'கிரேட் கிரீன் வால்'

4,500 கி.மீ. நீளத்துக்கு 66 பில்லியன் மரங்கள்.. சீனாவின் 'கிரேட் கிரீன் வால்' திட்டம்

அடுத்த 25 ஆண்டுகளில் மேலும் 34 பில்லியன் மரங்களை நட சீன அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


திட்டமிட்டபடி நடந்தால், 2050-ம் ஆண்டுக்குள் இந்தச் சுவர் 4,500 கிலோமீட்டர் (2,800 மைல்கள்) நீளம் கொண்டதாக இருக்கும். இது உலகின் மிகப்பெரிய விதைக்கப்பட்ட வனப்பகுதியாகும்.


4,500 கி.மீ. நீளத்துக்கு 66 பில்லியன் மரங்கள்.. சீனாவின் 'கிரேட் கிரீன் வால்' திட்டம் சாத்தியமாக்கியது எப்படி?


வட சீனாவை மெல்ல விழுங்கிக் கொண்டிருக்கும் கோபி மற்றும் தக்லமக்கான் பாலைவனங்களின் அசுரப் பிடியிலிருந்து நாட்டை மீட்க, சீனா மெகா சுற்றுச்சூழல் போரில் இறங்கியுள்ளது. மனிதகுலத்தின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் திட்டங்களில் ஒன்றான, "பசுமைச் சுவர்" (Great Green Wall) திட்டம், 47 ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


1978-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முயற்சி, முறையாக "3 -வடக்கு அடைக்கல வனத் திட்டம்" என்று அழைக்கப்படுகிறது.

இதன் நோக்கம் எளிமையானது: மங்கோலியா, கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் எல்லைகளில் ஒரு பசுமைப் படையை உருவாக்குவது. இதுவரை, சீனா சுமார் 66 பில்லியனுக்கும் அதிகமான மரங்களை நட்டுச் சாதனை படைத்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்குள், மேலும் 34 பில்லியன் மரங்களை நட்டு, 2050-ம் ஆண்டுக்குள் இந்தச் சுவரை 4,500 கிலோமீட்டர் நீளத்திற்கு முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்த லட்சியத் திட்டம் வெற்றி பெற்றால், 1970-களின் பிற்பகுதியிலிருந்து பூமியின் வனப் பரப்பு 10% அதிகரிக்குமாம்.


வட சீனா எப்போதும் வறண்ட பகுதியாகத்தான் இருந்துள்ளது. இமயமலையின் 'மழை மறைவு' காரணமாகக் கோபி மற்றும் தக்லமக்கான் பாலைவனங்கள் இங்கு உருவாயின. ஆனால், 1950களுக்குப் பிறகு ஏற்பட்ட தீவிர நகரமயமாக்கல் மற்றும் விவசாய நில விரிவாக்கம் ஆகியவை மண்ணரிப்பை மோசமாக்கி, மணல் புயல்களைத் தூண்டிவிட்டன.

இந்தப் புயல்கள் மண்ணின் வளமான மேல் அடுக்கை அடித்துச் செல்வது மட்டுமல்லாமல், பெய்ஜிங் போன்ற பெருநகரங்களில் காற்றின் மாசுபாட்டையும் அதிகரிக்கின்றன. ராயல் ஜியோகிராஃபிகல் சொசைட்டி கருத்துப்படி, பாலைவனமயமாக்கல் விவசாய நிலங்களையும் சுற்றுச்சூழலையும் அழித்து வருகிறது.


சமீபத்தில் தக்லமக்கான் பாலைவனத்தைச் சுற்றித் தாவரங்களால் முழுமையாகச் சூழ்ந்துவிட்டதாக அரசு அறிவித்து உள்ளது.


இது மணல் மேடுகளை நிலைப்படுத்தவும், சீனாவின் வனப்பரப்பை 1949-ல் இருந்த 10%-லிருந்து இன்று 25%க்கும் மேலாக உயர்த்தவும் உதவியுள்ளது. ஆனால், கள நிலவரம் இன்னும் கடினமாக உள்ளது. பல பில்லியன் மரங்கள் நடப்பட்ட போதிலும், கோபி பாலைவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,600 சதுர கிலோமீட்டர் புல்வெளியை விழுங்கிக் கொண்டே இருக்கிறது.


இத்திட்டம் குறித்து நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தாக்குப்பிடிக்குமா? நடப்பட்ட மரங்களில் பலவற்றின் உயிர் பிழைப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளது. நீர் பற்றாக்குறை உள்ள வறண்ட பகுதிகளில்கூட மரங்களை நடுவதால், தொடர்ச்சியான மனிதத் தலையீடு இல்லாமல் பல மரங்கள் காய்ந்து விடுகின்றன.


நோய்த் தாக்குதல்: இந்தச் சுவரில் பெரும்பாலும் போப்ளர் மற்றும் வில்லோ போன்ற ஓரிரு வகை மரங்கள் மட்டுமே (ஒற்றைப் பயிர் முறை) நடப்படுகின்றன. இதனால் இது நோய் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகிறது.

உதாரணமாக, 2000-ம் ஆண்டில் ஒரே ஒரு நோய்க்கிருமியால் மட்டும் 1 பில்லியன் போப்ளர் மரங்கள் அழிந்தன.


நிலத்தடி நீர் ஆபத்து: "இயற்கையான மணல் மேடுகளில் மரங்களை நடுவதால், மண் ஈரப்பதமும் நிலத்தடி நீர் மட்டமும் வேகமாகக் குறைகின்றன. உண்மையில், இது சில பகுதிகளில் பாலைவனமயமாக்கலை ஏற்படுத்தும்," என்று சீன அறிவியல் அகாடமியின் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


சில ஆய்வுகள் மணல் புயல்கள் குறைந்ததற்கு இத்திட்டத்தை வரவேற்கின்றன. ஆனால் வேறு சில ஆய்வாளர்கள், இந்த மாற்றத்திற்குக் காரணம் காலநிலை காரணிகள்தான், மனித முயற்சி அல்ல என்று வாதிடுகின்றனர்.


இந்தச் சவால்கள் இருந்தபோதிலும், சீனாவின் இந்த மாபெரும் முயற்சி உலக நாடுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது.


ஆப்ரிக்காவில் நிலம் தரமிழப்பைத் தடுக்க, 8,000 கிமீ நீளமுள்ள மரப்பட்டை அமைக்கும் 'ஆப்ரிக்காவின் பெரும் பசுமைச் சுவர்' திட்டத்திற்கு இத்திட்டம் அடித்தளமாக அமைந்துள்ளது.

2050 ஆம் ஆண்டுக்குள், இந்தப் பிரமாண்டமான பசுமைச் சுவர் சீனாவை பாலைவனத்தின் அச்சுறுத்தலில் இருந்து காக்கும் என சீனா எண்ணுகிறது.


சீனா வரலாற்றில் ஏற்கனவே பெருஞ்சுவர் உலக ஆச்சரியங்களில் ஒன்றாக உள்ளது.

தற்போது( "கிரீன் சுவர்") பசுமை சுவர் மற்றொரு சாதனையாக அமையும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை