ராமராஜ்யம்
நடக்கிறது?
இராம ராஜ்ஜியத்தில் கட்டிய மனைவியின் மீதே, அதாவது சீதையின் மீது சந்தேகம் கொண்டு தீக்குளிக்க வைத்த ஆணாதிக்க வெறியன் இராமனின் ராஜ்ஜியமானது, பெண்களுக்கு எதிரானது என்பது மட்டுமின்றி, சூத்திரர்களுக்கும் எதிரானது என்பதை சம்புகன் மீதான கொலை நிரூபித்துக் காட்டியது.
ஆர்எஸ்எஸ் – பாஜக இந்திய ஒன்றிய அரசாங்கத்தை கைப்பற்றியது முதல் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குற்றங்கள், தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது.இந்த தாக்குதல்களை வேடிக்கை பார்க்கின்ற மோடி கும்பல் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற மாநிலங்களில் செயல்படும் போலீசு மற்றும் அதற்கு துணை போகின்ற நீதிமன்றம் ஆகிய அரசு கட்டமைப்பானது பாலியல் குற்றவாளிகளை விடுவித்து சமூகத்தில் சகஜமாக நடமாட விடுகிறது.
இந்த வகையில் காஷ்மீரில் ஆசிஃபா என்ற பெண்ணை கோவிலுக்குள் வைத்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரமான எட்டுக் குற்றவாளிகளை வரவேற்று ஊர்வலம் நடத்தியது ஆர்எஸ்எஸ் – பாஜக. ஜம்மு மாநில பாஜகவே தேசியக் கொடியுடன் இதற்கு ஆதரவாக பேரணி நடத்தியது.
அதேபோல பில்கிஸ் பானு வழக்கில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 11 குற்றவாளிகள் அனைவரையும் நன்னடத்தை விதியின் அடிப்படையில் குஜராத் மாநில பாஜக விடுதலை செய்து காமுகர்களை வீதியில் நடமாட விட்டது. நாடே காறித் துப்பிய பிறகு உச்ச நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்தது.
அந்த வரிசையில் தற்போது உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் செங்கார் என்ற கிரிமினல் மற்றும் பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றவாளியும் சேர்ந்துள்ளான் என்பது தான் ஆர்எஸ்எஸ் பாஜக நடத்துகின்ற, ’இராம ராஜ்ஜியத்தின்’ உண்மை முகம். அவன் விடுதலையானவுடன் அவனை வரவேற்று உபசரித்தது உ.பி பாஜக.
ஆர்எஸ்எஸ் முன்வைக்கின்ற இந்துத்துவா என்ற கொள்கை, அதாவது பார்ப்பன மதத்தின் கொள்கை எப்போதுமே பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க வக்கிரங்களை நியாயப்படுத்துகின்ற இயல்பை கொண்டது என்பதால் பார்ப்பன மற்றும் மேல் சாதிகளுக்கு இத்தகைய தீர்ப்புகள்; காமக்கொடூரர்கள் வெளியில் நடமாட விடுவது; நீதிமன்றம் அதனை அங்கீகரிப்பது ஆகியவை எந்தவிதமான குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.
பார்ப்பன பனியாக் கும்பலின் கையில் உள்ள ஊடகங்களிலும் இத்தகைய கேடுகெட்ட காமக்கொடூரர்களில் விடுதலை வியந்தோதப்படுகிறதே ஒழிய அதன் மீதான விமர்சனங்கள் எதுவும் பெரிய அளவில் எழவில்லை.
பெண்களை போகப் பொருளாகவும், பண்டமாகவும் நடத்துகின்ற பார்ப்பன (இந்து) மதம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களை நிகழ்த்துகின்ற சனாதன இந்துகளை, ’நம்ம நீதியரசர் சுவாமிநாதன்’ பாணியில் சொல்லப்போனால் சனாதனத்தை பாதுகாக்கின்ற இந்துக்கள் இந்த கொடுமைகளை புரிகின்ற போது வெட்கப்படுவதில்லை.
