மோதல் பாத்?
முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி போன்ற வடிவம் கொண்ட புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், கொல்கத்தாவில் இன்று 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கீதை பாராயண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அரசியல் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான நேற்றைய தினம் (டிசம்பர் 6), முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டாங்காவில் பாபர் மசூதியை போன்ற வடிவிலான புதிய மசூதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'வகுப்புவாத அரசியல் செய்கிறார்' எனக் கூறி திரிணாமுல் காங்கிரஸ் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஹுமாயூன் கபீர் கூறுகையில், 'கோயில் அல்லது தேவாலயம் கட்டுவதைப் போலவே மசூதி கட்டுவதும் அரசியலமைப்புச் சட்டம் எனக்கு வழங்கியுள்ள உரிமையாகும். சட்டப்பிரிவு 26(ஏ)-ன் கீழ் பொது அமைதிக்கு பாதிப்பில்லாமல் மத நிறுவனங்களை நிர்வகிப்பது தவறல்ல' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அவர் விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தை திரிணாமுல் காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியல் என்று பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் ஏற்படுத்திய அனல் தணிவதற்குள், கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகவத் கீதை பாராயண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சனாதன சம்ஸ்கிருதி சன்சத் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில், கீதை சுலோகங்களை உச்சரிக்க உள்ளனர். மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஆன்மீக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆன்மீக நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ், தீரேந்திர சாஸ்திரி மற்றும் சுவாமி ஞானானந்தாஜி மகராஜ் உள்ளிட்ட முக்கிய ஆன்மீகத் தலைவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஆன்மீக நோக்கம் கொண்டது என்றும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலேயே நடத்தப்படுகிறது என்றும் அமைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தேர்தல் நெருங்கும் வேளையில் நடைபெறும் இந்த நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற நிகழ்வுகளை 'மதரீதியான போட்டி' என்று திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ஒரே நேரத்தில் ஒரு பக்கம் மசூதிக்கு அடிக்கல் நாட்டுவதும், மறுபக்கம் பிரம்மாண்ட கீதை பாராயணம் நடைபெறுவதும் மேற்கு வங்க அரசியலில் கலவர மோதல் போக்கைஉருவாக்கியுள்ளது.
மதுரை மா'மதுரை!
மதுரையின் வளர்ச்சிக்காக ஆறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திட்டங்களை அறிவித்துள்ளது மட்டுமல்லாமல் அவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட குறிப்பாக தொழில் முதலீட்டாளர் மாநாடு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து பொதுமக்களிடையே உரையாற்றிய அவர் மதுரையில் வளர்ச்சிக்காக ஆறு நலத்திட்டங்களை அறிவித்தார்.
அந்த வகையில்,"மதுரை மாநகரில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பல காலமாக எதிர்பார்க்கப்பட்ட வைகை ஆற்றின் வடகரையில், விரகனூர் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு 130 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்படும்.
மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான, மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி இருக்கின்ற நான்கு மாசி வீதிகள், வெளி வீதிகள், புதூர், அண்ணா நகர், சந்தைப்பேட்டை, தெற்குவாசல், எஸ்.எஸ்.காலனி, ஆரப்பாளையம், அரசரடி, பழங்காநத்தம், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில், இப்போது இருக்கின்ற பழைய பாதாளசாக்கடைக் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை கிழக்கு வட்டத்தில் இருக்கின்ற உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில், 7 கோடி ரூபாய் செலவில், தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலூர் வட்டத்தில் இருக்கின்ற, கேசம்பட்டி கிராமம் - பெரிய அருவி நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சார்ந்த கண்மாய்கள் 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
மேலும், மேலூர் வட்டம், சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
மதுரை மேற்கு வட்டத்தில் இருக்கின்ற கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம் மற்றும் விளாச்சேரி கிராமங்களில் இருக்கின்ற பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்கள் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தில், சாத்தையாறு அணை முதல் வைகாசிப்பட்டி வரை இருக்கக்கூடிய சாலை, குடுவார்பட்டி முதல் சல்வார்பட்டி வரை இருக்கக்கூடிய சாலை மற்றும் பாலமேடு முதல் வேம்பரலை வரை இருக்கக்கூடிய சாலை ஆகியவை 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் வனத்துறையின் அனுமதி பெற்று அவைகள் மேம்படுத்தப்படும்.
இந்த அறிவிப்புகளை எல்லாம் நான் வெறும் அறிவிப்புகளாக அறிவித்துவிட்டுப் போகிறேன் என்று நினைக்காதீர்கள். இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்" என கூறினார்.











