கோணல் சுழி,.!
ரயில்களில் தொடர்ந்து அச்சுறுத்தி தகராறு செய்வதையே வேலையாக்க செய்து வந்த மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவின் பேரில் இளைஞர் நவீன்(22) குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவர்களிடையே மோதலை ஏற்படுத்தி, பயணிகளுக்கு இடையூறு செய்து, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக பல புகார்கள் அவர் மீது தொடர்ந்து எழுந்த நிலையில், திருத்தணியில் தனிப்படையினர் நவீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பறந்த தவெக கொடியைப் பார்த்து, ‘’பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க’’ என்று அதிமுக – தவெக கூட்டணி அமைந்துவிட்டது என்று குதூகலித்தார் எடப்பாடி பழனிசாமி.
அந்த கொடியைப் பிடித்தது தவெக தொண்டர் அல்ல.
அது அதிமுக தொண்டர்தான் என்பது பின்னர்தான் தெரியவந்தது. எடப்பாடி பழனிசாமிக்கும் அப்போது தெரிந்திருந்தாலும் கூட அவர் தவெக மயக்கத்தில் இருந்ததால் தெரியாமல் சொல்லிவிட்டார்.
அதிமுக என்கிற இவ்வளவு பெரிய கட்சியின் பொதுச்செயலாளர், தவெகவின் ஒப்புதல் இல்லாமலா இப்படி பொதுவெளியில் சொல்லுவார்? என்றே எல்லோரும் நம்பினார்கள்.
ஆனால் ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் தானாகவே உளறியிருக்கிறார் எடப்பாடி என்பது இப்போதுதான் தெரிகிறது.

2026ல் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி. 2026ல்தால் தவெக ஆட்சிதான் என்று தவெக பொதுக்குழு எடப்பாடி முகத்தில் கரியைப் பூசி இருக்கிறது.
இப்படி ஒரு நிலைமை தேவையா? என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாக சாடி இருக்கிறார்.
தவெகவின் பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ‘’எதிர்க்கட்சி அவர்களோடு வந்து சேருமாறு எங்களை அழைக்கிறது’’ என்று விமர்சிக்குமளவு எடப்பாடியின் செயல்கள் ஆகிவிட்டது.

தவெகவை கூட்டணிக்கு வரவைக்க வேண்டும் என்பதற்காக கரூர் விவகாரத்தில் விஜய்க்கு முழு ஆதரவாக இருந்தது அதிமுக. இந்த அளவுக்கு அதிமுக அவர்களுக்கு உதவியது என்பதைக் கூட மறந்து, அதிமுகவை அசிங்கப் படுத்தியிருக்கிறார் ஆதவ் அர்ஜூன்.
இதனால் அவமானப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து மனம் நொந்து போயிருக்கிறார் எடப்பாடி. அவரை கூல் செய்யும் விதமாகத்தான், முன்னாள் ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி,
50 ஆண்டுகளாக திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி. மக்களை சந்திக்காமல், மக்களுடன் நேரடி தொடர்பு இல்லாமல் சிலர் திரைப்புகழை கொண்டு மாய பிம்பத்தை அமைக்க முயற்சிக்கிறார்கள் என்று விஜயை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.

தவெகவை அதிமுக அடிக்க ஆரம்பித்திருப்பதால் திருப்பி அடிக்க தவெகவும் தயாராகி வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெரிய கட்சி கூட்டணிக்குள் வருகிறது… ஒரு பெரிய கட்சி கூட்டணிக்குள் வருகிறது… என்று புதிய கட்சி தவெகவை பெரிய கட்சி என்று கூவிக்கூவி வந்த எடப்பாடிக்கு தேர்தல் நெருக்கத்தில் இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டது.
அடுத்து என்ன செய்யப்போகிறார் எடப்பாடி? என்பதே அதிமுகவினரின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆட்டை கடிச்சு...,.?இந்து,- முஸ்லீம் என்று பேசி ரத்தங்களை ஓடவிட்டுக் குடிப்பதுதான் பா.ஜ.க.வின் பழக்கம் .
ஆட்டைக் கடிச்சு,மாட்டைக் கடிச்சு கடைசியில் மனிதனையே கடித்த வெறிநாய் போல மதவெறி பிடித்த பா.ஜ.க.
இப்போது தமிழன், - பீகாரி என்று கிளப்பி ரத்தம் குடிக்கத் திட்டமிடுகிறார்கள்.
மாண்புமிகு நரேந்திர மோடி இத்தனை ஆண்டுகாலம் பிரதமராக இருக்கிறோம் என்பதையே மறந்துவிட்டு, இன்னும் பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார் என்பதையே பீகார் மாநிலத்தில் அவர் ஆற்றிய உரை காட்டுகிறது.
பீகாரில் நிதிஷ்குமாரை மிரட்டி பாதிக்கு பாதி இடங்களை பறித்துவிட்டது பா.ஜ.க.. நிதிஷ்குமாருக்கு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. என்ன நடக்கிறது என்பதும் தெரியவில்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தனது கட்சியைக் காவு கொடுத்துவிட்டார், நம்மூர் பழனிசாமியைப் போல!
ஆனாலும் தோல்வி உறுதி என்பது தெரிந்துவிட்டது பிரதமர் மோடிக்கு. அதனால் பிளவுவாத, வன்முறை, அராஜக குஜராத் பாணியை அவித்துவிட்டார் மோடி.
கர்நாடகா, தெலங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், பீகார் மக்களைத் தொடர்ந்து அவதூறு செய்வதாகவும், தமிழ்நாட்டிலும் பீகார் மக்கள் தொடர்ந்து துன்பத்துக்கு உள்ளாவதாகவும் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். இதுதான் அவர் வகிக்கும் பதவிக்கு அழகா?
எந்த இடத்தில், எப்போது தாக்கப்பட்டார்கள் என்று சொல்ல முடியுமா மோடியால்? அப்படி எங்காவது நடந்த போது நீங்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டதாக பதிவுகள் இருக்கிறதா?
கரூர் சம்பவத்துக்கு ஓடி வந்ததே பா.ஜ.க. குழு, அப்படி எப்போதாவது பா.ஜ.க. குழு வந்துள்ளதா? பார்த்ததா? யாராவது சாட்சியம் அளித்துள்ளார்களா? இங்கே வாழ முடியவில்லை,
அடிக்கிறார்கள் என்று எவராவது பீகாருக்கு திரும்பியதாகக் காட்ட முடியுமா? எதுவுமே துளியும் கிடையாது. பிறகு எப்படி இந்திய நாட்டின் பிரதமர் இப்படிப் பேசலாம்?
இந்தியா முழுமைக்குமான ஒரு பிரதமர், ஒரு மாநில மக்களை இன்னொரு மாநிலத்தில் தாக்குகிறார்கள் என்று கூச்சமில்லாமல் பேசினால், அதனை வெளிநாட்டு அதிபர் என்னவாக புரிந்து கொள்வார்?
'இந்தியாவில் உள்நாட்டுக் குழப்பம்’ என்றுதான் புரிந்து கொள்வார். மோடி ஆட்சியில் இந்தியா இப்படித்தான் இருக்கிறதா? அல்லது, இந்தியா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரா?
தி.மு.க.தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது அழைப்பை ஏற்று பீகார் மாநிலத்தின் தலைவர் தேஜஸ்வீ தமிழ்நாட்டுக்கு வந்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத பா.ஜ.க.வின் சமூகவலைத்தளப் பிரிவு, ஒரு பொய்யைப் பரப்பியது. பொய்யைப் பரப்பியவரைக் கைது செய்தது தமிழ்நாடு காவல் துறை.
பீகார் மாநிலத்தில் இருந்து முதலமைச்சர் நிதிஷ்குமாரால் அனுப்பி வைக்கப்பட்ட அதிகாரிகள் தமிழ்நாடு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்படி எந்த நிகழ்வும் இல்லை என்று அவர்கள் பேட்டி அளித்துச் சென்றார்கள்.
பிரதமர் மோடிக்கு சந்தேகம் இருக்குமானால் நிதிஷ்குமாரைக் கேட்கவும்.
அல்லது இங்கே இருக்கிறாரே ஆளுநர் ரவியைக் கேட்கவும்.
'தமிழ்நாட்டு மக்கள் நல்லவர்கள். வடமாநிலத் தொழிலாளர்கள் நல்லவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது' என்று அப்போது அறிக்கை வெளியிட்டார் ஆளுநர் ரவி. இது வடமாநிலத்தவர்க்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இந்தியிலும் அறிக்கையாகக் கொடுத்தார் ஆளுநர்.
அல்லது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனைக் கேட்கவும்.
வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று அறிக்கை வெளியிட்டார் வானதி.
அல்லது பா.ஜ.க.வைச் சேர்ந்த நாராயணன் திருப்பதியைக் கேட்கவும். “பீகார் மற்றும் 'வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது தமிழர்கள் தாக்குதல் நடத்துவதாக வரும் செய்திகள் அனைத்தும் தவறானது.
மற்றும் உண்மைக்கு புறம்பானது. வெட்கக் கேடானது.
தமிழர்கள் யாரையும் புண்படுத்தும் கலாச்சாரம் கொண்டவர்கள் அல்ல” என்று அறிக்கை வெளியிட்டார் அவர்.
வெட்கக் கேடான செயலை பீகாரில் போய் எதற்காக, ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் செய்ய வேண்டும்? என்ன தேவை? பீகாரில் வாங்கப்போகும் சில தொகுதிகளுக்காக இந்தியாவின் ஒட்டுமொத்த அமைதியைக் காவு கொடுக்க நினைக்கிறீர்களா?
வடமாநிலத்தில் இருக்கும் தமிழர்களை விரட்டும் திட்டமா இது? தமிழ்நாட்டில் நிம்மதியாக வாழும் வடமாநிலத்தவர் வாழ்க்கையைக் கெடுக்கும் திட்டமா இது?
தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் எதற்காக இத்தகைய வன்மம்? ஒடிசாவில் நவீன் பட்நாயக்குடன் ஒரு தமிழ் அதிகாரி இருந்தார்.
நவீன் பட்நாயக்கை அரசியல் ரீதியாக வீழ்த்த அந்த தமிழ் அதிகாரி மீது பாய்ந்தது பா.ஜ.க.. 'ஒடிசாவை ஒரு தமிழர் ஆள அனுமதிக்கலாமா?' என்று கேவலமாகக் கேட்டதையும் இந்த நாடு பார்த்தது.
‘பூரி ஜெகந்தார் கோவில் சாவியைக் காணோம், அது திருடப்பட்டு தமிழ்நாட்டில் கொண்டு போய் வைக்கப்பட்டுள்ளது' என்று சொல்லி ஒடிசாவில் பரப்புரை செய்தது பா.ஜ.க.
அதே கேவலத்தை பீகாரில் செய்கிறார்கள், 'தமிழ்நாட்டில் பீகாரிகளை துன்புறுத்துகிறார்கள்' என்று. சமூக வலைத்தளங்கள் இல்லாத காலத்தில் இதுபோன்ற பொய்களை ஊர் நம்பும். ஆனால் இன்று அடுத்த நொடியே உண்மைகள் வெளியில் வந்துவிடும்.
இது கூட பிரதமர் மோடிக்குத் தெரியவில்லை.
தமிழ்நாடு அரசியலை, அரசியலாகத்தான் எதிர்கொள்ளுமே தவிர, பா.ஜ.க.வைப் போல அப்பாவிகளைத் துன்புறுத்தி அல்ல. பா.ஜ.க.வின் தமிழின விரோத அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள பிரதமர் மோடியின் பேச்சு உதவி இருக்கிறது.
'தமிழர்களைச் சொல்லவில்லை, தி.மு.க.வினரைத்தான் சொன்னார் பிரதமர்' என்கிறார் 'மாஜி’ அண்ணாமலை.
தி.மு.க.வினர் தாக்கினார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறாரா அவர்? சாட்டையால் அடிப்பது, சாணி அள்ளுவது ஆகிய வேலைகளை மட்டும் அவர் பார்க்கட்டும் அதற்குத்தானே ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் வந்திருக்கிறார்?
பிரதமர் தனது பீகார் பேச்சை திரும்பப் பெற வேண்டும். துணிச்சல் இருந்தால் அதைத் தமிழ்நாட்டு மேடையில் சொல்ல வேண்டும்.