மாறாக அவர்கள் செய்த பாலியல் வன்கொடுமைகளுக்கு பரிசாக தண்டனையிலிருந்து தப்ப வைப்பது; குற்றமற்றவர் – நிரபராதி என்ற உத்தமர் பட்டம் கொடுத்து, மீண்டும் அந்த ஊருக்குள்ளேயே உழல வைப்பது போன்றவை தான் சனாதன தர்மத்தை முன்வைத்து செயல்படுகின்ற பார்ப்பன மதம் அங்கீகரிக்கின்ற வெட்கக்கேடான செயல்பாடு ஆகும்.
இல்லை என்று மறுக்கின்ற பார்ப்பன அடிமைகளுக்கு நாம் இப்படிக் கேள்வி எழுப்புவோம். “பாலியல் வன்கொடுமைகள் புரிகின்ற எவனையாவது எங்கள் மதத்தில் இவன் கிடையாது. இவன் எங்கள் மதத்தின் ஆச்சார, அனுஷ்டானங்களையும், பெண்களை மதிக்கின்ற மரபுகளையும், எதிர்த்து காமக்களியாட்டங்களிலும் வன்கொடுமைகளிலும் ஈடுபட்டுள்ளான். ஆகவே இவனை எங்கள் மதத்திலிருந்து வெளியேற்றுகின்றோம்” என்று என்றாவது பேசியிருக்கிறார்களா?. இல்லையே!
கார்ப்பரேட் சாமியார்கள் முதல் உள்ளூர் அன்றாடம் காய்ச்சி சாமியார்கள்; கஞ்சா போதையில் அலைகின்ற காசிவாசிகள்; பல்வேறு மடங்களிலும், ஆதீனங்களிலும் கூத்தடிக்கின்ற மதப் பண்டாரங்கள் உள்ளிட்ட அனைவரும் பெண்களை இழிவு படுத்துவது தொடங்கி பாலியல் வன்கொடுமை நடத்துவது வரை அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
அவர்கள் அசந்து மறந்த நேரங்களில் வெளிப்படுகின்ற மேற்கண்ட ஒன்றிரண்டு சம்பவங்களில் கூட அவர்களை தண்டிக்காமல் விடுதலை செய்து மீண்டும் கிரிமினல் குற்றச் செயலை செய்வதற்கு நீதிமன்றமே ஊக்குவிக்கிறது என்பதுதான் நீதித்துறையின் பாசிசமாக சனாதன தர்மத்தை போற்றுகின்ற நீதியரசர்களின் நீதியாக நீடிக்கிறது.
பாலியல் வன்கொடுமைகளால் பாதுகாப்பு இல்லை என்று போராட்டம் நடத்துகின்ற பெண்கள் ஒருபுறம்; பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு நீதிமன்றங்கள் குற்றவாளிகளை விடுவிக்கிறார்கள் என்று போராடுகின்ற பெண்கள் ஒருபுறம்; இதையெல்லாம் ஓரம் ஒதுக்கி வைத்துவிட்டு பாலியல் பொறுக்கிகளுக்கு பல்வேறு பதவிகளை கொடுத்து ஊக்குவிக்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜகவின் ’இராம ராஜ்ஜியம்’ மறுபுறம் என்று இந்தியாவே பெண்களுக்கு பாதுகாப்பற்ற அச்சுறுத்துகின்ற வேட்டைக்காடாக மாறி கிடைக்கிறது என்பதுதான் நிலைமை.
நீதி பரிபாலனத்தில் நிர்வாகத் தகுதியின்மை, சோம்பல் கலந்த அகந்தை மற்றும் கள உண்மைகளைப் புரிந்து கொள்ளாத சூழல் இருப்பின், தீர்ப்பு என்னவாக இருக்க முடியும்?” எனக் கேட்டவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசரான மறைந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள்.
ஜனநாயக நாட்டில் மக்களின் கடைசி நம்பிக்கை, நீதிமன்றம்தான். நீதிதேவதையின் கையில் உள்ள தராசின் முள் நடுநிலையாக இருக்கவேண்டும் என்பதே அந்த நம்பிக்கையின் அடிப்படை.
நம்பிக்கைக்கு மாறான தீர்ப்புகள் சில நேரங்களில் வெளியாகும். நம்பிக்கையின் அடிப்படையிலான தீர்ப்புகளும் சில நேரங்களில் வெளிப்படும்.
திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் இந்த ஆண்டும் கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டது.
