத்தையோ பெற வேண்டுமா?
நமது அரசியலமைப்பில், ஒரு மாநில ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பும் ஒவ்வொரு முறையும், குடியரசுத் தலைவர் கட்டாயமாக Article 143-ன் கீழ் இந்த நீதிமன்றத்திடம் பரிந்துரை கோர வேண்டிய அவசியம் இல்லை. குடியரசுத் தலைவரின் கருதுகோளின் அபிப்பிராயம் (subjective satisfaction) போதுமானது. எங்கு தெளிவின்மை இருப்பினும், அல்லது குடியரசுத் தலைவர் ஒரு மசோதா குறித்து இந்த நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற வேண்டுமென நினைத்தால், அது Article 143-ன் கீழ் இந்த நீதிமன்றத்துக்கு அனுப்பப்படலாம்; முந்தைய பல சந்தர்ப்பங்களில் இப்படி செய்யப்பட்டுள்ளது.
9.இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 200 மற்றும் பிரிவு 201 இன் கீழ், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் முடிவுகள், சட்டம் அமலுக்கு வருவதற்கு முந்தையக் கட்டத்தில் நியாயப்படுத்தப்படுமா? ஒரு மசோதா அவ்வாறு சட்டமாக மாறுவதற்கு முன்பு, எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது நீதிமன்றங்கள் நீதித்துறைத் தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா?
சட்டப் பிரிவு 200 மற்றும் 201 இன் கீழ் ஆளுநர் மற்றும் ஜனாதிபதியின் முடிவுகள், சட்டம் அமலுக்கு வருவதற்கு முந்தைய கட்டத்தில் நீதித்துறைக்கு உட்பட்டவை அல்ல. ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது நீதிமன்றங்கள் நீதித்துறை தீர்ப்பை மேற்கொள்வது அனுமதிக்கப்படாது.
10.இந்திய அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ்,குடியரசுத் தலைவர் /ஆளுநர் உத்தரவுகளை மாற்ற முடியுமா?
அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதையும், குடியரசுத் தலைவர் /ஆளுநர் உத்தரவுகளையும் பிரிவு 142 இன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியாது
11.மாநிலச் சட்டமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டம், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200-ன் கீழ் வழங்கப்பட்ட ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறையில் உள்ள ஒரு சட்டமாக அமையுமா?
மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறையில் உள்ள சட்டமாக அமையாது.
12.ஒரு வழக்கில் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழும்போது, குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை பரிந்துரை செய்ய வேண்டியது கட்டாயமா?
இந்தக் கேள்வி பொருத்தமானதல்ல என்பதால் பதிலளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது.
13. அரசியல் சட்டத்தின் 142வது பிரிவு, உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்கள், நடைமுறை சட்டத்திற்கு மட்டும் உட்பட்டதா? இல்லையெனில் அமலில் இருக்கும் அரசியல் சட்ட நடைமுறைகளுக்கு முரண்பட்ட, குறைபாடான உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்கிறதா?
பொருத்தமான கேள்வி அல்ல. கேள்வி 10ன் ஒரு பகுதியாக இருக்கிறது.
14.இந்திய அரசியலமைப்பின் பிரிவு 131-ன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புத் தடைசெய்கிறதா?
பொருத்தமற்றது.இது 131-க்கு வெளியே உள்ள அதிகார வரம்பு பற்றிய கேள்வி.
இவ்வாறு உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை. பாஜகவிற்கு சூசகமாக பதிலடி கொடுத்த அதிமுக எம்.பி. தம்பிதுரை.















