இந்து மதமும் சனாதனமும்
எப்படி ஒன்றாகும்?
பழைய ‘பராசக்தி’ படத்தில் “நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த வழக்குகளைச் சந்தித்திருக்கிறது” என்று ஒரு வசனம் வரும்.
அது நீதி ஆகாது,
அநீதி ஆகும்.
தினமலர் ஏட்டில் (22-1-26) இரண்டு பக்கத்திற்கு ஒரு நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது. த.மு.எ.க.ச. சார்பில் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு பாஜக தலைவர் ஒருவர் போட்ட பதிவு பற்றிய வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு அது.
“சனாதன தர்மத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். சுருக்கமாகச் சொன்னால் சனாதன தர்மத்தைப் பின்பற்றும் 80 சதவீத மக்களையும் இனப் படுகொலை செய்ய அவர் அழைப்பு விடுக்கிறார்!” என்ற அந்தப் பதிவு, கொடூரமான திருகல் வேலை அல்லவா!இதில் தந்திரமாக சனாதனத்தை இந்து மதத்திற்கு இணையாக்குகிறார்கள். இரண்டும் ஒன்றுதான் என்று எந்தச் சட்டம் சொல்கிறது?
“இந்து சட்டம்” இருக்கிறதே ஒழிய, சனாதனச் சட்டம் இல்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் “இந்து மதம்” என்றுதான் பதிவு செய்கிறார்களேயொழியச் சனாதனம் என்று அல்ல.
கூட்டம் சேர்ப்பதற்காக, சனாதனம் என்றால் இந்து மதமே என்று மோசடி வேலை செய்வது பாஜகவினரே. இவர்களது சனாதனத்தில் சாதியம் இல்லை, பெண்ணடிமைத்தனம் இல்லை, சமஸ்கிருத ஆதிக்கம் இல்லை என்று கூறுவார்களா?
இவர்களது சனாத னத்தில் சங்கராச்சாரியாராக, ஜீயராக எந்தச் சாதிக்கா ரரும் வரலாம், எந்த இந்துப் பெண்ணும் வரலாம் என்று கூறுவார்களா? இவர்களது சனாதனத்தில் ஆகமக் கோவில்களில் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர் அல்ல,
உரிய பயிற்சி பெற்ற எந்தவொரு சாதிக்காரரும் ஆகலாம் என்று கூறுவார்களா? இவர்களது சனாதனத்தில் சமஸ்கிருத ஆதிக்கம் இல்லை, அனைத்து ஆகமக் கோவில்களில் தமிழி லேயே அர்ச்சனை என்று கூறுவார்களா?
இவற்றில்தான் சனாதனம் வேறு, இந்து மதம் வேறு என்பது துல்லியமாகப் புலப்படுகிறது.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது இந்து மதத்தை ஒழிப்பது அல்ல. இந்து மதத்திற்குள் சனாத னம் எனும் பெயரில் ஊடுருவியிருக்கும் கேடுகளை ஒழிப்பது; அதைச் சீர்திருத்துவது. சொல்லப்போனால் சனாதனத்தை ஒழிப்பது என்பது சனாதனிகளை ஒழிப்பதும் அல்ல.
அவர்களிடம் புகுந்திருக்கும் சாதிய, பாலின, மொழி ஆதிக்க மனோநிலையை ஒழிப்பது. காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று பாஜக சொல்லும் “காங்கிரஸ் முக்த் பாரத்” என்பது காங்கி ரஸ்காரர்களை ஒழிக்கும் இனப்படுகொலைக்கான அழைப்பா? திமுகவையோ, கம்யூனிசத்தையோ ஒழிக்க வேண்டும் என்று பாஜக சொல்வதை இனப் படுகொலை என்று எடுத்துக்கொண்டால் பாஜக ஏற்குமா? ஒரு நாசகரமான கருத்தியலை ஒழிப்பது என்பது அதைக் கடைப்பிடிக்கும் மனிதர்களை ஒழிப்பதே என்பது மகா அபத்தமான வாதம்.
அப்படி எடுத்துக் கொண்டால் எந்தக் கருத்தியலையும் எதிர்க்க முடியாது, கருத்துப் போராட்டமே நடத்த முடியாது, அறிவுலகமே முடங்கிப் போகும். ஆனால் சோகமான விஷயம், அப்படியொரு தீர்ப்பை மதுரை உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி வழங்கியிருக்கிறார். “ஒழித்தல் என்னும் சொல் ஏற்கெனவே இருக்கும் ஒன்று இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கிறது.
சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு மக்கள் குழுவே இருக்கக் கூடாது எனில் அதற்குப் பொருத்தமான சொல் இனப்படு கொலை... எனவே சனாதன ஒழிப்பு என்ற தமிழ்ச் சொற்றொடர் தெளிவாக இனப்படுகொலை அல்லது கலாச்சாரப் படுகொலையைக் குறிக்கும்.
இச்சூழலில் அமைச்சரின் பேச்சைக் கேள்விக்குள்ளாக்கி மனுதாரர் பதிவிட்டது வெறுப்பு பேச்சு ஆகாது” என்கி றார் நீதிபதி. தர்க்க நியாயம் அல்லது மனசாட்சி - இரண்டில் ஒன்றைக் கொண்ட எவராலும் இந்தத் தீர்ப்பை ஏற்க முடியுமா?
சனாதனம் என்பது இந்து மதத்தில் புகுந்தி ருக்கும் அநீதி; அதை ஒழிப்பது இந்து மதத்தைச் சுத்தப்படுத்துவது. அதனால்தான் சில இந்துக்களே சனாதனத்தை எதிர்த்தார்கள் என்று காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மகாத்மா காந்தி, காமராஜர், புத்தர், ராமானுஜர், வள்ளலார் ஆகி யோரை அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் நீதிபதி யோ, “தேவையற்ற விஷயங்களைக் கைவிடுமாறு பரிந்துரைத்ததால் அவர்கள் சனாதனத்திற்கு எதிரானவர்கள் என்ற தவறான எண்ணத்தில் எதிர் மனு தாரர்கள் உள்ளனர்” என்கிறார்.
அவர்கள் கைவிடச் சொன்ன “தேவையற்ற” விஷயங்கள் எவை? மகாத்மா காந்தி சொன்ன தேவையற்ற விஷயம்: தீண்டாமை. அதை எதிர்த்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பட்டியல் சாதியினரையும் நாடார்களையும் நுழைய விடாமல் தடுத்திருந்த சனாத னத்தை ஒழிக்கப் போராடினார்.
காந்தி இந்துவாகத் திகழ்ந்தாரே தவிர, சனாதனியாக அல்ல. நல்லி ணக்கத்திற்காக அவர் போரிட்டதால், ஆத்திரம் கொண்டுதான் ஒரு சனாதன வெறியன் நம் தேசப் பிதாவைச் சுட்டுக் கொன்றான். அந்த கோட்சேவை இதுகாறும் கண்டிக்காதவர்கள் சனாதனிகள்.
காமராஜர் சொன்ன தேவையற்ற விஷயம்: கோமாதா அரசியல். 1966-இல் பசு அரசியல் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் பரிவாரம் தில்லியில் கலகம் செய்து, காமராஜர் வீட்டிற்குத் தீ வைத்தது. காமராஜர் இந்துதான், ஆனால் அந்தச் சனாதன வெறியை அவர் ஒருபோதும் ஆதரிக்கவில்லை.
புத்தர் சொன்ன தேவையற்ற விஷயங்கள்: வருணா சிரமம், யாகம், ஹிம்சை. அவர் காலத்தில் இந்து மதமே கிடையாது. வைதிக மதத்திலிருந்த இந்த அநீதிகளை எதிர்த்தே அவர் புத்த மதத்தைத் துவக்கி னார்.
ஆனால் நீதிபதியோ, “புத்தர் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவர்” என்கிறார். அவர் காலத்தில் இல்லாத மதத்தில் அவர் எப்படிப் பிறந்திருக்க முடியும்?
ராமானுஜர் சொன்ன தேவையற்ற விஷயம்: மந்திரத்தை மறைப்பது. “ஓம் நமோ நாராயணாய” எனும் மந்திரத்தை அனைவரும் பயனடையும் வகை யில் வெளிப்படையாக உச்சரித்து முக்தி அடைய வழிவகுத்தார் என்கிறார் நீதிபதி.
ஆனால் அங்கி ருந்த சனாதனிகள் பஞ்சமர்களுக்கும் சூத்திரர்க ளுக்கும் அந்த மந்திரத்தை உபதேசிக்கக் கூடாது என்றார்கள். அதை எதிர்த்தவர்தான் ராமானுஜர். வள்ளலார் சொன்ன தேவையற்ற விஷயம்: வருணாசிரமம்.
“நால் வருணம் ஆசாரமம் முதலா நவின்ற கலைச் சரிதம் எலாம் பிள்ளை விளை யாட்டே” என்று பாடிய வள்ளலாரை, சிதம்பரம் தீட்சிதர்கள் சூத்திரர் எனச் சொல்லி அவமானப் படுத்தினார்கள். அந்தச் சனாதனத்தை எதிர்த்துத்தான் அவர் ஜோதி வழிபாட்டை உருவாக்கினார்.
அர்ச்சகர் என்றால் சாதி என வந்ததால்தான் அவர் விக்கிரக வழிபாட்டைத் தவிர்த்தார். வள்ளலார் சைவ தத்துவ மரபைச் சேர்ந்தவர் என்கிறார் நீதிபதி. ஆனால் அந்த மரபிலிருந்த சனாதனிகள் இவரை ஏற்கவில்லை;
அவருடையது அருட்பா அல்ல, மருட்பா என்று கண்டனம் செய்து நீதிமன்றம் வரை இழுத்தார்கள்.