ஆனால், இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர், மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை கடந்து சென்றால், மேலே இருக்கக்கூடிய தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடுத்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி, அங்கே தீபம் ஏற்ற அனுமதியளித்தார்.
அனுமதி கேட்டு மனு செய்தவர் தன்னுடைய ஆட்களுடன் சென்று தீபம் ஏற்ற முயன்றார். அதை கோவில் நிர்வாகம் ஏற்கவில்லை. தமிழ்நாடு அரசின் காவல்துறை அனுமதிக்கவில்லை.
இது தொடர்பாக தனி நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முன்னெடுத்தார். அரசு சார்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
முந்தைய ஆட்சிகளிலும் காலம் காலமாகவும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகேதான் தீபம் ஏற்றப்படுகிறது என்பதாலும், மலை உச்சியில் தர்காவுக்கு மேலே உள்ள கல் தூண் விளக்குத் தூண் அல்ல என்று அரசு தரப்பிலும், தர்கா தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
மதுரையின் வரலாறு அறிந்த வழக்கறிஞர்களும் அது தீபத்தூண் அல்ல என்றும் மதுரையில் பல குன்றுகளில் இதுபோன்ற தூண்கள் உள்ளன என்றும் தெரிவித்தனர்.
தீபத்தூண் என வாதாடியவர்கள் அதற்கான ஆதாரத்தை முறையாக வழங்கவில்லை. அவர்களின் நோக்கம், தர்கா வழியாக தங்கள் அமைப்பினரை மேலே ஏற்றிச் செல்ல வேண்டும் என்பதுதான்.
தமிழ்நாடு அரசு மற்றும் தர்கா தரப்பின் வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில், தீபத்தூண் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டு, அந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது என்றும், அங்கே ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், தீபம் ஏற்றும் நடவடிக்கையை கோவில் நிர்வாகம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்தப் பகுதிக்கு மக்கள் செல்லக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், தீபத்தூணில் விளக்கு ஏற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்கிற அரசின் வாதமும் அச்சமும் அபத்தமானது என்றும், தங்களின் அரசியல் நோக்கம் நிறைவேறுவதற்காக எந்த ஒரு அரசும் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து செயல்படக்கூடாது” என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை பா.ஜ.க. டெல்லியிலிருந்து வரவேற்றது. தமிழ்நாடு பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்தமிழ்நாடு அரசு சனாதனத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், அதற்கு எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாகவும் பேட்டி அளித்தார்.
பா.ஜ.க. இணையமைச்சர் எல்.முருகன் உள்பட பலரும் இதே ரீதியில் கருத்து தெரிவித்தனர்.
தீபத்தூண் விவகாரம் தொடர்பாக பல தொல்லியல் ஆய்வுகளையும் அதற்கான ஆதாரங்களையும் முன்வைக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், இந்தத் தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி பேட்டி அளித்தார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம் எனத் தெரிவித்தார்.
தற்போது மதுரையில் வசிக்கும் யாரும், அந்த தீபத்தூண் எனப்படும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றியதைப் பார்த்ததில்லை. உச்சிப்பிள்ளையார் கோவில் அருகேதான் தீபம் ஏற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் பல ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட நிலையிலும் தீபம் ஏற்றும் இடம் மாறவில்லை.
தீபத்தூண் எனப்படுவது ஆங்கிலேயர் காலத்தில் நடப்பட்ட சர்வே கல்லா, சமணர்கள் காலத்தில் தீபம் ஏற்றப்பட்ட இடமா, சமணர்கள் இரவில் ஆலோசனை நடத்தும்வோது விளக்கு ஏற்றும் இடமா எனப் பல்வேறு கருத்துகள் வெளிப்படுகின்றன.
இவற்றில் உறுதியான ஆதாரம் எது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. எனினும், இந்தத் தீர்ப்பும் இதற்கான மேல்முறையீடும் எதிர்பார்ப்பிற்குரியனவாக உள்ளன.
ஆதாரங்களின் அடிப்படையில் நீதி நிலைக்கட்டும்.
நீதியின் தீர்ப்பினால், வன்முறைக் கூட்டத்தின் கொட்டம் அடங்கி, நல்லிணக்கம் நிலைக்கட்டும்.







