பீகார் ரெயில் மர்மம்?

நாளை யார்?

பீகார் சட்டசபை தேர்தல், நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்று, அம்மாநில வரலாற்றில் இல்லாத அளவிற்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.


இதனால், ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற கருத்துகள் இருந்தாலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், நிதிஷின் ஆட்சியே தொடரும் என்று கூறுகின்றன. இதனால், பீகார் தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.


நாளை வாகை சூடப் போவது யார்.? .

பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளில், இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக கடந்த 6-ம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்று பீகார் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவானது.


இதைத் தொடர்ந்து, கடந்த 11-ம் தேதி மீதமுள்ள 122 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில், முதல் கட்டத்தையும் மிஞ்சி 68.76 சதவீத வாக்குகள் பதிவானது. இதையடுத்து சராசரியாக 66.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.


பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுவதால், இந்திய அரசியல் களமே பரபரப்பில் உள்ளது. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.


இதற்காக, மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 38 மாவட்டங்களில் 57 எண்ணிக்கை மையங்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.


மேலும், ஒவ்வொரு மையத்திலும் CCTV கண்காணிப்பு மற்றும் மின்தளத்தில் (EVM) தரவு சரிபார்ப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் results.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்படும்.


243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபையில், ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. வாக்கு எண்ணிக்கையில் முன்னணி நிலவரங்களின் போக்கை வைத்து, பீகாரில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது நாளை பிற்பகலில் தெரிந்துவிடும். மாலைக்குள் முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பீகார் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிக 66.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும் போது, அதைவிட 9.62 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன.

இதனால், பாஜக கூட்டணி ஆட்சியை இழக்கும் என்ற கருத்து நிலவுகிறது.


ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணப்புகளில், பெரும்பாலும் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, பீகார் வரலாற்றை திருப்பிப் பார்த்தால், 5 சதவீத அளவில் வாக்குப்பதிவு அதிகரிக்கும் போதெல்லாம், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் மூலம் தெரியவருகிறது.


இதற்கு முன்னதாக, 1962 தேர்தலைவிட 1967-ல் நடந்த தேர்தலில் 7 சதவீதம் வாக்குப்பதிவு உயர்ந்ததைத்  தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. அப்போது, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளனர்.


1977 தேர்தலைவிட, 1980 தேர்தலில், வாக்குப்பதிவில் 6.8 சதவீதம் அதிகம் பதிவான நிலையில், ஜனதா தளம் ஆட்சியை இழந்தது. அதேபோல், 1985 தேர்தலை விட, 1990 தேர்தலில் 5.8 சதவீத வாக்குப்பதிவு அதிகரித்தபோது, காங்கிரஸ் ஆட்சியை இழந்து, லாலு பிரசாத் யாதவ்வின் ஜனதா தளம் ஆட்சிக் கட்டிலில் ஏறியது.


இப்படிப்பட்ட சூழலில், தற்போது நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில், 9 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனால், பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதையே வரலாறு சொல்கிறது.


ஒட்டுமொத்தமாக அனைத்து மாநில தேர்தல்களையும் ஒப்பிடும்போது, பெரும்பாலும், அதிகப்படியான வாக்குகள் பதிவாகும்போது, ஆட்சி மாற்றம் ஏற்படும் என்தே வரலாறாக உள்ளது.


ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணப்புகளில் பெரும்பாலானவை பாஜக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளது. இதனால் சற்று குழப்பமான நிலையே ஏற்பட்டுள்ளது.


இத்தகைய சூழலில், கருத்துக் கணிப்பின் படி, பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி.(யு)-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா அல்லது கணிப்புகளை பொய்யாக்கி தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சியை அதிரடியாக கைப்பற்றி, 20 ஆண்டு கால நிதிஷின் ஆட்சிக்கு முடிவு கட்டுமா என்பதே தற்போது இந்திய அளவில் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

 








பீகார் ரெயில் மர்மம்?

பீகாரில் நவம்பர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஹரியானாவிலிருந்து பீகாருக்கு நான்கு சிறப்பு ரயில்களை இயக்கியதாக மத்திய அரசு, ரயில்வே அமைச்சகம் மற்றும் பாஜகவை கபில் சிபல் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

சிபல் இதை "முறையான மோசடியின் முறை" என்றும், தேர்தலுக்கு முன்பு இது ஒரு பெரிய மோசடி என்றும் கூறியுள்ளார். இந்த ரயில்களை யார் முன்பதிவு செய்தார்கள், யார் கட்டணம் செலுத்தினார்கள் என்பதை நாட்டுக்கு விளக்குமாறு ரயில்வே அமைச்சருக்கு அவர் சவால் விடுத்தார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பு, நவம்பர் 3 ஆம் தேதி, காலை 10 மணிக்கு கர்னாலில் இருந்து புறப்பட்ட ஒரு ரயில், பானிபட் வழியாக பரூனியை அடைந்து 1,500 பேரை ஏற்றிச் சென்றதாக கபில் சிபல் கூறினார்.

 அதே நாளில் காலை 11 மணிக்கு கர்னாலில் இருந்து பாட்னா வழியாக பாகல்பூருக்கு மற்றொரு ரயில் புறப்பட்டது. அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு குருகிராமில் இருந்து மூன்றாவது ரயில் புறப்பட்டு பாட்னா வழியாக பாகல்பூரை அடைந்தது.

 மேலும், நான்காவது ரயில் குருகிராமில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டது. மொத்தம் 6,000 பேர் இந்த ரயில்கள் வழியாக பீகாருக்கு பயணம் செய்தனர். "எனவே, ரயில்வே அமைச்சரிடம் நான் கேட்க விரும்புகிறேன்: 

இந்த சிறப்பு ரயில்கள் நவம்பர் 3 ஆம் தேதி இயக்கப்பட்டனவா? அப்படியானால், அவை ஏன் ஹரியானாவிலிருந்து இயக்கப்பட்டன? சாத்தின் போது இல்லையென்றால், நவம்பர் 3 ஆம் தேதி ஏன் இயக்கப்பட்டன?"

"இவர்கள் அனைவரும் உண்மையான வாக்காளர்களாக இருந்தால், அவர்கள் தங்கள் சொந்த செலவில் பீகாருக்குப் பயணம் செய்திருப்பார்கள். ஆனால் அவர்களை அனுப்ப சிறப்பு ரயில் ஏன் இயக்கப்பட்டது? 

6,000 பேர் பீகாருக்குச் சென்றிருந்தால், வழியில் அவர்கள் எங்கு ஏறி இறங்கினார்கள்? இந்தப் பயணிகளை யார் முன்பதிவு செய்தார்கள் என்பதை ரயில்வே அமைச்சர் விளக்க வேண்டும். அவர்கள் தங்குவதற்கு எங்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டன?"

"இரண்டாம் கட்டத் தேர்தலிலும் இந்த மக்கள் வாக்களிப்பார்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம். தேர்தல் ஆணையத்திடம் இருந்து எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, ஏனெனில் அது பாஜகவின் கூட்டாளி. எனவே, ரயில்வே அமைச்சரிடமிருந்து இதை நாங்கள் அறிய விரும்புகிறோம்" என்று கபில் சிபல் கூறினார்.

இதற்கிடையில், ஆர்ஜேடி எம்பி ஏடி சிங் கூறுகையில், "இவர்கள் அனைவரும் தேர்தல் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு, வாக்களித்து, பின்னர் திரும்பி வரும் தொழில்முறை வாக்காளர்கள். அவர்கள் அனைவரும் போலியான EPIC அட்டைகளை வைத்திருக்கிறார்கள். 

இந்த வாக்காளர்களை ஹரியானாவிலிருந்து பீகாருக்கு கொண்டு செல்ல பாஜக தலைவர் மோகன் லால் மற்றும் மாநில பாஜக பொதுச் செயலாளர் அர்ச்சனா குப்தாவைத் தொடர்பு கொள்ளுமாறு வடக்கு ரயில்வே மூத்த அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது" என்றார்.

'நீங்கள் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைப் பார்த்திருக்கிறீர்கள், பொருளாதாரம் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு காலம் வரும்,

 மக்கள் தெருக்களில் இறங்கி நம்மை வெற்றி பெறச் செய்வார்கள்' என்று அவர் கூறினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை