பணிகளை சீர்குலைக்க

திமுக தேர்தல் பணிகளை சீர்குலைக்க

ராகுல் வருகை?

சென்னைக்கு அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் ராகுல் நவீன் வியாழக்கிழமை வரவுள்ளார்.


தில்லியில் இருந்து வருகைதரும் ராகுல் நவீன், சென்னையில் மூன்று நாள்கள் முகாமிட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார்.


தற்போது நீதிமன்றங்களில் உள்ள தமிழ்நாடு தொடர்பான வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்தில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யக் கூறி, அமலாக்கத் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிபி-க்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.


இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.


அந்த வழக்கில், அமைச்சர் கே.என். நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இதனிடையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் நடக்கும் நேரம் வருமானவரி,அமுலாக்கத்துறை இதை செய்வதே தி.மு.க வினரின் தேர்தல் பணிகளை சீர்குலைக்கும் பா.ஜ.கட்சியின் திட்டம்தான என கூறப்படுகிறது.

இறுதி வணக்கம்!

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.


பின்னர் அவரது உடல், அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தகைசால் தமிழர் நல்லகண்ணு, தனது 101-வது வயதில் நேற்று காலமானார்.


பின்னர் அவரது உடல், மருத்துவமனையிலிருந்து தொண்டர்கள் புடைசூழ ஆம்புலன்ஸ் மூலம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


அங்கு இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நல்லகண்ணுவின் உடல் வைக்கப்பட்டது. நேற்று முதல் அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.


நேற்று மாலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


இந்நிலையில், இன்று காலை ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், பிற்பகலில், முதலமைச்சர், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.


தகைசால் தமிழர் நல்லகண்ணு உடல் அருகே நின்று, தகைசால் தமிழருக்கு வீர வணக்கம், செவ்வணக்கம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கமிட்டார்.


அதைத் தொடர்ந்து, 72 குண்டுகள் முழங்க நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.


அதைத் தொடர்ந்து, தியாகராய நகர் பாலன் இல்லத்திலிருந்து நல்லகண்ணு உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 


அதில், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தி பிரியா விடை கொடுத்தனர். பின்னர், நல்லகண்ணுவின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு, ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டது.


தனது இறப்பிற்குப் பின், உடலலை மருத்துவமனைக்கு தானமாக வழங்க வேண்டும் என்று நல்லகண்ணு விருப்பம் தெரிவித்திருந்தார்.

அதனாலேயே, அவரது கடைசி விருப்பப்படி, அவரது உடல் அரசு மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது.

நித்தியானந்தா முக்தியானந்தா?

 திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தா பிரபல வார இதழில், ஆன்மிகத் தொடரை எழுதியதன் மூலம் பிரபலமானர். 


ஆங்கிலத்திலும் தமிழிலும் வசீகரிக்கும் வகையில் இருந்த அவரின் பேச்சுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பெருகினர்.


தொடர்ந்து கர்நாடக மாநிலம், பிடதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை அமைத்தார். இதற்கிடையே பிரபல நடிகை ஒருவருடன் அவர் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண் சீடர்களைத் தவறாக வழிநடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பெங்களூருவில் அவர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவர் தலைமறைவு ஆனார். எனினும் தனது சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் சமூக வலைதளங்கள் மூலம் அப்டேட் அளித்து வந்தார்.

தொடர்ந்து கைலாசா என்னும் ஒரு நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் விரும்புவோர் கைலாசாவின் குடிமகன் ஆகலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். 

இந்த நாடு எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. எனினும் கைலாசாவுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட்,  பணம் ஆகியவற்றை உருவாக்கி நித்தியானந்தா வெளியிட்டார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்று கூறப்பட்டது. 

அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கோமாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. எனினும் அதில் உண்மையில்லை என்று நித்தியானந்தாவே வீடியோவில் தோன்றிப் பேசினார்.

இந்நிலையில், நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

 ஆனால், கைலாசாவில் இருந்து யாரும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தவோ, ஆட்சேபிக்கவோ இல்லை.

இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர்த் தியாகம் செய்துவிட்டதாக நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், ஆன்மிக சொற்பொழிவு வீடியோவில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

எனினும், முன்பு போன்றே நித்தியானந்தா வெளியுலகுக்குத் தோன்றி இத்தகவல் உண்மையில்லை என அறிவிக்க வேண்டும் என்று அவரின் சீடர்கள் அவர் இறந்ததைதை நம்பாத சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை