வங்கிக் கணக்கு வாடகைக்கு...
இன்றைய நடப்புகள்.
வங்கிக் கணக்கு வாடகை மூலம்
200 கோடிகள் மோசடி!
வீடு, கடை, கார், பங்களா போன்றவற்றை வாடகைக்கு விடுவது போல் இப்போது, குஜராத்தில் வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விடும் புதிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை குஜராத் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
இந்தக் கணக்குகள் குஜராத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவை. பெரும்பாலான கணக்குகள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமானவை.
தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற இன்னும் பல வங்கிக் கணக்குகள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்பு உள்ளது.
குஜராத் சைபர் கிரைம் பிரிவு நடத்திய விசாரணையில், சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மக்களை ஏமாற்றி, போலியான வேலை வாய்ப்பு அறிவிப்புகள், ஃபிஷிங் மோசடிகள் மூலம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. சிலரிடம் 'டிஜிட்டல் கைது' என்ற பெயரிலும் பணம் பறித்துள்ளனர்.
வங்கிக் கணக்கை வாடகைக்கு எடுப்பது என்பது, ஒருவரிடம் இருக்கும் வங்கி கணக்கின் லாகின் ஐடி, பாஸ்வேர்டு போன்ற விவரங்களை மற்றொருவருக்கு கொடுத்து, அந்தக் கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் செய்ய அனுமதிப்பதைக் குறிக்கிறது.
காவல்துறையினர் வழங்கிய தகவலின்படி, இதுபோன்ற கணக்குகள் சைபர் குற்றவாளிகளுக்கு பணத்தை மாற்ற உதவுகின்றன எனத் தெரியவருகிறது.
இதுபோன்ற வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விடுபவர்களை சைபர் கிரைம் மொழியில் 'மணி ம்யூல் ' ('Money Mule') என்றும், அத்தகைய கணக்குகள் 'ம்யூல் கணக்குகள்' ('Mule Account') என்றும் அழைக்கப்படுகின்றன.
சைபர் குற்றங்களில் பாதிக்கப்படும் நபர்கள் தங்கள் பணத்தை 'மியூல் கணக்கில்' டெபாசிட் செய்வார்கள்.
இந்த வழக்கை விசாரித்து வரும் மாநில சிஐடி குற்றப்பிரிவின் சைபர் குற்றப் பிரிவு, சர்வதேச சைபர் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை கைது செய்துள்ளது.
மகேஷ் சோலங்கி, ரூபின் பாட்டியா (மோர்பி), ராகேஷ் லானியா, ராகேஷ் தகாவாடியா (லக்தார், சுரேந்திரநகர்), நவ்யா கம்பாலியா, பங்கித் கதாரியா (சூரத்) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலர் தங்கள் வங்கி கணக்குகளை மாதம் ₹25,000க்கு வாடகைக்கு விட்டிருந்தனர் அல்லது ஒரு லட்சம் ரூபாய் பரிவர்த்தனைக்கு ₹650 ரூபாய் 'கமிஷன்' பெற்றிருந்தனர் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
சைபர் மோசடி மூலம் பெறப்பட்ட பணம் முதலில் இந்த கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டு, பின்னர் அது மோர்பி, சூரத், துபாய் போன்ற இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
நிதி புலனாய்வு பிரிவு (Financial Intelligence Unit) மற்றும் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவுகள், வங்கி கணக்குகளில் நடைபெறும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
அவ்வாறு தரவுகளை ஆய்வு செய்யும் போது, சுரேந்திரநகரின் லக்தர் பகுதியில் உள்ள ஏபிஎம்சியில் செயல்படும் 'சிவம் டிரேடிங்' என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் அசாதாரணமான பணப் பரிவர்த்தனைகள் நடந்தது காவல்துறைக்கு தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்த விசாரணையில், இந்த பெரிய அளவிலான மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
"இப்படி ஒரு கணக்கு பற்றி எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன், எங்கள் உளவுத்துறை பல மாதங்கள் அமைதியாக கண்காணிக்கும். இந்தக் கணக்கை நாங்கள் சுமார் ஒன்றரை மாதங்களாகக் கண்காணித்து போதுமான ஆதாரங்கள் கிடைத்த பிறகுதான் அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டது.
இதுபோன்ற ஒரு மியூல் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டவுடன், அது மோர்பியில் உள்ள ஏதாவது ஒரு வங்கிக் கிளையிலிருந்தும் எடுக்கப்பட்டு, லட்சக்கணக்கான ரூபாய் அங்கடியா வழியாக சூரத்துக்கு அனுப்பப்பட்டது என்றும், அங்கு அந்தத் தொகை கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு, துபையில் உள்ள ஒருவருக்கு டெலிவரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
துபையில் கிரிப்டோகரன்சி வடிவில் சென்ற பணம் யாரைச் சென்றடைகிறது என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சிபிஐயின் ஆபரேஷன் சக்ரா-V இன் கீழ் தேசிய அளவிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஜூன் 2025 இல், ராஜஸ்தான், டெல்லி, ஹரியாணா, உத்தராகண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தில் 42 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
டிஜிட்டல் கைதுகள், போலி விளம்பரங்கள், யூபிஐ அடிப்படையிலான மோசடி மற்றும் மியூல் கணக்குகளின் வலையமைப்பு ஆகிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
வங்கிக் கணக்குகளை தொடங்கும் போது கேஒய்சி விதிகள் மீறப்பட்டிருந்தது என சிபிஐ தெரிவித்துள்ளது.
பல்வேறு கணக்குகளை வைத்திருப்பவர்கள் தவறான முகவரிகளை கொடுத்திருந்தனர், வங்கி மேலாளர்கள் உயர்நிலை கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
சில வங்கி ஊழியர்கள், முகவர்கள் மற்றும் இணைய நண்பர்கள் கமிஷனுக்காக மியூல் கணக்குகளைத் திறக்க உதவி செய்துள்ளனர்.
இந்த சோதனைகளின் போது மொபைல் போன்கள், கேஒய்சி ஆவணங்கள், பரிவர்த்தனை தரவுகள் மற்றும் வங்கி கணக்கு தொடங்கியதற்கான ஆவணங்களை சிபிஐ பறிமுதல் செய்தது.
நாடு முழுவதும் சுமார் 700 வங்கிகளின் பல்வேறு கிளைகளில் இதுபோன்ற 8.5 லட்சம் மியூல் கணக்குகள் இருப்பது தெரியவந்தது.
குஜராத்தில் மட்டும் 200கோடிகள் இந்த வாடகை வங்கிகணக்கில் கொ மாறியுள்ளது.
இந்தியா முழுக்க இம்முறை பயன்படுத்தப்பட்டுள்ளதா தெரிகிறது.
ஒட்டுமொத்தம் கைமாறியப் பணம் ஆயிரம் கோடிகளைக் கடக்கலாம்.












