தேசபக்தியல்ல; துரோகம்!

இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் களத்தில் உணர்ச்சிப் பிழம்பாகத் திகழ்ந்த ‘வந்தே மாதரம்’ பாடல் இன்று மீண்டும் ஒரு விவாதப் பொருளாக்கப்பட்டிருப்பது தற்செயலானது அல்ல.

 1937-இல் நேரு, சுபாஷ் சந்திர போஸ், மௌலானா ஆசாத் போன்ற ஆளுமைகளும், மகாகவி ரவீந்திரநாத் தாகூரும் இணைந்து எடுத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை இன்று “திருத்துகிறோம்” என்ற பெயரில் சிதைக் கத் துடிப்பது தேசத்தின் பன்முகத்தன்மை மீதான நேரடித் தாக்குதலாகும்.

ஆனந்த மடம் நாவலின் ஒரு பகுதியாகப் பிறந்த இப்பாடலின் பிந்தைய சரணங்கள் தாய் நாட்டை ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டுத்  தெய்வமாகச் சித்தரிக்கின்றன.

 இந்தியா என்பது ஒரு மதம் சார்ந்த தேசமல்ல; அது பல நம்பிக்கைகள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்க ளின் சங்கமம். 

“உருவ வழிபாட்டை ஏற்காத பிற மதத்தினர் இப்பாடலை முழுமையாக ஏற்பதில் தயக்கம் காட்டுவார்கள்” என்ற தாகூரின் கருத்தை ஏற்று, முதல் இரண்டு சரணங்களை மட்டும் தேசியப் பாடலாக அறிவித்தது அன் றைய தலைவர்களின் முதிர்ச்சியைக் காட்டு கிறது. அது ஒரு ‘வெட்டு’ அல்ல; அது இந்தியா வின் பன்முகத்தன்மையை இணைக்கும் ‘பாலம்’.

இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆர்எஸ்எஸ் வகையறாக்கள் தேசத்தின் விடு தலையில் ஒரு துளியளவும் பங்களிக்காதவர் கள். மாறாக, தேசத்தைக் காட்டிக் கொடுத்து, மன்னிப்புக் கடிதம் எழுதி வெள்ளையர்களிடம் மண்டியிட்டவர்கள். 

தேசப்பற்று என்பது குடிமக்கள் தங்கள் நாட்டின் மீது கொள்ளும் நேர்மையான அன்பு. அதைச் சட்டத்தின் மூலமோ, மூன்று ஆண்டுச் சிறைத் தண்டனை என்ற மிரட்டல் மூலமோ ஒருவரிடம் உருவாக்கிவிட முடியாது.

தமிழகத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ போன்ற மாநில அடையாளங்களை மறைமுகமாகப் புறக்கணிக்கும் முயற்சியாகவும், ஒற்றைக் கலாச் சாரத்தைத் திணிக்கும் ‘நவ-பாசிச’ நடவடிக்கை யாகவுமே இந்த அரசாணை அமைந்துள்ளது. 

மேற்கு வங்கத் தேர்தலை முன்னிறுத்தி ‘துர்க்கை’ தொடர்பான வரிகளை அரசியல் லாபத்திற் காக மீட்டெடுப்பது மத உணர்வுகளையும் அரசி யலையும் கலந்து குளிர்காயும் செயலாகும்.

இந்தியா இன்று வரை வலிமையான நாடாக இருப்பதற்குக் காரணம் இங்கு நிலவும் வேற்றுமையில் ஒற்றுமைதான். மக்களின் தனி நபர் விருப்பத்தில் தலையிட்டு, ஒரு குறிப்பிட்ட மதக் குறியீடுகள் கொண்ட பாடலைப் பாடக் கட்டாயப்படுத்துவது ஜனநாயகத்தின் ஆன்மாவைச் சிதைக்கும் செயலாகும்.

தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாத ரத்தை கட்டாயமாக்குவது தேச ஒற்றுமையை வளர்க்காது; மாறாக, தேவையற்ற பிரிவினை யையும் கசப்பையும் உருவாக்கும்.

 இது தேசப்பற்று அல்ல; தேச ஒற்றுமைக்குச் செய்யும் துரோகம்.

'ரத்தநீர் வீழ்ச்சி'.

50 லட்சம் ஆண்டு கால ரகசியம்!

அண்டார்டிகாவின் கடும் குளிரில் பனிப்பாறையில் இருந்து ரத்தம் கொட்டுவது எப்படி?


50 லட்சம் ஆண்டுகளாகப் பனிக்கு அடியில் மறைந்திருந்த பிளட் ஃபால்ஸ் (Blood Falls) மர்மத்தை விஞ்ஞானிகள் உடைத்துள்ளனர். அதன் பின்னணி

உலகின் மிகக் கடுமையான குளிரும், வறட்சியும் நிலவும் அண்டார்டிகாவின் மெக்முர்டோ பள்ளத்தாக்கில், திகில் படக் காட்சிபோல பனிப் பாறையில் இருந்து ரத்தம் வழிந்தோடுவதைக் கண்டால் யார்தான் அதிர்ச்சியடைய மாட்டார்கள்?


சுமார் 5 அடுக்கு மாடி உயரத்தில் இருந்து கொட்டும் இந்நீர்வீழ்ச்சி, காண்போரை உறைய வைக்கும் ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனைப் பார்த்த தொடக்ககால ஆய்வாளர்கள், ஏதோ சிவப்பு பாசிகள் தான் இதற்குக் காரணம் என்று தவறாக நினைத்தனர்.

ஆனால், இதன் பின்னணியில் உள்ள உண்மை மிகவும் ஆச்சரியமானது!


அண்டார்டிகாவின் உறைபனி குளிரில் எதார்த்தமாக நீர் உறைந்துவிடும். ஆனால், இந்த நீர்வீழ்ச்சி மட்டும் -19°C வெப்பநிலையிலும் திரவ நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது.


1911-ஆம் ஆண்டு தாமஸ் கிரிஃபித் டெய்லர் என்ற புவியியலாளர் இதைக் கண்டுபிடித்தார். அதிலிருந்து நூறு ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகளுக்குப் பெரும் சவாலாக இருந்த இந்த மர்மம், தற்போது துலங்கியுள்ளது.


இந்த நீர்வீழ்ச்சியின் அடியில் சுமார் 400 மீட்டர் ஆழத்தில், ஒரு பழமையான ஏரி ஒளிந்துள்ளது. சுமார் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் நீர் நிலப்பகுதிகளுக்குள் புகுந்தபோது, பனிப்பாறைகள் அதனை அப்படியே மூடிவிட்டன.


ஆக்ஸிஜன் மற்றும் சூரிய ஒளி படாமல் இந்த நீர் பல மில்லியன் ஆண்டுகளாகத் தனிமைப்படுத்தப்பட்டது. பனிப்பாறைகள் பாறைகளைத் தேய்க்கும்போது, அந்த நீரில் இரும்புத் தாதுக்கள் அதிக அளவில் கலந்தன.


இந்த இரும்புச் சத்து மிகுந்த உப்பு நீர், பனிப்பாறையின் இடுக்குகள் வழியாக வெளியே வந்து வெளிக்காற்றுடன் சேரும்போது, அது உடனடியாக துருவாக (Iron Oxide) மாறுகிறது. ஒரு இரும்பு ஆணி துருப்பிடித்தால் எப்படி சிவப்பாகுமோ, அதேபோலத்தான் இந்நீரும் ரத்தச் சிவப்பாக மாறுகிறது.


இந்த "ரத்த நீர்வீழ்ச்சி" வெறும் காட்சிப் பொருள் மட்டுமல்ல, இது விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரிய பாடத்தையும் கற்றுக்கொடுக்கிறது. ஆக்ஸிஜன் மற்றும் சூரிய ஒளி இல்லாத அந்தப் பழமையான ஏரிக்குள் நுண்கிருமிகள் உயிர்வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இது வியாழன் கோளின் நிலவான 'ஐரோப்பா' போன்ற பனி படர்ந்த மற்ற கிரகங்களிலும், இதே போன்ற சூழலில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.


இந்நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதிக்குச் செல்வது அவ்வளவு எளிதல்ல. ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே செல்லக்கூடிய மிகவும் தொலைதூரப் பகுதியில் இது அமைந்துள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக அண்டார்டிகாவின் பனிக்கட்டிகள் உருகி வருவதால், இந்த நீர்வீழ்ச்சியில் வரும் காலங்களில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.


இயற்கை அன்னை தனது மடியில் ஒளித்து வைத்துள்ள விந்தைகளில், இந்த "பிளட் ஃபால்ஸ்" ஒரு ரத்தச் சிவப்புக் காவியம் என்பதில் சந்தேகமே இல்லை.


'எங்கும் தமிழ்!

எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்

எகிப்தின் கிங்ஸ் பள்ளத்தாக்கில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் பண்டைய வர்த்தகத் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


எகிப்தில் உள்ள புகழ்பெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான 'கிங்ஸ் பள்ளத்தாக்கில்' (Valley of the Kings) உள்ள பாறைக் கல்லறைகளில், 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், மொத்தம் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


இதில் 20 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், மீதமுள்ள 10 கல்வெட்டுகள்பிராகிருத மொழிகளிலும் உள்ளன.


கி.பி 1 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் எகிப்தின் பண்டைய தலைநகரான 'தீபஸ்' (Thebes) பகுதிக்கு மசாலாப் பொருட்கள் மற்றும் பிற வர்த்தகங்களுக்காகச் சென்றதை இந்தக் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.


இந்த ஆய்வில் சுவாரசியமான தகவலாக, 'சிகை கொற்றன்' என்ற தமிழரின் பெயர் 5 வெவ்வேறு பிரமிடுகளில், 8 இடங்களில் கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக, ஒரு கல்வெட்டில் 'சிகை கொற்றன் - வர கண்ட' (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) எனப் பொறிக்கப்பட்டுள்ளது.


ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்றது மட்டுமின்றி, அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்து உள்ளனர் என்பதற்கு இதுவே முதல் நேரடி ஆதாரமாக கருதப்படுகிறது.


தங்கம் தென்னரசு பதிவு

இது இந்தியப் பெருங்கடல் கடல் வணிக வரலாற்றை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் முக்கியமான திருப்புமுனைக் கண்டுபிடிப்பாக வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகின்றனர்.


எதிர்காலத்தில் மேலும் விரிவான அகழ்வாய்வுகள் மற்றும் மொழியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், பண்டைய தமிழர்களின் உலகளாவிய தடம் பற்றிய பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


இந்தத் தகவலை, தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மாநாட்டில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் (Prof. Ingo Strach) மற்றும் பிரான்சின் பேராசிரியர் சார்லோட் ஷ்மிட் (Prof. Charlotte Schmidt) ஆகியோர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை