வழக்கமான திருத்தமல்ல
*SIR என்பது வழக்கமான வாக்காளர் பட்டியல் திருத்தம் அல்ல!*
அதையும் தாண்டி மோசமானது
வழக்கமாக, தேர்தல் ஆணையம் தான் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களை நீக்குவது, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, நீண்ட நாட்களாக ஊரில் இல்லாதவர்களை நீக்குவது போன்ற திருத்தங்களைச் செய்யும்.
ஆனால் SIR நடைமுறை என்பது ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து நீக்கல் சேர்த்தல் செய்யும் செயல்முறை அல்ல.
தேர்தல் ஆணையம் இப்போதுள்ள வாக்காளர் பட்டியலை முற்றிலுமாகக் குப்பைத்தொட்டியில் தூக்கிப் போட்டுவிட்டது.தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களும் இனிமேல் வாக்காளர்கள் கிடையாது. வாக்காளர் பட்டியலே இப்போது கிடையாது.
புதிய கனக்கெடுப்புப் படிவத்தைக் (enumeration form) கொடுத்து, அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே ஒருவர் வாக்காளராக இருக்க முடியும். ஒரு பூத்தில் இருக்கும் ஆயிரம் வாக்காளர்களும் அந்தப் படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவில்லை என்றால், அந்தப் பூத்தில் வாக்காளர்களே கிடையாது.
ஆக, SIR என்பது வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்குத்தான் என்று நம்பமுடியவில்லை!
வாக்களர்களை நீக்குவதுதான் இதன் உண்மையான நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
புதிதாகக் கொடுக்கப்படும் கணக்கெடுப்புப் படிவத்திலும், தேவைக்கு அதிகமான விவரங்கள் கேட்கப்படுகின்றன.
படிவத்தில் பிறந்த தேதி, ஆதார் எண், கைபேசி எண், தந்தை/பாதுகாவலரின் பெயர், தாய் மற்றும் கணவர்/மனைவியின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் கோரப்படுகின்றன.
மேலும், 23 ஆண்டுகளுக்கு முன்பு (2002ல்) நடந்த முந்தைய சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் இருந்த வாக்காளரின் உறவினர் பெயர் மற்றும் உறவு முறை பற்றிய தகவலும் கூடுதலாகக் கேட்கப்படுகிறது.
குறிப்பிட்ட உறவினர் இறந்திருந்தால், இறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டிய சூழல் வரும்.
இந்த படிவம் ஒருவருக்கு ஒன்று மட்டுமே வழங்கப்படும். இதில் QR CODE இருப்பதால் இதனை ’ஜெராக்ஸ்’ எடுத்து வேறு ஒருவர் பயன்படுத்த முடியாது.படிவத்தைத் தவறாக நிரப்பினாலோ, தவறான தகவலை மாற்றிக் கொடுத்துவிட்டாலோ, திருத்தித் தருவதற்கான வாய்ப்பு இருக்குமா என்பது தெரியவில்லை.
2002ல் வாக்களிக்காமல் பின்னர் வாக்காளரானவர்கள், தங்களின் வாக்குரிமையை நிரூபிக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
நவம்பர் 4 தொடங்கி, டிசம்பர் 4 ஆம் தேதிக்குள், தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 36 லட்சம் பேரிடம் இந்தப் படிவத்தை நிரப்பித்தரச் செய்ய முடியுமா? வாய்ப்பே இல்லை!
குறைந்தது 1.5 கோடி வாக்காளர்களாவது தமிழ்நாட்டில் வாக்குரிமையை இழக்க நேரிடும், அல்லது மேல்முறையீடு செய்து வாக்குரிமையைப் பெறும் சூழல் வரும்.
இது வெறும் வாக்காளர் பட்டியல் திருத்தம் போல தெரியவில்லை, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மறைமுகமாக நடைமுறைப் படுத்துகிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது.
பாஜகவின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பகுதி மக்களுடைய வாக்குரிமையைப் பறிக்கவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்படுகிறது.
பாஜக அல்லாத கட்சிகளுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளவர்களின் வாக்குகளை நீக்குவதுதான் SIR இன் நோக்கம் என்ற சந்தேகமும் இருக்கிறது.
இந்த நாட்டில் ஏழை, பணக்காரர், ஆண், பெண், எந்த மதம், சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைவருக்கும் சமமாக இருப்பது வாக்குரிமை. அதைப் பறிக்கும் வேலையை பாஜக சார்பாக தேர்தல் ஆணையம் செய்கிறது.
நாம் இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