நீதிபதிகள் சட்டம் படிப்பார்கள், இப்போது சரித்திரம் படிக்கிறார்கள்; நல்லது. ஆனால் அது அரைகுறையாக இருந்தால் ஆபத்தானது. நீதிபதியே சொல்லிவிட்டார், சரிதான் போலும் என்று பலரும் நினைத்து மயங்கும் ஆபத்து எழும்.
தீர்ப்பு சட்டத்தைச் சார்ந்திருக்க வேண்டுமேயொழிய இப்படி அரைகுறை சரித்திர அறிவின் மீது சாய்ந்தி ருக்கக் கூடாது. இந்தத் தீர்ப்பு, இந்து மதத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு தப்பிக்கப் பார்க்கும் சனாதனத்தைக் காப்பாற்ற முயலுவதாக இருக்கிறது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறி யிருப்பது போல், “இந்தத் தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. நீதிபதியின் கருத்துக்கள் மறுபரிசீலனைக்கு உட் படுத்தப்பட்டுத் திரும்பப் பெறப்பட உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”
அதானியும் கார்ப்பரேட் கவசமும்
சர்வதேச முதலீட்டுச் சந்தையில் ‘நம்பிக்கை’ என்ற பெயரில் எளிய மக்களின் பணத்தைச் சுரண்டும் கார்ப்பரேட் முதலாளித்துவம், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க எத்தகைய தந்திரங்களைக் கையாளும் என்பதற்கு அதானி மீதான அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (எஸ்இசி) தற்போதைய நகர்வுகளே சாட்சி.
லஞ்சப் புகார்கள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் சிக்கி யுள்ள கவுதம் அதானி மற்றும் அவரது சகோதரி மகன் சாகர் அதானிக்குச் சம்மன் அனுப்ப முடி யாமல், அமெரிக்காவின் எஸ்இசி அமைப்பு திணறிக்கொண்டிருக்கிறது.
இந்திய அரசு மற்றும் அதன் சட்ட அமைச்ச கம், ‘முத்திரை இல்லை’, ‘கையெழுத்து இல்லை’ போன்ற தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி சம்மனைத் திருப்பி அனுப்புவது, ஒரு பெரும் முதலாளியைக் காக்க ஒட்டுமொத்த அரசு எந்திரமும் எப்படிக் கவசமாகச் செயல்படு கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஹேக் உடன்படிக்கையின் கீழ் இயல்பாக நடக்க வேண்டிய ஒரு சட்ட நடைமுறை, 14 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருப்பது சாதாரணமானதல்ல. இது அரசுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையிலான நெருக்க மான பிணைப்பை உறுதிப்படுத்துகிறது.
ஏழை எளிய மக்கள் மீது சட்டத்தின் சவுக்கு மிக விரைவாகச் சுழலும் நிலையில், கோடிக்கணக்கான டாலர்களைக் கையாடல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மட்டும் சர்வதேச விதிகள் வளைக்கப்படுவது ஏன்?
இந்திய இறையாண்மை என்ற பெயரில் கார்ப்பரேட் நலன்களைப் பாதுகாப்பது உழைக்கும் வர்க்கத்திற்கு இழைக்கப்படும் துரோகமாகும். தற்போது, தூதரக வழிகளைப் புறக்கணித்துவிட்டு மின்னஞ்சல் மற்றும் வழக்கறிஞர்கள் மூலம் சம்மன் அனுப்ப எஸ்இசி முடிவெடுத்திருப்பது, இந்திய அதிகார வர்க்கத்தின் மீதான நம்பிக்கையற்ற தன்மை யையே வெளிப்படுத்துகிறது.
175 மில்லியன் டாலர் முதலீட்டாளர் பணம் மோசடி செய்யப் பட்டதாகக் கூறப்படும் நிலையில், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பிக்கும் இத்த கைய போக்கு, ‘சட்டம் அனைவருக்கும் சமம்’ என்ற ஜனநாயகக் கோட்பாட்டையே கேள்விக்குறியாக்குகிறது.
தன் சகோதரி மகன் சாகர் அதானியுடன் இணைந்து கவுதம் அதானி நடத்தியதாகக் கூறப் படும் இந்த ஊழல் , ஒரு நாட்டின் வளங்க ளைச் சுரண்டி உலக அரங்கில் செல்வாக்கு செலுத்தும் ஏகபோக முதலாளித்துவத்தின் கோர முகமாகும். அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, அதிகார மட்டத்தி லுள்ள தனிநபர்களைக் காப்பாற்றும் இந்திய அரசின் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக் குமா?
கார்ப்பரேட் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்கள் சேர்த்த சொத்துக்கள் மக்கள் நலனுக்காகப் பறிமுதல் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். இந்த அநீதிக்கு எதிராக சர்வதேச அளவிலும் குரல்கள் எழ வேண்டும்.





