இந்து தேசியத்திற்கு ..

இந்து தேசியத்திற்கு எதிரானவர் 

வ.உ.சிதம்பரனார்!

தமிழ் மண்ணில் தேசியம் ஒருபோதும் வீழாது”-  நாட்டின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், வ.உ. சிதம்பரனாருக்கு  150 அடி உயர சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் இவ்வாறு பேசியிருப்பது கவனிக்க வேண்டியது. 

அடுத்து “தருமத்தை வீழ்த்தும் சக்தி உலகில் இல்லை” என்றும் பேசியிருக்கிறார். வ.உ.சி-க்குச் சிலை எடுப்பது மகிழ்ச்சியே. பாராட்டுகள். ஆனால் துணை ஜனாதிபதியின் பேச்சு சிக்கலானது. அவரது அரசியல் பூர்வீகம் ஆர்.எஸ்.எஸ் என்பதை உலகறியும்.

 தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டவர். துணை ஜனாதிபதி என்பதாலேயே இந்த பின்புலத்தை நிராகரிக்க முடியுமா?

 தேசியமும் ஆர்.எஸ்.எஸ்-சின் திரிபும் நீண்ட காலமாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை இந்து முன்னணியின் மறைந்த ராமகோபாலன்  முன்னிறுத்தும் போதெல்லாம் அவர் சொன்ன “தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்ற வாசகத்தைப் பயன்படுத்துவார்.

தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த முத்துராம லிங்கத் தேவர்  சொன்ன தேசியத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்காரரான ராமகோபாலனின் தேசியத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை வரலாற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும். 

இப்போது வ.உ.சி-யை அவர்கள் சொல்லும் ‘தேசிய’ வலைக்குள் இழுக்கவே சி.பி. ராதா கிருஷ்ணன் முயற்சிக்கிறார். ஆர்.எஸ்.எஸ் சொல்லும் தேசியம் ‘இந்தியத் தேசியம்’ அல்ல. 

அது ‘இந்து தேசியம்’. தெளிவாகச் சொன்னால் கோல்வால்கர் சொல்லியிருப்பது போல், இவர்கள் பூகோள தேசியத்தை ஏற்கவில்லை; மாறாகக் கலாச்சார தேசி யமே இவர்களது தேசியம் சார்ந்த கருத்து. இத்தகைய ஆர்.எஸ்.எஸ் தேசியத்திற்கும் வ.உ.சி-க்கும் ஏதாவது தொடர்பு உண்டா? 

1906 ஆம் ஆண்டில் “விவேகபானு” இதழில் வ.உ.சி எழுதிய கட்டுரையில், “சுதேசத்தார் ஒன்று சேர்வதற் கும் ஒற்றுமையாக இருப்பதற்கும் முக்கியத் தடைகள் சாதியபிமானம், மதாபிமானங்களே! 

அவரவர் சாதி, மதாபிமானங்களை அவரவர் சொந்த விஷயங்க ளில் பாராட்டிப் பலரும் ஒன்று கூட ஒரே மனத்தின் சுதேச அடிமைத்தனத்தை நீக்கி சுயார்ச்சிதம் பேண உழைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸ் உருவாவதற்கு முன்பே அதன் இந்து தேசியக் கருத்தியல் முளைவிடும் போதே வ.உ.சி இந்து தேசியத்தை நிராகரித்தார். அதுமட்டு மல்ல, அரசியலில் மதத்தைக் கலப்பதில் உடன்பா டில்லாதவர்.

 தமது அரசியல் குருவான திலகரிட மிருந்து இவ்விஷயத்தில் மாறுபாடான நிலையை எடுத்தவர் வ.உ.சி. அவர் தமிழரின் அடையாளமாகத் திருக்குறளை முன்னிறுத்தினார்.

விடுதலை வேள்வியும் தியாகமும் நாமக்கல் கவிஞர், வ.உ.சி-யை இப்படிப் பாடியிருக்கிறார்: “வல்லாளன் சிதம்பரனார் சிறையிற்பட்ட வருத்தமெல்லாம் விரிந்துரைக்கில் வாய்விட்டேங்கி கல்லான மனத்தவரும் கண்ணீர் கொட்டக் கனல்பட்ட வெண்ணெயெனக் கரைவார் இன்றும்...”

 வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக விடுதலை வேள்வியில் தன்னை அர்ப்பணித்த வ.உ.சி., மன்னிப்புக் கடிதம் எழுதியவரல்ல. சமரசம் செய்து கொண்டவரல்ல. 

செல்வந்தரான வ.உ.சி சிறைப்பட்டு, செக்கிழுத்து, கல்லுடைத்து, வெறும் கேழ்வரக்குக் கூழை உண்டு நாட்டின் விடுதலைக்காக இன்னல்பட்டவர். ஆனால், இந்து ராஷ்டிரம் கிடைக்காது என்று சொல்லி விடுதலைப் போராட்டத்தில் ஒதுங்கி நின்றது தானே ஆர்.எஸ்.எஸ்.கூட்டம். 

அந்த ஆர்.எஸ்.எஸ் வழிவந்த சி.பி. ராதாகிருஷ்ணன், வ.உ.சி-யைப் புகழும் போக்கில் தேசியம் பற்றி பேசுவது எதற்காக? வள்ளுவரின் குறள் மீது வ.உ.சி-க்கு இருந்த பற்று அவர் சுயசரிதையில் வெளிப்படும். அவரது அரசியல் குருநாதரான திலகர், பகவத் கீதைக்கு உரை எழுதியவர். 

சீடரான வ.உ.சி-யோ திருக்குறளுக்கு உரை எழுதினார். தொல்காப்பியத்தை அழகுறப் பதிப்பித்தவர் வ.உ.சி. ‘கப்பலோட்டிய வ.உ.சி’ என்று அவர் போற்றப்படவில்லை; ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தான் புகழப்பட்டார். இது எதேச்சையானதல்ல.

மொழியின் மீது அவருக்கு இருந்த பற்று, தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு இவைதான் அவரை கப்பலோட்டிய தமிழன் என்று அழைப்பதற்குக் காரணமாய் இருந்தது. 

தமிழ் தேசியம் எனும் தளத்தில் வலுவாகக் காலூன்றி  நின்றுதான் இந்தியத் தேசியத்தை வளர்த்தெ டுத்தார்.

 இந்தியைத் திணிப்பதன் மூலமாகச் சமஸ் கிருதத்தை வளர்த்தெடுக்கும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக தலைவர்கள் வ.உ.சி-க்கு அருகில் நிற்க முடியுமா? 

மதவெறிக்கு எதிரான  முற்போக்கு முகம் பேராசிரியர் வையாபுரி பிள்ளை அவர்கள் வ.உ.சி-யைப் பற்றிக் குறிப்பிடும் போது, “கொழுந்து விட்டெரியும் அனல் போல் தேச பக்தியும் தாய்மொழிப் பற்றும் அவரது ஆன்மாவில் எப்போதும் கனன்று ஜொலித்துக் கொண்டிருந்தன” என்று கூறுகிறார்.

1935-இல் சைவ சமயத்தின் தத்துவ நூல்களில் ஒன்றான மெய்கண்ட தேவர் எழுதிய சிவஞான போதம் எனும் நூலுக்கு உரை எழுதி அதை வெளி யிட்டார் வ.உ.சி.

 அதில் உரைப்பாயிரம் என்ற  தலைப்பில் இவ்வாறு கூறுகிறார்: “...மத வேற்று மையைக் காண்பவர்களும் பேசுபவர்களும் ‘யான்’, ‘எனது’ என்னும் மதவெறி பிடித்த மாக்களேயென்றும், நமது நாடு தற்காலம் மத வேற்றுமைகளையோ, சாதி வேற்றுமைகளையோ, வேறு வேற்றுமைகளையோ காண்பவர்களும் பேசுபவர்களும் தேசத்திற்குத் தீங்கிழைப்பவர்களேயென்றும் யான் கருதுகிறேன்...” வ.உ.சி இந்து தேசியத்தை எந்தச் சூழலிலும் ஏற்றுக் கொண்டவரல்ல.

 இதைத் தெரியாதவரா துணை ஜனாதிபதி? இல்லை, தெரிந்தேதான் பொய் சொல்லு கிறார். இந்து தேசியத்தின் அடையாளமாகத் தமிழ்நாட்டில் பலரையும் மாற்றும் கபட நாடகத்தின் ஒரு காட்சிதான் இது. இன்னொன்று தர்மம் பற்றியும் பேசியிருக்கிறார். 

இவர்கள் தர்மம் என்ற சொல்லுக்குள் மனுதர்மத்தை மறைத்து வைத்துப் பேசுப வர்கள் என்பதைத் தமிழக மக்கள் அறிவார்கள். 

கோயம்புத்தூர் சிறை வாசத்தில் தாம் மொழி பெயர்த்த ‘மனம் போல் வாழ்வு’ என்ற நூலுக்கு எழுதிய முகவுரையில் “உயிர்களுக்கு உதவுதலே கடவுளை ஆராதித்தல் என்னும் கொள்கையுடைய எனக்கு” என்று வ.உ.சி குறிப்பிடுகிறார்.

 கடவுளின் பெயரால் கலவரம் செய்பவர்களுக்கும் வ.உ.சி-க்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? 

தொழிலாளர் தலைவரும்  ஜீவாவின் பார்வையும் வ.உ.சி-யின் மறுபக்கம் பற்றி சி.பி.ராதா கிருஷ்ணன் தெரிந்திருப்பார் என்றே கருதுகிறோம். “தமிழகத்தின் முதல் தொழிலாளர் தலைவர் வ.உ.சி” என்று தோழர் ஜீவா கூறுகிறார். 

1908-இல் தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களை ஒன்று திரட்டி வேலை நிறுத்தம் செய்ய வைத்து வெற்றியும் கண்டார். 

நாட்டின் தென் கோடியில் நடந்த இந்தப் போராட்டம் இந்தியாவைத் தாண்டி ரஷ்யா வரை கவனிக்கப்பட்டது. தொழிலாளி வர்க்கத்தை இந்திய விடுதலை இயக்கத்துடன் இணைக்கும் நோக்குடன் வ.உ.சி இப்போராட்டத்தை நடத்தினார்.

“சிதம்பரனார் அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்த அப்பழுக்கற்ற தேச பக்தர் மட்டுமல்லர்; தொழிலாளர் சங்கங்களையும் விவசாய சங்கங்க ளையும் அமைத்து அவர்களது உரிமைப் போராட்டங்க ளைத் தலைமை தாங்கி நடத்திய உழைக்கும் மக்களின் உறுதுணைவர்” என்கிறார் தோழர் ஜீவா.

 பேராசிரியர் நா. வானமாமலை கூறியது போல் தமிழகத்தின் முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி வ.உ.சி.

 அரசியல் விடுதலையையும், சமூக விடுதலையையும், பண்பாட்டு விடுதலையையும் இணைத்துப் போராடியவர். 

ஆனால், வ.உ.சி-யைச் சிலையாக்கி அவரது உயரிய சிந்தனைகளைச் சிதைக்கும் உள்நோக்கம் தான் துணை ஜனாதிபதி யின் பேச்சில் இருக்கிறது.

 வ.உ.சி-யைத் தமிழ்நாட்டின் முற்போக்கு இயக்கங்கள் ஒருபோதும் வலதுசாரிகள் கைகளில் ஒப்படைக்காது.

                                                                             - கே.வசந்தன்

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சாட்சியமோ, ஆதரங்களோ இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த CBI மேல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட அனைவரையும் விடுதலை செய்யவும் அதிரடி உத்தரவிட்டுள்ளது டெல்லி சிறப்பு நீதிமன்றம்.

பொய்களையும், அவதூறுகளையும், வெறுப்பையும் முதலீடாக வைத்து இயங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை போலவே ED, CBI, IT ஆகியவை இயங்கி வருவது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

தமிழ்நாட்டிலும், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல எதையாவது செய்ய முயற்சிக்கும் பா.ஜ.கவின் அடியாள் அமைப்புகளுக்கு இறுதியில் அவமானமே மிஞ்சும்; உங்களின் முகத்திரை கிழியும்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை