ஆன்டிபயாடிக்கை எதிர்கொள்ளும்

 நோய் தொற்று!

இந்தியாவில் 'ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட்' (antibiotic resistant) என்பது சுகாதாரத் துறையில் மிக முக்கியமான பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) சமீபத்தில் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட் தொடர்பாக வெளியிட்ட ஆய்வறிக்கை இதுதொடர்பான எச்சரிக்கை  அனுப்பியுள்ளது.

முதலில் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட் என்பது என்ன?

ஒரு நோய்த்தொற்று உங்களுக்கு ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அந்த தொற்றுகளில் இருந்து நீங்கள் குணமடைவதற்காக மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். 

ஆனால், நாளடைவில் அந்த மருந்தின் திறன் தன்னை பாதிக்காத வகையில் சில தொற்றுகள் தங்களை தகவமைத்துக் கொள்ளும். அதாவது, அந்த மருந்து குறிப்பிட்ட தொற்றுக்கு எதிராக செயல்புரியாது. அதாவது, அந்த மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை தொற்றுகள் பெற்றுவிடும்.

"இப்படி மாறும் தொற்றுகள் பெரும்பாலும் பாக்டீரியா தொற்றுகளாகவே உள்ளன" என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்படி ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை பெறும் பாக்டீரியாக்கள் 'சூப்பர்பக்' (superbug) என அழைக்கப்படுகின்றன.

மருத்துவ ஆய்விதழான தி லான்செட், உலகளவில் 2019ம் ஆண்டில் 10 லட்சத்து 27 ஆயிரம் உயிரிழப்புகள் இதனால் நேரடியாக ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறது. 

இத்தகைய கடும் தொற்றுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு கேடயங்களுள் முதல் வரிசையில் உள்ள ஆன்டிபயாட்டிக் மருந்துகள் இத்தகைய தொற்று பாதிப்புகளில் பெரும்பாலும் செயல்படுவதில்லை." என குறிப்பிட்டுள்ளது. இதனால் மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என அந்த ஆய்வு கூறுகிறது.





ட்ரம்ப்புக்கு எதிராக 20 மாகாணங்கள் வழக்கு!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சமீப காலமாக குடியேற்ற விதிகளில் கெடுபிடி காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ஹெச்1பி விசாவுக்கான கட்டணத்தை வரலாறு காணாத அளவில் 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தினார். 

அதாவது, ஹெச்1பி விசாவுக்கான கட்டணத்தை, நான்கரை லட்சம் ரூபாயில் இருந்து, 90 லட்சம் ரூபாயாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிரடியாக உயர்த்தினார்.

அதோடு, அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பை ஹெச்1பி விசா வாயிலாக வெளிநாட்டினர்  முறைகேடாக தட்டிப் பறித்து வருவதாகவும் அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார்.

அதிபர் ட்ரம்ப் தன் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டங்களுக்கு புறம்பாக தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது என்று கூறி, விசா கட்டண உயர்வுக்கு எதிராக கலிபோர்னியா, நியூயார்க் உள்ளிட்ட  20 மாகாணங்கள் அடங்கிய கூட்டமைப்பு, மாசசூசெட்ஸ் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில், 20 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப்பின் விசா தொடர்பான உத்தரவுகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள மாகாணங்கள், விசா கட்டண உயர்வால், தங்கள் மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதாக, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளன.


மேலும், சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசிய பொது சேவைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.


அமெரிக்காவிற்குள் ஹெச்1பி விசா வாயிலாக வரும் திறமையான வெளிநாட்டினர், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் துறைகளில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அதோடு, பல பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், வெளிநாட்டு அறிஞர்களையே பெரிதும் நம்பியுள்ளன. இப்படிப்பட்ட சூழலில், இந்த கட்டண உயர்வால், அந்தந்த நிறுவனங்களுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளன.


இந்நிலையில், இந்த கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்கம் கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் ராப் போன்டா, ட்ரம்பின் சட்டவிரோதமான புதிய ஹெச்1பி விசா கட்ட ண உயர்வு, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற முக்கியமான துறைகளில் பணியாளர் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும் என்று கூறியுள்ளதோடு, கலிபோர்னியாவின் முக்கியமான சேவைகளை வழங்கும் திறனை ஆபத்தில் ஆழ்த்தும் என்றும் கூறியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை