மாய மான்!

மாய மான் பொருளாதாரம்!

அக்டோபர் 2025 மாதத்தின் சில்லறை விலை குறியீட்டெண் தரவுகள் வெளிவந்துள்ளன. அக்டோபர் 2025 இல் சில்லறை விலைகள் 0.25% மட்டுமே உயர்ந்துள்ளன. 

ஜனவரி 2012 க்கு பிறகு - அதாவது 13 ஆண்டுகள், 9 மாதங்கள் - இதுவே மிகப் பெரிய விலைச் சரிவு என வணிக இதழ்கள் கூறுகின்றன. ஒன்றிய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி குறைப்பின் விளைவு என்றும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

இது குறித்து இந்து நாளிதழ் (14.11.2025) எழுதியுள்ள தலையங்கம் புள்ளி விவர மாயத்தை அம்பலப்படுத்தியுள்ளது.  

பொதுவாகவே புள்ளி விவரங்கள் கண்களையும் கருத்தையும் ஏமாற்றும். சீதையின் கண்களுக்கு மான் மட்டுமே தெரிந்தது. மாரீசன் தெரியவில்லை. அதுபோலத்தான் இந்த சில்லறை விலை குறியீட்டெண் தரவுகளும் ஆகும்.

 மேலோட்டமாக பார்த்தால் பெரிய அளவில் விலைவாசி குறைந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றும். ஆனால் சில்லறை விலை குறியீட்டெண் கணக்கீட்டு முறை,  அடிப்படையாகக் கொள்ளப்படும் காலம், கள யதார்த்தம் ஆகியனவற்றை இணைத்துப் பார்க்காவிட்டால் மான் மட்டுமே தெரியும். மாரீசன் தெரியமாட்டான்.  

முதலில் அடிப்படையாக கொள்ளப்படும் காலம். அக்டோபர் 2025 க்கான கணக்கீடு எதை அடிப்படை காலமாக கொண்டு செய்யப்படுகிறதெனில் அக்டோபர் 2024 நிலவிய விலைகளின் மீதே ஆகும்.

 எப்போதுமே அடிப்படை மாதத்தில் மிகப் பெரும் விலை உயர்வு நிகழ்ந்திருந்தால் இந்த ஆண்டு கணக்கிடும் போது உயர்வு விகிதம் குறைவாகவே இருக்கும் அதுதான் இப்போது நடந்திருக்கிறது. 2024 அக்டோபரில் உணவுப் பொருள் விலைகள் 9.7 % உயர்வை கண்டிருந்தது. 

ஆகவே 2025 அக்டோபரில் கணக்கிடும் போது 3.7% என்ற அளவிற்கு உணவு பொருள் விலைகள் வீழ்ச்சி என்று கணக்கு வந்திருக்கிறது. இதுதான் 13 ஆண்டு காலம் இல்லாத வரலாற்று சரிவு என கொண்டாடப்படுகிறது! உண்மையில் காய்கறி விலைகளெல்லாம் எகிறிய மாதமாகவே அக்டோபர் இருந்திருக்கிறது.  

இரண்டாவது, உணவுப் பொருள் விலைகளே நுகர்வோர் விலை குறியீட்டெண் கணக்கீட்டு கூடையில் 46 % ஆக உள்ளது. ஆகவே உணவு விலைகள் அக்டோபர் 2024 இல் கணிசமாக ஏறிய போதும் அதன் தாக்கம் கணக்கீட்டில்  வெளிப்பட்டு இருக்கும். இப்போது அதுவே சரிவு போல தோற்றமும் தருகிறது.  

மூன்றாவது, இந்த கணக்கீட்டு கூடையில் உள்ள மற்ற பொருள்களின் விலை உயர்ந்திருப்பதும் தற்போதைய புள்ளி விவரங்களில் வெளிப்படவில்லை. எரிபொருள், மின்சாரம், வீட்டு வசதி, புகையிலை உள்ளிட்ட பொருள்களின் விலை அதிகரித்துள்ளது.  

நான்காவது, ஜி எஸ் டி வரிக்குறைப்பின் தாக்கம். ஜிஎஸ்டி வரிக் குறைப்பு ஜவுளி, காலணி விலைகளில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக இந்து தலையங்கம் தெரிவிக்கிறது. ஆனால் ஜவுளிகளில் கூட குறைவான விலை கொண்ட துணிகளில் ஜிஎஸ்டி வரி குறைப்பு பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை. 










அதிக விலை கொண்ட ஜவுளிகளில் ஓரளவு தாக்கம் இருக்கலாம். ஜவுளிகளும் காலணிகளும் அன்றாட நுகர்வு பொருட்கள் அல்ல. வரிக்குறைப்பின் காரணமாக இவற்றின் நுகர்வு பெரிதும் அதிகரிக்கப் போவதுமில்லை. ஆகவே ஜிஎஸ்டி வரி குறைப்பு பிரச்சாரமும் சாயம் வெளுத்துப் போகிறது. 

ஐந்தாவது, 13 வருட கணக்குகளை ஒப்பிடுவதெல்லாம் வெறும் வாய் வீச்சு தான். கடந்த செப்டம்பர் மாத விலைவாசி உயர்வு பற்றிய ரிசர்வ் வங்கி மதிப்பீடு கூட 7.4 % என்று கூறுகிறது. இதுவும் நுகர்வோர் குறியீட்டெண் கணக்குகளை விட வெகு தூரத்தில் உள்ளது.  

பண வீக்கம் என்பது வெறும் பொருளாதார நிகழ்வல்ல; அது மக்களின் வருமானத்தை தட்டிப் பறிக்கும் அரசியலே ஆகும்.   மான்களை துரத்தி ஓடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டியுள்ளது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை