SIR அழுத்த சாவுகள்!

 அதிகரிக்கும் அலுவலர் எதிர்ப்புகள்!

அதிகப்படியான வேலைப்பளு மற்றும் டார்கெட்டை எதிர்த்து, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் (SIR) ஈடுபட்டுள்ள பூத் நிலை அலுவலர்கள் (BLOs) மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

கேரளா, தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பணிச்சுமை காரணமாக 2 பூத் அலுவலர்கள் உயிரிழந்த நிலையில், ஊழியர்கள் தங்கள் பணியைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளனர்.

கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூத் அலுவலர் அனீஷ் ஜார்ஜ் (44), டார்கெட் நெருக்கடியால் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் உள்ள பூத் அலுவலர்கள் திங்கள்கிழமை தங்கள் பணியைப் புறக்கணித்தனர். மாநில அரசு ஊழியர்கள் மற்றும் சிபிஐ (எம்), காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் திருத்தப் பணியைத் தள்ளிவைக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 எனினும், மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையில், அனீஷ் ஜார்ஜ் மீது வேலை அழுத்தம் இல்லை; அவர் படிவங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நிலைமை மோசமடைந்துள்ளதால், வருவாய் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) இன்று (நவ.18) முதல் வாக்காளர் திருத்தப் பணியை மாநிலம் தழுவிய அளவில் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

 மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும், திருத்தப் பணிக்கு அதிக அவகாசம், கூடுதல் பணியாளர்கள், கூட்டங்கள் மற்றும் கட்டாய விடுமுறை நாள் வேலைகளை ரத்து செய்தல் மற்றும் ஒரு மாத சம்பளத்திற்கு இணையான மதிப்பூதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வருவாய் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முன்வைத்துள்ளது.

ஊழியர்கள் பருவமழை நிவாரணப் பணிகள், கட்டுப்பாட்டு அறைப் பணிகள் எனப் பல பணிகளைச் செய்து வருவதால், வாக்காளர் திருத்தப் பணிக்கு நேரமில்லாமல் தவிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

 வருவாய்த் துறை ஊழியர்கள் மட்டுமின்றி, மதிய உணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பூத் அலுவலர்களாகப் பணியாற்றும் துறைகளின் சங்கங்கள் இந்தப் புறக்கணிப்பில் இணைகின்றன.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், பூத் அலுவலராக நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் முகேஷ் ஜாங்கிட் (45), ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட கடிதத்தில், "சிறப்புத் திருத்தப் பணியின் இலக்கை முடிக்கவில்லை என்றால் இடைநீக்கம் செய்யப்படுவீர்கள் என்று மேற்பார்வையாளர் கொடுத்த கடும் அழுத்தம்" காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநில ஊழியர் சங்கங்கள், அளவுக்காக அல்லாமல் தரத்துக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்க முதல்வர் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

 இந்த சம்பவம் 3 மாநிலங்களிலும் தேர்தல் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகள் குறித்துப் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை