சிதறடிப்பு...!

 பா.ஜ.க. மூன்றாவது முறையாகத் தொடர்ந்து நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை நடத்தி வருகிறது. 

ஆனால், எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு மீதுதான் பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும் குற்றம்சாட்டுகிறார்கள்.

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனா எப்படி அத்துமீறி நுழைந்து புதிய கிராமங்களை அமைத்தது என்று கேட்டால், நேருதான் முதன்முதலில் சீனப் படைகளை இந்தியாவுக்குள் நுழைய விட்டார் என்று 1963ஆம் ஆண்டு நடந்த போரை முன்வைத்து குற்றம்சாட்டுகிறார்கள். 

அதே நேரத்தில், இரண்டு நாட்களுக்கு முன் 1971ஆம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானை இந்தியா வென்றதை நினைவுகூர்ந்திடும் நிகழ்வை இந்திய ராணுவம் நடத்தியது. அதற்கு பா.ஜ.க. அரசு பெருமிதம் கொண்டது. 

அந்தப் போரில் மிகக் குறுகிய நேரத்தில் பாகிஸ்தானை சரணடையச் செய்து, பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கித் தந்தவர் நேருவின் மகள் இந்திரா காந்தி என்ற உண்மையை எந்த ஒரு பா.ஜ.க அமைச்சரும் மனசாட்சியுடன் பேசவில்லை.

ஜம்மு-காஷ்மீரில் எப்படி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினார்கள் என்று பா.ஜ.க அரசைக் கேட்டாலோ, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தைப் பறித்து, அதன் மாநில அந்தஸ்தையும் பறித்தது ஏன் என்று மோடியையும் அமித்ஷாவையும் கேட்டால், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் நேருதான் தவறு செய்தார் என்று குற்றம்சாட்டுகிறார்கள். 

நேருவும் இந்திராகாந்தியும் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக எந்த ஒரு வல்லரசு நாடும் நுழைவதை அனுமதிக்கவில்லை. துணிந்து எதிர்த்து நின்றார்கள். அதனால் அமெரிக்கா உள்பட எந்த மூன்றாவது நாடும் காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்க முடியவில்லை.

 வாஜ்பாய், மன்மோகன்சிங் காலம் வரை இதுதான் நிலவரம்.

இப்போது என்ன நிலை? பாகிஸ்தான் மீதான துல்லியத் தாக்குதலை மோடி அரசு நடத்திய நிலையில், எல்லையில் இந்தியப் பகுதிகள் மீது சில தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த சூழலில் திடீரெனப் போர் நிறுத்தம் ஏற்பட்டது. 

இந்தப் போர் நிறுத்தத்திற்கு தான்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறார். இதனை இந்தியாவால் இதுவரை உறுதியாக மறுக்க முடியவில்லை. வர்த்தகக் காரணங்களைக் காட்டி நான்தான் போர் நிறுத்தத்திற்கு கட்டாயப்படுத்தினேன் என்கிற அளவிற்கு டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து சொல்லி வருகிறார். 

இந்தியா மீதான வர்த்தகத் தடைகளையும் விதித்து வருகிறார்.

நேரு காலத்தில் அமெரிக்கா- சோவியத் யூனியன் (ரஷ்யா) என்ற இருபெரும் வல்லரசுகள் இருந்தன. உலக நாடுகள் அமெரிக்க பக்கமோ ரஷ்யா பக்கமோ சாயவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட நிலையில், எந்த வல்லரசின் பக்கமும் சாயாமல், அணி சேரா நாடுகள் என்ற புதிய நிலையை மேற்கொண்டார் நேரு. 

இந்தியாவுடன் ஏறத்தாழ 45 நாடுகள் அந்த அமைப்பில் இணைந்து நின்றன. அதனால் இரு வல்லரசுகளும் இந்தியாவை மதிக்கக் கூடிய சூழல் இருந்தது. தற்போது என்ன நிலை? மோடியின் நண்பரான டிரம்ப் இந்தியாவை வைத்து செய்கிறார். 

அதனால், ரஷ்யாவின் புதின் பக்கம் சாய்ந்தும் சாயாமல் நட்பு கொள்ள வேண்டியிருக்கிறது. புதினை இந்தியாவுக்கு அழைத்தார் மோடி .புதினும் வந்தார்.

“இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களில் பெரும்பான்மையான மக்கள் இந்தி மொழி பேசவில்லை. அவர்கள் வேறுவேறு மொழிகளைப் பேசுகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக இருக்கிறது இந்தியா” என்று புதின் கருத்து தெரிவித்திருக்கிறார். 

வேற்றுமையில் ஒற்றுமை என்பதைத்தான் நேரு வலியுறுத்தினார். இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் இணை ஆட்சிமொழியாக நீடிக்கும் என்ற உறுதிமொழியை வழங்கியவர் நேரு.

 ஆனால், மோடி ஆட்சியில் அமித்ஷா என்ன சொல்கிறார்?

 ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் இந்திய மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார். தேசிய கல்விக் கொள்கை மூலம் மூன்றாவது மொழி என்ற பெயரில் இந்தியும் சமஸ்கிருதமும் கட்டாயமாகக் திணிக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினருக்குமான வழிபாட்டு உரிமைகளை நிலைநிறுத்தியவர் நேரு.

 சிறுபான்மை மதத்தினரும், இந்து மதத்திற்குட்பட்ட பட்டியல் இன-பழங்குடி மக்களும் தங்களின் உணவு முதல் அனைத்திலும் அச்சத்துடனேயே செயல்பட வேண்டிய நிலைமையை மோடி ஆட்சி உருவாக்கியுள்ளது.

இந்தியாவை உலக அரங்கில் உயர்த்தினார் நேரு. 

இந்திய ரூபாயின் மதிப்பையும், இந்தியாவின் பன்முகத்தன்மையயும்,மதசார்பின்மையும் சிதறடித்து பறக்கவிட்டிருக்கிறார் மோடி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை