நீதிக்கு தண்டனை?

ஹரியானா வாக்குத் திருட்டு பற்றி ராகுல் வெளியிட்ட ஆதாரங்கள் அதிர்ச்சி தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து. மக்கள் தீர்ப்பு திருடப்படும்போது தேர்தல் ஆணையம் மவுனம் காப்பதாகவும் கண்டனம்.

பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு. பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு.
வாக்கு திருட்டு தொடர்பான புதிய ஆதாரங்களை வெளியிட்டார் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி. ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம். 2026 தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி என மீண்டும் திட்டவட்டம்.
கரூர் கொடுந்துயருக்கு முழு பொறுபேற்க வேண்டிய விஜய் கண்ணியமற்ற முறையில் திசை திருப்ப முயற்சிப்பதாக வைகோ கண்டனம். விஜயின் நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும் என்று எச்சரிக்கை.
கோவை மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் வரும் 19-ம் தேதி வரை சிறை. கோவை குற்றவியல் நீதிமன்ற உத்தரவை அடுத்து சிறையில் அடைப்பு.
ஒசூரில் பெண் தொழிலாளிகள் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய இளம்பெண் கைது. வீடியோவை பகிர்ந்த ஆண் நண்பரை தேடுகிறது போலீஸ்
சென்னை ராயப்பேட்டையில் பைக் ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு. ஃபேன்சி ஸ்டோர் கடை நடத்தி வந்தவரும் உயிரிழந்த பரிதாபம்; மற்றொரு இளைஞரின் கால் துண்டானது.
கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
மூட்டை முடிச்சுடன் 24  மணிநேரமும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருப்பதுபோல்தஞ்சமடைந்தவர்கள் வெளியேற்றம்:  பயணிகளிடம் வழிப்பறி, செல்போன் திருட்டு அதிகரிப்பால் சிஎம்டிஏ அதிகாரிகள்  அதிரடி.





நீதிக்கு தண்டனை?

நீதிபதியை அவமதிப்பதா?

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வந்தது முதல் நீதியரசர் கவாய் அவர்களுக்கு எத்தனை அவமானங்கள் இழைக்கப்படுகிறது?


இந்திய நீதித் துறை வரலாற்றில் இத்தகைய அவமானங்களை எந்தத் தலைமை நீதிபதியும் சந்தித்தது இல்லை என்று சொல்லத்தக்க வகையில் அவர் நடத்தப்படுகிறார்.

“அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை” என்று வெளிப்படையாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றம்சாட்டி இருக்கிறார். நவம்பர் 23 ஆம் தேதியன்று அவரது பணிக்காலம் முடிகிறது.


அதற்குள் தான் அவரது வருத்தம் மிகுந்த குரல்களைத் தொடர்ந்து கேட்க முடிகிறது.

பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சேவைக்கான நிபந்தனைகளை (uniform Service Condidtions) ஒரே மாதிரியாக்கும் தீர்ப்பாய புனரமைப்பு சட்ட விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த மனுக்கள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.


மனுதாரர்கள் தரப்பு வாதங்களை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முன்வைத்து விட்டனர். இதையடுத்து ஒன்றிய அரசு சார்பில் வாதங்கள் வைக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக ஒன்றிய அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 'இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்' என்று நள்ளிரவில் மனுதாக்கல் செய்துள்ளார்கள்.


உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அமர்வு ஒரு வழக்கின் விசாரணையை நடத்தி வரும் போது, அவரை அவமானப்படுத்தும் வகையில் 'இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்' என்று கோருவது ஒன்றிய அரசின் குணத்தைக் காட்டுகிறது.


இப்படி ஒரு மனுவைத் தாக்கல் செய்ய இருப்பதாக அட்டர்னி ஜெனரல் தன்னிடம் சொல்லவில்லை என்றும் தலைமை நீதிபதி வருந்தி இருக்கிறார்.

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கோபம் அடைந்தார். “நீதிமன்றத்திடம் விளையாடும் வித்தை மற்றும் நிலைப்பாட்டை அரசிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு வழக்கில் மனுதாரர்களின் வாதங்கள் முடிந்த பிறகு ஒன்றிய அரசு இத்தகைய கோரிக்கையை வைப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதனை ஏற்க முடியாது. இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்.” என்று துணிச்சலாக அறிவித்தார் தலைமை நீதிபதி.


“அரசுக்கு, எதிரான வழக்கை எனது அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை என்று நினைக்கிறேன். விரைவில் நான் ஓய்வு பெறப்போவதால் ஒன்றிய அரசு இப்படியான செயலை எடுத்து இருக்கலாம்” என்று வெளிப்படையாக தலைமை நீதிபதி வருந்தியது இதுவரை காணாத சொற்கள் ஆகும்.


இதற்கு அட்டர்னி ஜெனரல், “ஒருபோதும் எங்களுக்கு அப்படியான நோக்கம் இல்லை. இந்த வழக்கில் சட்ட ரீதியான சில கேள்விகள் உள்ளதால்தான் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வை கேட்டோம்.


இதனால் அரசியலமைப்பின் பிரிவு 145(3) இன் படி வழக்கை ஐந்து நீதிபதிகளுக்குக் குறையாத அமர்வுக்குப் பரிந்துரைக்க வேண்டும். நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை" என்றார்.

இதை கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “சட்ட ரீதியான கேள்விகள் அதிகம் இருப்பின் அதனை பெரிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தால் நாங்களே அந்த முடிவுக்கு வருவோம். வழக்கை 5 நீதிபதிகள் கொண்டஅமர்வுக்கு மாற்றுவோம். அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை” என்று வருந்தி இருக்கிறார்.

இதற்கு அட்டர்னி ஜெனரலால் முறையான பதிலைச் சொல்ல முடியவில்லை.


குடியரசுக் கட்சித் தலைவர் ஆர்.எஸ்.கவாயின் மகன் இவர். உச்ச நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி பூஷன் கவாய் பல வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.


2024 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) இடஒதுக்கீடு கட்டமைப்பிற்குள் துணை வகைப்பாடு அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்படுகிறது என்ற ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. நீதிபதி பூஷன் கவாய் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தார்.


தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் நன்கொடையாளர்களின் பெயர் வெளியிடப்படாதது அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) இன் கீழ் குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக தீர்ப்பு வழங்கிய அந்த அமர்வின் ஐந்து நீதிபதிகளில் நீதிபதி பி.ஆர்.கவாய் இருந்தார்.


உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் சொத்துகளை அழிப்பது சட்டவிரோதமானது என்று கூறி, இடிக்கும் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.


அதே நேரத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்தும், காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட 370 ஆவது சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதை ஆதரித்தும் தீர்ப்பளித்த அமர்விலும் இவர் இருந்துள்ளார்.


இத்தகைய நீதியரசர் கவாய் மீது டெல்லி வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் (71) என்பவர், கடந்த மாதம் காலணியை வீசினார். அதற்கு அவர் சொன்ன காரணம்தான் கவனிக்கத்தக்கது. “சனாதன தர்மத்தை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது” என தொடர்ந்து கத்தி கூச்சல் போட்டுள்ளார் அந்த வழக்கறிஞர்.


அவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 'நம்மூரில் இப்படி வீச முடிய வில்லையே' என்று உள்ளூர் சனாதனிகள் வருந்திக் கொண்டு இருக்கிறார்கள்.


எத்தகைய மோசமான சூழலை நீதிபதிகள் கூட சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அனுபவிக்கும் கொடுமைகள் மூலமாக அறிய முடிகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை