13ஆண்டுகள் விசாரணை.!

*மதுரை திருநகர் மேலமடை சந்திப்பில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயரை சூட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மேம்பாலம் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


*டித்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ரூ.1.19 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். சர்க்கரை, பருப்பு பொருட்கள், புடவைகள், வேட்டிகள், போர்வைகள், தார்ப்பாய்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


*திருச்செந்தூரில் இன்று திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால், கடலுக்குள் இருக்கும் பாசிபடிந்த பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வெளியே தென்பட்டன. இருப்பினும் ஆபத்தை உணராத பக்தர்கள் சிலர், பாசிபடிந்த பாறைகள் மீது ஏறி நின்றவாறு தங்களது செல்போனில் புகைப்படங்களை எடுத்தனர்.



*தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, குமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


*யார் வந்தாலும் மக்கள் மனசில் ரெண்டே ரெண்டு பேர் தான்; ஒன்னு இன்றைக்கு இருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினா, இல்லை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியா என்றுதான் மக்கள் பார்ப்பார்கள். ஒட்டு போடுவதற்கு முன்னாள் மற்றவர்களை மக்கள் பார்க்கமாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 


*இருப்பிடங்கள் குலைந்து, உடமைகள் இழந்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கை மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தாங்கள் ஈந்த பெரும் உதவி பல லட்சம் இலங்கை மக்களின் மீட்சிக்கு உதவும்; வரலாற்றில் நிலைக்கும்
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பியதற்காக மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, இலங்கையின் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் செந்தில் தொண்டமான் கடிதம்


 *கும்பகோணம் பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 12ஆம் வகுப்பு மாணவர் கவியரசன் உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்திய 11ஆம் வகுப்பைச் சேர்ந்த 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.


*சென்னை வானகரத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த நபர்களுடன் தொடர்பில் இருந்த கூடன் மற்றும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மொஹஷ்த் மோவியா, நாஜி லோட்ச்க்கவு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்..

*இருமி சளி வரும்போது நீங்கள் அதை விழுங்கினாலும், எந்தத் தீங்கும் இல்லை. பயம் வேண்டாம்.உங்கள் வயிறு அதை எளிதாகச் செரித்துவிடும்.நீங்கள் இருமி வெளியேற்றும் சளி அடர் பழுப்பு நிறமாக இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டும், ஏனெனில் அதில் "சிறிதளவு ரத்தம் இருக்கலாம்".பெரும்பாலான மார்புச் சளிகள் பொதுவாகச் சில வாரங்களுக்குப் பிறகு ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லாமலே சரியாகிவிடும், ஆனால் அது மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவரை அணுகவேண்டும்.

*தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரையிலும், இடையே 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.தமிழக மீனவர்கள் டிச.8 முதல் 10ஆம் தேதி வரை எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் தகவல்.

13ஆண்டுகள் விசாரணை.!


ராமஜெயம் கொலை செய்யப்பட்டு சுமார் 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்த வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. டி.ஐ.ஜி வருண்குமார் திருச்சியில் தீவிர விசாரணை நடத்தி உள்ளார்.


ராமஜெயம் கொலை வழக்கு தொடா்பாக சி.பி.சி.ஐ.டி டி.ஐ.ஜி வருண்குமார் திருச்சியில் வியாழக்கிழமை இரவு தீவிர விசாரணை நடத்தி உள்ளார்.

திருச்சி பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள தியேட்டர் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.

தி.மு.க முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம்.


இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தனது வீட்டில் இருந்து அதிகாலை வாக்கிங் சென்ற போது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம் முட்புதரில், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் ராமஜெயம் உடல் கண்டெடுக்கப்பட்டது.


இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் துப்புத் துலக்க முடியாமல் போலீசார் திணறினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் விசாரணை இன்னும் நீண்டு வருகிறது.


பல ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை. இந்த வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தமிழக போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.


சில மாதங்களுக்கு முன் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் தஞ்சாவூர் எஸ்.பி. ராஜாராம் ஆகியோரை உயர்நீதிமன்றம் விசாரணை அதிகாரிகளாக நியமித்தது.


அதன்படி விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடா்பாக சிபிசிஐடி டிஐஜி வருண்குமார், ஏற்கெனவே திருச்சி, மதுரை, நெல்லை, புழல் உள்ளிட்ட மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார்.


இந்த நிலையில், சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் நேற்று முன்தினம் இரவு திருச்சி பாலக்கரையில் உள்ள பிரபல தியேட்டருக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். அங்கு தியேட்டரின் உரிமையாளர் மற்றும் தியேட்டரில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி உள்ளார்.


ராமஜெயம் கொலை தொடர்பாக இந்த தியேட்டரில் வைத்து சதி திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு ரவுடி குறித்தும் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

5 மணி விசாரணைக்கு பின், டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குழுவினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.


இந்த தியேட்டர் ராமஜெயம் கொலை நடந்த 2012 ஆம் ஆண்டில், சசிகலா உறவினர் திவாகருக்கு சொந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு திரையரங்கை வேறு சிலருக்கு குத்தகைக்கு விட்டுள்ளனர்.

சில ஆண்டுகள் செயல்படாமல் இருந்த அந்த திரையரங்கு புனரமைப்பு செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டுக்கு பின்பு மீண்டும் செயல்படத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 


டி.ஐ.ஜி வருண்குமாரின் விசாரணையில் இந்த தியேட்டர் குறித்து சில தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில் அங்கு தீவிர விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை