'அநியாயம் இந்த ஆட்சியிலே
இது அநியாயம்!"
பீகாரில் வங்கி கணக்கில் தவறுதலாக வந்த பணத்தை திருப்பித் தரக் கோரிய அதிகாரிகளிடம், நாங்கள் அளித்த வாக்கை திருப்பிக் கொடுங்கள் என்று கிராம மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, வாக்குகளைக் கவரும் வகையில் ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்’ என்ற பெயரில் பெண் தொழில்முனைவோருக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டத்தை நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசு செயல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 1.40 கோடிப் பெண்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்திற்குத் தகுதியற்ற பல ஆண்களின் வங்கிக் கணக்கிலும் இந்தத் தொகை தவறுதலாக வரவு வைக்கப்பட்டது.
தேர்தல் முடிந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், வங்கிக் கணக்கு ஆய்வின் போது இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தவறுதலாக அனுப்பப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் தற்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தர்பங்கா மாவட்டம் ஜலே தொகுதியில் உள்ள அகியாரி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் பலருக்கும் பணத்தைத் திரும்பச் செலுத்துமாறு ‘ஜீவிகா’ அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், தீபாவளி மற்றும் சத் பூஜைக்காக அந்தப் பணத்தை ஏற்கனவே செலவழித்துவிட்டதாகவும் தேர்தல்முடிந்து இவ்வளவு காலம் சும்மா இருந்துவிட்டு வெற்றி பெற்றபிறகு பணத்தைக் கேட்பது அநியாயம் என்று கூறினர்.








