ஒன்றும் மாறாது!
உச்சநீதிமன்றத் தீர்ப்பால் மாறாது.
டிரம்ப் அறிவிப்பு!
பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவித்துள்ள அதிபர் டிரம்ப், ‘இனி இந்தியா தான் வரி செலுத்தும், அமெரிக்கா வரி செலுத்தாது’ என கூறி உள்ளார்.
மேலும், பரஸ்பர வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைத்து உலக நாடுகளுக்கும் புதிதாக 15 சதவீத தற்காலிக வரியை அவர் விதித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவசரகால அதிகார சட்டங்களின் கீழ், உலக நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு விதித்த பரஸ்பர வரி செல்லாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
உலக நாடுகள் மீது விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும் அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறிவிட்டார் என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகள் ரத்து செய்யப்படும் என உலக நாடுகள் நிம்மதி அடைந்தன.
இந்நிலையில், அனைத்து உலக நாடுகள் மீதும் புதிதாக 10 சதவீத தற்காலிக இறக்குமதி வரியை நேற்று காலை அறிவித்த டிரம்ப், மாலையில் அதை 15 சதவீதமாக அதிகரித்தார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் அதற்கான பிரகடனத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அதில், ‘அடிப்படை சர்வதேச கட்டண சிக்கல்களைத் தீர்க்கவும், அமெரிக்க தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் வர்த்தக உறவுகளை மறுசீரமைக்க நிர்வாகத்தின் பணியைத் தொடரவும் உலக நாடுகளுக்கு 10 சதவீத தற்காலிக இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.
மேலும் உள்ளடிரம்ப் அறிவிப்பின்படி, 15 சதவீத தற்காலிக இறக்குமதி வரி வரும் 24ம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு அமலுக்கு வரும். 150 நாட்களுக்கு அமலில் இருக்கும். இந்தியாவை பொறுத்த வரை, 25 சதவீத பரஸ்பர வரியையும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபாராதமாக 25 சதவீத வரியையும் அமெரிக்கா கடந்த ஆண்டு ஆகஸ்டில் விதித்தது.
இதன்பின், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா அளித்த வாக்குறுதியை தொடர்ந்து, 25 சதவீத அபராதத்தை ரத்து செய்தது.
மேலும் இந்தியா மீதான பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைக்க ஒப்புக் கொண்டு சமீபத்தில் இரு நாடுகளும் இருதரப்பு வரைவு வர்த்தக ஒப்பந்த அறிக்கையை வெளியிட்டன.
விரைவில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது.
தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இந்தியாவுக்கு எதிரான வரி முழுமையாக நீக்கப்படும் என்றும் அதன் தாக்கம் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்து, வெள்ளைமாளிகையில் நேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், ‘‘நீதிமன்ற தீர்ப்பால் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது. எதுவும் மாறாது.
இனி இந்தியா வரிகளை செலுத்தும், நாங்கள் எந்த வரியும் செலுத்த மாட்டோம். இது இதற்கு முன்பு இருந்ததற்கு நேர்மாறானது. இந்த ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும்’’ என கூறி உள்ளார்.
மேலும், தனக்கு எதிராக தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக சாடிய அதிபர் டிரம்ப், ‘‘உச்ச நீதிமன்றத்தின் வரிகள் தொடர்பான தீர்ப்பு மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
நீதிமன்றத்தின் சில உறுப்பினர்களுக்கு நமது நாட்டிற்கு சரியானதை செய்ய தைரியம் இல்லாததற்காக முற்றிலும் வெட்கப்படுகிறேன். சரியான முட்டாள்களாகவும் அடிவருடிகளாகவும் இருக்கிறார்கள்.
அவர்களின் முடிவு தவறானது. ஆனால் அது ஒரு பொருட்டல்ல. ஏனென்றால் எங்களிடம் மிகவும் சக்திவாய்ந்த மாற்று வழிகள் இருக்கின்றன’’ என்றார்.
* மோடி மீண்டும் சரணடைவார்
இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் எதுவும் மாறாது என அதிபர் டிரம்ப் கூறிய நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார். அவரது துரோகம் இப்போது அம்பலமாகி விட்டது. அவர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.
அவர் மீண்டும் சரணடைவார்.
பிரதமரின் விரக்தி மற்றும் சரணடைதலால் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிற்கு சோகமானதாக மாறி விட்டது’’ என கூறி உள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் மீண்டும் ஒருமுறை நேற்றைய பேட்டியிலும் குறிப்பிட்டார். 200 சதவீத வரி விதிப்பதாக இந்தியா-பாகிஸ்தானை மிரட்டி வழிக்கு கொண்டு வந்ததாக மீண்டும் அவர் கூறினார்.
ஆனால் இரு தினங்களுக்கு முன் இந்தியா-பாகிஸ்தான் போரில் 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறிய நிலையில் நேற்றைய பேட்டியில் 10 விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக கூறினார்.
கடந்த ஓராண்டில் அவர் இந்த விமானங்களின் எண்ணிக்கையை அடிக்கடி மாற்றி வருகிறார். ஆரம்பத்தில் 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறிய டிரம்ப், கடந்த ஆகஸ்டில் 7 என்றும், நவம்பரில் 8 என்றும் இரு தினங்களுக்கு முன் 11 என்றும் இப்போது 10 என்றும் கூறி உள்ளார்.
* இதுவரை வசூலித்த ரூ.12 லட்சம் கோடி என்னவாகும்?
அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகள் மூலம் இதுவரை சுமார் 133 பில்லியன் டாலர் (ரூ.12 லட்சம் கோடி) வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
தற்போது பரஸ்பர வரிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த தொகையை நிறுவனங்களுக்கு திருப்பித் தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்க கருவூலத்தில் இருந்து நிறுவனங்களுக்கு தாமாக திருப்பிப் தரப்படுமா, இல்லாவிட்டால் இந்த தொகையை கேட்டு நிறுவனங்கள் மீண்டும் நீதிமன்ற கதவை தட்டுமா என்பது விரைவில் தெரியவரும்.
இது குறித்து ஒன்றிய வர்த்தக அமைச்சகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் கவனித்துள்ளோம்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பும் செய்தியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.
அமெரிக்க நிர்வாகத்தால் சில நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முன்னேற்றங்கள் அனைத்தையும் அவற்றின் தாக்கங்களை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்’ என கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது என டிரம்ப் கூறியது குறித்து இந்திய ஒன்றிய மோடி அரசு தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை.
கொரோனா திட்டம்?
1995 - மிக இரகசியமாக வகைப்படுத்தப்பட்டிருந்த அமெரிக்கா வின் 'கொரோனா' திட்டம் பற்றிய தகவல்கள், வெளியிடத்தக்கவையாக மாற்றப்பட்ட நாள்
சோவியத் ஒன்றியம், சீனா உள்ளிட்ட பகுதிகளைக் கண்காணிப்பதற்கென்றே தனியான இரகசிய செயற்கைக்கோள்களை அமெரிக்கா ஏவிய திட்டம்தான் கொரோனா திட்டம் என்று பெயரிடப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின்கீழ், 1959 ஜூனிலிருந்து, 1972 மே வரை அமெரிக்கா உளவு பார்த்தது. இதற்காகவே கேஎச்-1,2,3 என்ற வரிசையில் பெயர்கள் சூட்டப்பட்ட 8 வகைகளைச் சேர்ந்த 144 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன.
கேஎச் என்பது சாவித்துளை(கீ ஹோல்) என்பதன் சுருக்கம். அடுத்தவர் வீட்டுக்குள் சாவித்துளை வழியாக எட்டிப் பார்ப்பது என்ற பொருளுடன், தெரிந்தே இந்தப் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இதற்கு முன்பே 1955இலிருந்து, யு-2 என்ற உளவு விமானத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா உளவு பார்த்துக்கொண்டிருந்தது.
அப்படி உளவு பார்த்த விமானத்தை 1960இல் சோவியத் சுட்டு வீழ்த்தி, விமானியும் பிடிபட்டவுடன், அது காலநிலையை அறியும் விமானம் என்று அமெரிக்கா பதிலளித்தது. ஆனால், அந்த விமானம் சேதமின்றிக் கிடைத்திருந்ததுடன், அதிலிருந்த சக்திவாய்ந்த கேமெராவும் சோவியத்திடம் சிக்கிய பின்னணியில், விமானிக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை வழங்கியது சோவியத்.
1962இல் ஒரு கைதிகள் பரிமாற்றத்தின்போது அந்த விமானி அமெரிக்காவுக்குத் திரும்பினார்.
இந்தப் பின்னணியில்தான் இந்த கொரோனா திட்டம் உருவாக்கப்பட்டு, அறிவியல் ஆய்வு என்று வெளியுலகிற்குச் சொல்லப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள்கள், படமெடுத்து ஃபிலிம்களை திருப்பியனுப்பும். பாராச்சூட்மூலம் மிதக்கும் அவற்றை விமானத்திலிருந்து பிடித்துக்கொள்வார்கள்.
அவ்வாறு (144இல்) 102 முறை வெற்றிகரமாகத் திரும்பிய ஃபிலிம்களில், 194 கோடி ச.கி.மீ. பரப்பை அமெரிக்கா படமெடுத்திருந்தது. ஏறத்தாழ 85 கோடி டாலர்கள்(ரூபாயில் ஆறாயிரம் கோடிக்கும் அதிகம்!) செலவிடப்பட்ட இத்திட்டம் பற்றிய தகவல்கள், எடுக்கப்பட்ட படங்கள் உள்ளிட்டவற்றை, வெளியிடத் தக்கவையாக அமெரிக்கா 1995இல் மாற்றியது.
இத்திட்டத்தில் எடுக்கப்பட்ட படங்கள் உண்மையில் குறிப்பிடத்தக்க பலன்கள் எதையும் அமெரிக்காவுக்கு அளித்திராத நிலையில், வெளியிடப்பட்ட படங்களை ஆய்வு செய்து, பண்டைய நாகரிகங்களின் வாழ்விடங்கள், மட்பாண்டங்கள் செய்த இடங்கள், தொன்மையான சின்னங்கள் முதலியவற்றை ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் கண்டறிந்தது.
ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆய்வில், இப்படங்களைக்கொண்டு மெசபடோமியப் பகுதியின், அறியப்படாத பயணத் தடங்கள் கண்டறியப்பட்டன.
கொரோனாவிற்குப்பின் செயல்படுத்தப்பட்ட சாமோஸ் திட்டம், படமெடுக்கப்பட்ட ஃபிலிமை செயற்கைக்கோளிலேயே தானியங்கி முறையில் அச்சிட்டு, படத்தை மின்னணு முறையில் புவிக்கு அனுப்பினாலும், கொரோனா அளவுக்கு அதிகப்படங்களை அது எடுக்கவில்லை.




