தங்கத்தின் தோற்றம்:
பூமி அல்ல!
தங்கம் பெரும்பாலும் செல்வம் மற்றும் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
ஆனால் அதன் பயணம் மனித நாகரிகத்திற்கு முன்பே, பூமி இருப்பதற்கு முன்பே தொடங்கியது.
தங்கத்தின் நீடித்த மதிப்புக்கான காரணம் மனித வரலாற்றில் மட்டுமல்ல, அண்ட நிகழ்வுகள் மற்றும் அரிய இயற்கை பண்புகளிலும் உள்ளது.
நவீன வானியற்பியலின் படி, தங்கம் பூமியில் தோன்றவில்லை.
நியூட்ரான் நட்சத்திர மோதல்கள் மற்றும் சூப்பர்நோவா வெடிப்புகள் போன்ற தீவிர அண்ட நிகழ்வுகளின் போது பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் உருவாக்கப்பட்டது என்பதை கேட்கும்போது விசித்தரமாக தோன்றலாம்.
இந்த அரிய நிகழ்வுகள் தங்கம், பிளாட்டினம் மற்றும் யுரேனியம் போன்ற கனமான தனிமங்களை உருவாக்கும் அளவுக்கு அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தங்களை உருவாக்குகின்றன.
சாதாரண நட்சத்திரங்களால் தங்கத்தை உருவாக்க முடியாது. இந்த பேரழிவு தரும் அண்ட மோதல்கள் மட்டுமே தங்கத்தை உருவாக்க முடியும்.
சுமார் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமி ஒரு உடையக்கூடிய, வளரும் கிரகமாக இருந்தபோது, விண்வெளியில் இருந்து விண்கற்கள் அதன் மீது மோதின. இந்த விண்கற்கள் தங்கம் மற்றும் பிற கனமான தனிமங்களைக் கொண்டு வந்தன.
ஆரம்பத்தில், இந்த தங்கத்தின் பெரும்பகுதி அதன் எடை காரணமாக பூமியின் மையப்பகுதியை நோக்கி மூழ்கியது. இருப்பினும், மில்லியன் கணக்கான ஆண்டுகளாக, மீண்டும் மீண்டும் விண்கல் தாக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் இந்த தங்கத்தில் கனிசமான அளவை பூமியின் மேலோட்டத்திற்குத் திருப்பி அனுப்பின.
கிமு 3000 ஆம் ஆண்டில், பண்டைய எகிப்தியர்கள் தங்கத்தை கடவுள்களின் சதை என்று கருதினர்.
அதன் பளபளப்பு மற்றும் அரிதான தன்மை அதை தெய்வீகம், அழியாமை மற்றும் அரச அதிகாரத்தின் அடையாளமாக மாற்றியது.
கோயில்கள், கிரீடங்கள் மற்றும் அடக்கம் செய்யப்பட்ட முகமூடிகள் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டன.
காலப்போக்கில் தங்கம் மிகவும் மதிப்புமிக்கதாக மாறுவதற்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று அதன் மிகவும் அரிதான தன்மை. பிரபஞ்சத்திலும் பூமியிலும் தங்கம் மிகவும் அரிதானது.
மனித வரலாற்றில் இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட அனைத்து தங்கமும் ஒலிம்பிக் போட்டிகளில் பயன்படுத்தபப்டும் நீச்சல் குளங்களை போன்ற, 3.5 குளங்களில் அடங்கும் அளவிற்கு மட்டுமே இருக்கும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.
ஒலிம்பிக் குளத்தின் அளவு என்பது 50 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலம் மற்றும் 2 அடி ஆழம் கொண்டதாகும்.
மற்றொரு உதாரணத்திற்கு இதுவரை வெட்டி எடுக்கப்பட்ட மொத்த தங்கத்தையும், உலகின் 800 கோடி பெருக்கு தலா 22 முதல் 25 கிராம் அளவிற்கு பகிர்ந்து வழங்க முடியுமாம்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் தங்கம் துருப்பிடிக்காது, கறைபடாது, அல்லது மங்காது. இது மிகவும் இணக்கமானது, அதாவது உடையாமல் எளிதாக வடிவமைக்க முடியும். இது மங்காத இயற்கையான பளபளப்பையும் கொண்டுள்ளது.
கிமு 700 ஆம் ஆண்டில் லிடியா ராஜ்ஜியம் முதல் தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியது. தங்கத்தின் நிலையான விலை, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் அடையாளம் காணும் எளிமை ஆகியவை அதை வர்த்தகத்திற்கு ஏற்றதாக மாற்றியது.
பல நூற்றாண்டுகளாக, தங்கம் உலகளாவிய மதிப்பின் ஆதாரமாக மாறியுள்ளது.
இன்றும், மத்திய வங்கிகளும் முதலீட்டாளர்களும் பணவீக்கம், நாணய சரிவு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு எதிராக ஒரு பாதுகாப்பாக தங்கத்தை நம்பியுள்ளனர்.
பாம்பன் பாலம்!
111ஆண்டு வரலாறு முடிவு?
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் நிலப்பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருவது இந்த பாலம்தான்..
சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்கள் பயன்படுத்தும் முக்கிய பாதையும்கூட.. இப்போது தன்னுடைய 111 வருட கால பொக்கிஷம் இன்று தன்னுடைய பயணத்தை முடித்து கொள்கிறது.
கடந்த 1914ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பாம்பன் ரயில் பாலம், ராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைக்கும் முக்கிய பாலமாக இருந்தது.
இந்தியாவின் முதல் கடல்வழி ரயில் பாலமான இது, சுமார் 108 ஆண்டுகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்த பாலம் வழியாக ரயில்கள், பயணிகள் மற்றும் சரக்குகள் பல ஆண்டுகள் பாதுகாப்பாக சென்றன.
ஆனால், பாம்பன் கடல் பகுதியில் அதிக உப்புத்தன்மை கொண்ட காற்று வீசுவதால், பாலத்தின் இரும்புத் தூண்கள் மற்றும் இரும்பு அமைப்புகள் காலப்போக்கில் துருப்பிடித்து பலவீனமடைந்துவிட்டன..
புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்ட பிறகு, பழைய பாலத்தின் பராமரிப்புப் பணிகளும் நிறுத்தப்பட்டன.
இதனால் பாலத்தின் உறுதித்தன்மை மேலும் குறைந்தது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணமாக கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் பழைய பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.
இந்த பாலத்தின் நடுப்பகுதியில் 225 அடி நீளமுள்ள "ஷெர்சர் ஸ்பான்" என்ற பகுதி உள்ளது. இந்த பகுதி கப்பல்கள் செல்லும்போது திறக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டது... முன்பு இந்த ஸ்பான் 81 டிகிரி வரை திறந்து, கப்பல்கள் சுமார் 200 அடி தூரம் செல்ல வழி கொடுத்தது
கடைசியாக கடந்த ஜனவரி 20ம் தேதி இந்த ஸ்பான் திறக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.. அப்போது இந்திய கடலோர காவல் கப்பல், ஒரு சிறிய கப்பல் மற்றும் சில மீனவர்களின் படகுகள் இந்த கடல் வழியாக சென்றன.
ஆனால் இப்போது ஷெர்சர் ஸ்பானின் கியர் அமைப்புகள் கடுமையாக துருப்பிடித்துவிட்டன. சமீபத்தில் 25 தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முயன்றும், அந்த பகுதியை 15 டிகிரிக்கு மேல் திறக்க முடியவில்லை. அதனால்தான், இந்த மையப்பகுதியை முழுமையாக அகற்ற முடிவு செய்யப்பட்டது.
புதிய பாம்பன் ரயில் பாலத்தை கட்டிய ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம், பழைய பாலத்தை அகற்ற ஒப்பந்ததாரரை நியமித்துள்ளது... இனி மொபைல் கிரேன்கள் உதவியுடன் இரும்பு அமைப்புகளை வெட்டி அகற்றப்படும்..
இதனால் சுமார் 1,000 டன் எடையுள்ள இரும்பு மற்றும் கான்கிரீட் கழிவுகள் வெளியேறும். அவை மண்டபம் ரயில்வே யார்டில் கொண்டு போய் சேர்க்கப்படும்.
இந்த பணிகள் நடைபெறும் காலத்தில் விபத்துகள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் மே 31ம் தேதி வரை பாம்பன் கடல் கால்வாய் வழியாக கப்பல்கள், விசைப்படகுகள் மற்றும் மீனவர் படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு கடல்சார் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, பழைய பாலத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பாதுகாக்க திட்டமிட்டனர். ஆனால் இரும்பு அமைப்புகள் மிக மோசமாக சேதமடைந்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
அடுத்த 4 மாதங்களில் பாம்பன் பாலத்தை முழுமையாக அகற்றும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது... 111 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புப் பெற்ற பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடலிலிருந்து அகற்றியபின், அதை ரயில் அருங்காட்சியத்தில் வைக்க முடியுமா? என்ற எதிர்பார்ப்பும் ராமேஸ்வரம் மக்களிடம் நிலவி வருகிறது.
புதிய பாலம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து, ராமேஸ்வரம் தீவின் போக்குவரத்துக்கு தொடர்ந்து உதவும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆர்
ஆனால், நூற்றாண்டை கடந்த வரலாற்று0ச் சிறப்பு மிக்க பழைய பாம்பன் ரயில் பாலம், இப்போது எண்ணற்ற நினைவுகளுடன் விடைபெறுகிறது.










