அரசி "இயல்"
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
விருது என்பது இலக்கியவாதிகளின் படைப்புகளைவிட முக்கியமானதாக உள்ளது. நல்ல படைப்புகளை வழங்கியுள்ள எழுத்தாளராக இருந்தாலும், அவருக்கு உரிய விருது வழங்கப்படாமல் இருந்தால், இலக்கிய வட்டத்தில் அவரை சேர்த்துக் கொள்வதற்கே தயங்கக்கூடிய நிலை உள்ளது.
விருதுகள் எப்போதுமே சர்ச்சைகளுடன் கலந்தவை.
எந்த விருது வழங்கப்பட்டாலும் அதனைப் பெறக்கூடியவரைவிட தகுதி வாய்ந்த பலர் இருப்பதாக விமர்சனங்கள் எழுவதும் இயல்பு. விருதுக்காக எழுதமாட்டேன் என்கிற மக்கள் கலைஞர்களும் இருக்கிறார்கள். அவர்களையும்கூட விருதுகள் விட்டுவைப்பதில்லை.இந்திய அரசைப் பொறுத்தவரை இலக்கியத்திற்காக ஞானபீடம், சாகித்ய அகாடமி, இளம் படைப்பாளிகளுக்கான அகாடமி விருது போன்றவை உள்ளன. இதில், ஞானபீடம் உயர்ந்தது என்பதால் அதனைக் குறிவைத்து இலக்கிய அரசியல் நடைபெறுவது வழக்கம்.
சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் உள்ள படைப்பாளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருது பெறப்போகிறவர் இவரா,அவரா, இன்னொருவரா என்று தமிழ் இலக்கிய வட்டாரத்தில் அனல் பறக்கும் வாதங்கள் நடைபெறும். பொதுவாக டிசம்பர் மாதத்திலேயே சாகித்ய அகாடமி விருதாளர்கள் யார், யார் என்பது அறிவிக்கப்பட்டுவிடும்.
கடந்த டிசம்பர் முடிந்து, இந்த ஜனவரி பாதி கடந்த பிறகும் சாகித்ய அகாடமி விருது பட்டியல் வெளியாகவில்லை. காரணம், அரசியல்தான்.
மத்தியில் எந்த ஆட்சியாக இருந்தாலும் விருது தேர்வில் பரிந்துரைகளும், நிராகரிப்புகளும் இருக்கும். எனினும், ஒருதலைபட்சமான முடிவாக இல்லாமல், பல வகை படைப்பாளிகளுக்கும் பட்டியலில் இடம் இருக்கும்.
அதில் ஒரு சில சார்பும் பளிச்செனத் தெரியும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து எல்லாத் துறைகளையும் போலவே, இலக்கியத்துறையிலும் காவி நிறம் அப்பட்டமாகத் தெரிகிறது.
அதற்கு மாற்றான-எதிரான படைப்பாளர்களுக்கு விருதுகள் நிராகரிக்கப்படுவதுடன், அவர்களின் படைப்புகளையே முடக்குகிற போக்கும் அதிகரித்து வருகிறது.
![]() |
| தமிழ்ச்செல்வன் |
மார்க்சியப் பார்வையுடனான அரசியல் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. அவர் இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்த நிலையில், அதற்கான மறுப்பு ஒரு தரப்பிடமிருந்து வெளிப்பட்டது.
உண்மை என்ன என்று இலக்கியவாதிகள் ஆர்வம் காட்டிய நிலையில், சாகித்ய அகாடமி விருது பட்டியலையே அறிவிக்காமல் காலம் கடத்துகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
இப்படி பட்டவர்த்தனமாக அரசியல் புயலுக்குள் சாகித்ய அகாடமி விருது சிக்கியுள்ள நிலையில்தான், சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருதுகள் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது குறித்த அவருடைய சமூகவலைத்தளப் பதிவில், “ஒன்றிய அரசின் அரசியல் குறுக்கீடுகளால், குறுகிய நோக்கத்தால் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படாமல் உள்ளது.
இதற்குத் தக்க எதிர்வினையாக, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிப் படைப்புக்கு இனி ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய மொழிகளில் மத்திய அரசால் செம்மொழித் தகுதி பெற்ற முதல் மொழி, தமிழ்தான். 2004ஆம் ஆண்டு தமிழுக்கு அந்தத்தகுதி கிடைத்த பிறகே சமஸ்கிருதமும் அந்தத் தகுதியைப் பெற்றது.
பின்னர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் செம்மொழித் தகுதி பெற்றன. அண்மையில் தேர்தல் அரசியல் கண்ணோட்டத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, மராத்தி, அசாமி, வங்காளம், ஒடியா, பாலி, பிராகிருதி ஆகிய மொழிகளை செம்மொழிகள் பட்டியலில் இணைத்தது.
தொன்மை மிக்க தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் சார்பில் 2004ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம், பத்தாண்டுகளுக்கு மேலாக பா.ஜ.க. ஆட்சியில் முடக்கப்பட்டிருந்தது.
தற்போது, அதில் பல்வேறு குழப்பங்களுடனான முன்னெடுப்புகள் நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா, வங்காளம் ஆகிய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு தேசிய செம்மொழி விருது வழங்கப்படும் என்கிற முதலமைச்சரின் அறிவிப்பு மிக முக்கியமான ஒன்றாகும்.
இந்தியாவின் வலிமையே அதன் பன்முகத்தன்மைதான். பல மொழிகள்-இனங்கள்-பண்பாடுகள் இணைந்த ஒன்றியமாக இந்தியா திகழ்கிறது.
இந்த பன்முகத்தன்மைத் தொடர்வதற்கு, ‘யாதும் ஊரே-யாவரும் கேளிர்’ என்ற தமிழ்நெறிப்படி இந்திய மொழிகளின் தனித்தன்மையைப் போற்றும் வகையில் அமைந்துள்ளது தமிழ்நாடு அரசின் விருது அறிவிப்பு.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
