பாசிஸ்டுகளின் பாச்சா பலிக்காது’ –

கமலாலயம் எழுதிக் கொடுக்கும் அறிக்கையை அதிமுக லெட்டர்பேடில் வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி. கோவையில் திமுக மேற்கு மண்டல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

புதிய கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் அதிமுகவின் பலம் தெரியாமல் பேசுகிறார்கள். திருத்தணி கூட்டத்தில் தவெக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய எடப்பாடி பழனிசாமி. 
திருத்தணியில் புலம் பெயர் தொழிலாளரை கத்தியால் தாக்கிய 3 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு. தாக்குதல் தொடர்பான வீடியோவை சமூக ஊடக தளங்களில் பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்.
பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு. அன்புமணியை சரியாக வளர்க்கவில்லை எனக்கூறி வேதனை.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்றும் ஆஜராக உத்தரவு.
120 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் பினாகா ஏவுகணை. வெற்றிகரமாக சோதனை செய்தது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு.
.
உத்தரப்பிரதேசத்தில் சாலையில் காரை நிறுத்தி தம்பதியினரை மிரட்டிய பெண் போலீஸ் அதிகாரி. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு.
டெல்லியில் அதீத பனிமூட்டத்திற்கான சிவப்பு எச்சரிக்கை. கடும் பனி காரணமாக விமானம், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதிப்பு.
 மத்தியப் பிரதேசத்தில் வீட்டின் படுக்கையில் படுத்து ஓய்வெடுத்த புலி. அருகே உள்ள புலிகள் காப்பகத்தில் இருந்து ஊருக்குள் புகுவதால் கிராம மக்கள் அச்சம்.
மும்பையில் பின்னோக்கி இயக்கப்பட்ட பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு. படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி.
  புதின் இல்லம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு. டிரோன்கள் நடுவானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் தகவல்.






பாசிஸ்டுகளின் பாச்சா பலிக்காது’ – உதயநிதி ஸ்டாலின்

2026 தேர்தல் அடிமைகளையும், பாசிஸ்டுகளையும் மீண்டும் நாம் விரட்டி விரட்டி அடிக்க வேண்டிய தேர்தல். ‘பாசிஸ்டுகளின் பாச்சா என்றென்றும் தமிழ்நாட்டில் பலிக்காது’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக மகளிர் அணியினர் 1.5 லட்சம் பேர் பங்கேற்ற மேற்கு மண்டல மாநாடு   பல்லடத்தில் நடைபெற்றது. ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்றது.


இம்மாநாட்டுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி தலைமை வகித்தார்.


இம்மாநாட்டில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த 14ஆம் தேதி திருவண்ணாமலையில் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம் சுமார் 1 லட்சத்து 30000 இளைஞரணி நிர்வாகிகள் அந்த சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு ஒரு மாநாடு போல நிகழ்ச்சி நடந்தது.


அந்த எழுச்சியை பார்த்து, அந்த மக்கள் கடலை இளைஞர்கள் கடலை பார்த்து, ஒரு பத்து நாட்கள் சங்கி கூட்டமும் அடிமை கூட்டமும் புலம்பிக்கொண்டே இருந்தது. இன்று பல்லடத்தில் கடல் போல் கூடியிருக்கக்கூடிய நம்முடைய மகளிர் மாநாட்டை பார்த்தால் அந்த சங்கி கூட்டமும், அடிமை கூட்டமும் அடுத்த 10 நாட்களுக்கு நிச்சயமாக தூங்கப்போவது இல்லை.


நம்முடைய தலைவரின் நல்லாட்சிக்கும், தலைமைக்கும் மகளிர் மத்தியில் கிடைத்திருக்கக்கூடிய அந்த வரவேற்பிற்கு இந்த மகளிர் கடலே ஒரு சாட்சி.


இன்று தமிழக மகளிருக்கு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மகளிருக்கான உரிமைக் குரலாக நம்முடைய கழகத் தலைவரின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ மிகுந்த வைரலாக போய்க்கொண்டிருந்தது.


ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தியின் பேட்டி ஒளிபரப்பானது. காஷ்மீரில் இருக்கக்கூடிய ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்ட போது தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தனது தாய் மொழியான காஷ்மீரி மொழியில் பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்.


அப்போது ஒரு பத்திரிகையாளர் நீங்கள் ஏன் தாய் மொழியில் பேசுகிறீர்கள்? உருது மொழியில் பேசுங்கள் என்று கேள்வி எழுப்பியவுடன், மெகபூபா முப்தி அவர்கள் என்னிடம் டிரான்ஸ்லேஷன் கேட்கிறீர்களே.. உங்களுக்கு தைரியம் இருந்தால் தமிழ்நாட்டிற்கு போய் என்னுடைய சகோதரர் மு.க.ஸ்டாலினிடம் இதை கேட்கக் கூடிய தைரியம் உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்டார்.

மொழி உரிமை, மாநில உரிமை, பெண் உரிமை என்று வந்தால் காஷ்மீரில் இருப்பவர்கள் கூட தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சரின் பெயர் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும்.


ஒரு காலத்தில் கேரளாவில் உள்ள வைக்கத்தில் கோயில் தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடப்பதற்கு அனுமதி கிடையாது. கிட்டத்தட்ட 101 ஆண்டுகளுக்கு முன்பு 1924 ஆம் ஆண்டு அந்தக் கொடுமையை எதிர்த்துப் போராடியவர் தான் தந்தை பெரியார்.

அந்தப் போராட்டத்தை முடக்குவதற்காக பெரியாரை கைது செய்தனர். பெரியாரை கைது செய்துவிட்டால் அந்த போராட்டம் நீர்த்து போய்விடும் என்று அப்போதிருந்த அரசாங்கம் நம்பியது.


ஆனால் பெரியாரைக் கைது செய்த உடனேயே அந்தப் போராட்டத்தை பெரியாரின் மனைவி அன்னை நாகம்மாள் கையில் எடுத்து அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.


இப்படி திராவிட இயக்கத்தின் தொடக்கம் முதலே இந்த இயக்கத்திற்காக ஏராளமான மகளிர் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து உள்ளனர். அத்தகைய பெருமை மகளிரின் தொடர்ச்சியாக தான் இங்கு வந்திருக்கக் கூடிய அத்தனை சகோதரிகளையும் நான் பார்க்கிறேன்.

தந்தை பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்ததே இங்கு வந்திருக்கக்கூடிய மகளிர் தான்.


தந்தை பெரியார் வழியில் பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் கலைஞர் காட்டிய வழியில் இன்று நம்முடைய தலைவர் ஏராளமான திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். பேரறிஞர் அண்ணாதான் சுயமரியாதை திருமணம் செல்லும் என்று சட்டத்தை கொண்டு வந்தார்


கலைஞர் தான் இந்தியாவிலேயே முதல்முறையாக காவல் துறையில் மகளிருக்கு பணி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். அரசு தொடக்கப்பள்ளியில் மகளிர் மட்டும் தான் ஆசிரியராக வரவேண்டும் என்ற அந்த சட்டத்தை இயற்றினார்.


இந்தியாவிலேயே முதல்முறையாக 1989இல் பெண்களுக்கு குடும்ப சொத்தில் சம உரிமை என்று சட்டத்தை கொண்டு வந்த முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர். 30 ஆண்டுகளுக்கு பின்பு 2018 ஆம் ஆண்டு கலைஞர் கொண்டு வந்த சட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது.


இந்தியாவிலேயே முதல்முறையாக மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கியதும் டாக்டர் கலைஞரின் ஆட்சி தான். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததும் டாக்டர் கலைஞரின் ஆட்சி. அதை 50% ஆக உயர்த்தியது நம்முடைய முதல்வர் ஆட்சி.

அவர்கள் வழியில் முதல்வர் பதவியேற்ற உடன் அவர் போட்ட முதல் கையெழுத்து பெண்களுக்கான விடியல் பயண திட்டம்.


கடந்த நான்கரை ஆண்டுகளில் கிட்டத்தட்ட 860 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு மகளிரும் மாதம் 900 ரூபாய் சேமிக்கின்றனர்.

நம்முடைய தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் காலையில் வெறும் வயிற்றில் பள்ளி செல்லக் கூடாது என வருந்திய நிலையில் அதற்காக நமது முதல்வர் அறிமுகப்படுத்திய திட்டம்தான் முதலமைச்சர் காலை உணவு திட்டம்.


இன்று நாள் தோறும் 22 லட்சம் குழந்தைகள் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி படிக்க எந்த கல்லூரியில் சேர்ந்தாலும் அவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.1000 நம் முதல்வர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.


இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் ஒரு திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்தத் திட்டத்தை நமது முதல்வர் செயல்படுத்திய போது மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது எங்களது அண்ணன் எங்களுக்கு கொடுக்கும் தாய் வீட்டு சீர் என்று பெண்கள் உரிமை கொண்டாடினார்கள்.


இன்று ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 30 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் போய்க்கொண்டிருக்கிறது.

இப்படி மகளிருக்கு பயனளிக்கும் பல திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் தொடர்ந்து பார்த்து பார்த்து செய்து வருகிறார். இது திராவிட மாடல் பாரட் 1 மட்டும்தான்.


திராவிட மாடல் 2.0 வில் பெண்களுக்கு மேலும் பயன் அளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை நிச்சயம் நமது கழகத் தலைவர் முதலமைச்சராக பொறுப்பேற்று உங்களுக்கு கொடுப்பார்.


ஆனால் இந்த வளர்ச்சி எதுவும் பிடிக்காத ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு இன்று பல்வேறு வகையில் தொந்தரவுகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறது.


தமிழகத்திற்கு நிதி உரிமை, கல்வி உரிமை, மொழி உரிமை என்று ஒவ்வொரு மாநில உரிமைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறார்கள்.


சமீபத்தில் மகளிரின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கின்ற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஒன்றிய அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கும் நம்முடைய முதலமைச்சர்தான் இன்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.


சமீபத்தில் குஜராத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, நாங்கள் பீகாரில் ஜெயித்து விட்டோம். அடுத்து எங்களது டார்கெட் தமிழ்நாடு தான் என்று வார்னிங் கொடுக்கிறார். இங்கு திரண்டு இருக்கக்கூடிய லட்சக்கணக்கான மகளிர் முன் நான் உறுதியாகச் சொல்கிறேன்.


சுயமரியாதை மிக்க இந்த மகளிர் படை இருக்கும் வரை சங்கிகளால் தமிழ்நாட்டைத் தொட்டுக் கூடப் பார்க்க முடியாது.


தமிழ்நாடு என்பது தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய சமத்துவ பூங்கா. இங்கே அமைதியும், சகோதரத்துவமும், மத நல்லிணக்கமும் தான் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இந்த அமைதி பூங்காவிற்குள் அத்துமீறி நுழைய வேண்டும் என்று பாசிச சங்கிகள் நினைத்தால் அவர்களை எப்படி விரட்டி அடிக்க வேண்டும் என்ற டிரிக் நம்முடைய தலைவர் அவர்களுக்கு தெரியும்.


தமிழக அமைதியை சீர்குலைக்க ஒருபோதும் நாம் அனுமதிக்க மாட்டோம். பாசிச சக்திகளுக்கு சலாம் போட்டு தமிழ்நாட்டின் கதவுகளை திறந்து விட நாம் ஒன்றும் அண்ணா திமுக கிடையாது. அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்ற கழகம். கலைஞர் வளர்த்தெடுத்த திராவிட முன்னேற்ற கழகம். தலைவர் அவர்களால் வழி நடத்தப்படுகின்ற திராவிட முன்னேற்ற கழகம். ஆகவே பாசிஸ்ட்களின் பாச்சா என்றென்றும் தமிழ்நாட்டில் பலிக்காது. உடன்பிறப்புகள் விடமாட்டார்கள்.


பாசிஸ்டுகள் இன்று பழைய அடிமைகள், புதிய அடிமைகள் என்று எத்தனை பேரை கூட்டிக்கொண்டு வந்தாலும் தமிழ்நாடு என்றைக்குமே தலைவர் சொல்லுவது போல் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் (Out Of Control) தான்.


கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் ஒரு தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தமிழ்நாடு முழுவதும் பயணித்து மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகள் குறிப்பாக மகளிரின் தேவைகளை எல்லாம் உணர்ந்து ஒரு தேர்தல் அறிக்கையை தயாரிக்க இருக்கிறார்கள்.


இன்று திராவிட முன்னேற்ற கழகம் அந்த குழு அமைத்தவுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரு குழு அமைத்து உள்ளது.


நான் அடிமைகளை பார்த்து கேட்கிறேன் எப்படியும் எங்களுடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்து நீங்கள் காப்பியடித்து தேர்தல் அறிக்கையை விடப் போகிறீர்கள்.


அதிமுக என்ன காப்பி பேஸ்ட் செய்தாலும் பொதுமக்கள் குறிப்பாக தமிழக மகளிர் அவர்களை நம்புவதற்கு தயாராக இல்லை. ஏனென்றால் திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்றைக்கும் சொல்வதைச் செய்கின்ற அரசாகவும், செய்வதைச் சொல்கின்ற அரசாகவும் செய்து காட்டியுள்ளது.


பெண்களுடைய வாழ்க்கை முன்னேற வேண்டும் என்ற அவர்களுடைய இடத்திலிருந்து யோசித்துப் பார்த்து உழைக்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் எனவே தமிழ்நாட்டு மகளிர் எப்பொழுதும் கழகத்தின் பக்கம் உறுதியாக நிற்பீர்கள்.


அதற்கு இங்கு கடல் போல் கூடியிருக்கக்கூடிய இந்த மாநாடு சாட்சி.

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கழக அரசு அமைய இருக்கக் கூடிய மகளிர் உங்களுடைய ஆதரவையும்,உழைப்பையும் கொடுக்க வேண்டும்.


குறிப்பாக எஸ் ஐ ஆர் திட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்களை நீக்கி உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருக்கிறதா? குடும்பத்தினர், தெரிந்தவர்கள், நண்பர்களின் பெயர் எல்லாம் இருக்கிறதா என்பதை சரி பாருங்கள்.

ஒரு வேளை இல்லை என்றால் கழகத்தின் BLAக்களை அணுகி உங்களுடைய பெயர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை நீங்கள் கொடுக்க வேண்டும்.

வரும் ஜனவரி 18ஆம் தேதி வரை நமக்கு நேரம் உள்ளது. தகுதியான ஒரு வாக்காளர் பெயர் கூட விடுபட்டு விடக்கூடாது. உங்களது வாக்கு என்பது உங்களது கடமை மட்டுமல்ல.. அது உங்களின் உரிமை.


2026 தேர்தல் அடிமைகளையும், பாசிஸ்டுகளையும் மீண்டும் நாம் விரட்டி விரட்டி அடிக்க வேண்டிய தேர்தல். ஏழாவது முறையாக கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்றாலும், இரண்டாவது முறையாக நம்முடைய தலைவர் மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்றாலும் இங்கு வந்திருக்கக் கூடிய மகளிர் அத்தனை பேரும் ஒரு சபதம் எடுத்தாக வேண்டும்.


அடுத்த 100 நாட்கள் களத்தில் இறங்கி தமிழக மக்கள் ஏன் உதயசூரியன் சின்னத்திற்கு தலைவர் தலைமையிலான கூட்டணியை ஏன் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் நீங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும் .


அதற்கு இந்த மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு ஒரு அடித்தளமாக அமைய வேண்டும். “வெல்வோம் 200.. படைப்போம் வரலாறு” என்று தெரிவித்தார்.


மூன்றாண்டு தூக்கம்?

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படாதது கடும் கண்டனத்திற்குரியது. 

சென்னை பல்கலைக் கழக துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிப்பதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திருப்பி அனுப்பியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளித்து கடந்த 2022 ஏப்ரல் 25-ம் தேதி சட்டப்பேரவையில் சட்டத் திருத்த மசோதா நிறை வேற்றப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களின் சட்டங்களில் திருத்தம் செய்திட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. ஆளுநர் ஆர்.என்.ரவி அவற்றை கிடப்பில் போட்டார்.

ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. ஆளுநர்கள் மாநில சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை காலவரையின்றி கிடப்பில் போட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது அரசியலமைப்புக்கு முரணானது எனவும் தெரிவித்தது.

இதையடுத்து மசோதாக்களை, தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் மசோதாக்கள் மீண்டும் நிறை வேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை கடந்த 2023-ல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்த சென்னை பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவர், தற்போது தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்த மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படவில்லை என்பதே இதற்குக் காரணம். இது ஒன்றிய பாஜக அரசின் பாசிச இந்துத்துவா அரசியல் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

ஆளுநர்கள் மூலமாக பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில், அன்றாட செயல்பாடுகளில், பாடத்திட்டங்கள் வகுத்தலில், நேரடியாக ஒன்றிய அரசு தலையிடுகிறது.

அதைச் செய்வதற்கு, பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த ஆதரவாளர்களை துணைவேந்தர்களாக நியமித்து வருகிறது. இது நாட்டின் மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரானதாகும்.

ஆளுநர்கள் மூலமும், அவர்களின் தலையீட்டால் நியமனம் செய்யப்படும் துணைவேந்தர்கள் மூலமும், பிற்போக்கான தேசியக் கல்விக் கொள்கை - 2020 யை நடைமுறைப்படுத்திட ஒன்றிய அரசு முயல்கிறது. அதை ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழ்நாட்டில் செய்துவருகிறார்.

கல்வி நிறுவனங்களை காவிமயமாக்க வேண்டும் என்ற தனது அரசியல் உள்நோக்கத்தை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்பதற்காகவே, சென்னை பல்கலைக்கழக மசோதாவிற்கு ஒன்றிய அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தரவில்லை. தற்பொழுது அந்த மசோதா திருப்பி அனுப்பப் பட்டுள்ளது.

கல்வியில் மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் இச்செயலுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை