சனாதன (நீதிபதி) கள்"
“சனாதன ஒழிப்பு” பற்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர் சங்க மாநாட்டில் பேசியது குறித்து சமூக வலைதளத்தில் எதிர்வினை ஆற்றிய, சங்கி அமித் மாளவியா “80 சதவிகிதமான மக்களை இனப்படுகொலைக்கு ஆளாக்க சொல்கிறீர்களா?” என்று பதிவிட்டிருந்தார்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால் சனாதனம் என்ற பெயரில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிற பாகுபாடுகளை ஒழிக்க வேண்டுமென்பதுதான் அர்த்தமே தவிர, அதைப் பின்பற்றுகிற இந்துக்களை கொல்ல வேண்டுமென்பது அர்த்தம் கிடையாது. இது தெரிந்திருந்தாலும் சங்கிகள், இதைப்பயன்படுத்தி ஒரு சமூகப் பதற்றத்தை உருவாக்கலாம், அதன் மூலம் தமிழ்நாட்டில் திராவிட அரசியலுக்கு எதிராக ஒரு வெறுப்புணர்வை உருவாக்கலாம் என்ற உள்நோக்கத்தோடு வன்ம கருத்துக்களை பரப்பினர்.
இதனால், அமித் மாளவியாவுக்கு எதிராக திருச்சி நகர காவல் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்துள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தனி நீதிபதி ஸ்ரீமதி, அரசியலமைப்புக்கு புறம்பான, பல்வேறு அபத்தமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
“சனாதன ஒழிப்பு என்ற சொல்லாடல், அந்தத் தர்மத்தைப் பின்பற்றும் மக்களை ஒழிப்பதைக் குறிக்கும் 'இனப்படுகொலைக்கு' (Genocide) சமமானது. ஒரு மதத்தையே ஒழிக்க வேண்டும் என்று கூறுவது 'மதப்படுகொலை' (Religicide) ஆகும். இது போன்ற வெறுப்புப் பேச்சுகளைப் பேசுபவர்கள் தப்பித்து விடுகிறார்கள், ஆனால் அதற்கு எதிர்வினை ஆற்றுபவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குகிறார்கள் என்பது வேதனையளிக்கிறது.
கடந்த 100 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் இந்து மதத்திற்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியே இந்த சனாதன ஒழிப்புப் பேச்சு” என்று ஒரு ஆர்.எஸ்.எஸ்.வாதியாகவே மாறி நீதிபதி தன் அரசியலமைப்பு கடைமையை தவறி கருத்து தெரிவித்திருக்கிறார்.
சனாதனத்தை ஒழிப்பது என்றால் இந்துக்களை ஒழிப்பது என்று அர்த்தமானால், ‘நீதி செத்து விட்டது’ என்றால் நீதிபதிகள் செத்து விட்டார்கள் என்று அர்த்தமாகுமா?
பெரியாரை அழிக்க வேண்டுமென்று சங்கிகள் சொல்கிறார்களே?
அப்படியானால் பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுகிற லட்சக்கணக்கானோரை கொல்ல வேண்டுமென்ற அர்த்தத்தில்தான் இதைச் சொல்கிறார்களா?
திராவிடத்தை ஒழிக்க வேண்டுமென்று சங்கிகள் கூறுவது, தென்னிந்தியாவில் வாழும் சுமார் 30 கோடி மக்களையும் கொல்ல வேண்டுமென்று பொருள்படுமா? இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டுமென்று நீண்ட காலமாக கூறிக்கொண்டு இருக்கிறீர்களே?
அப்படியானால் இந்த நாட்டில் இடஒதுக்கீட்டை பெறுகிற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் அனைவரையும் கொன்றழிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் இதைச் சொல்கிறீர்களா? என்கின்றன எண்ணற்ற கேள்விகளை நாம் அவர்களைப் பார்த்து எழுப்ப வேண்டியிருக்கிறது.
சங்கிகளைப் பார்த்து எழுப்ப வேண்டிய இந்தக் கேள்விகளையெல்லாம் இப்போது நீதித்துறையில் ஒளிந்திருக்கிற காவி ஆடுகளைப் பார்த்தும் எழுப்ப வேண்டிய நிலைக்கு நாடு வந்திருக்கிறது.
அதேபோல சமீபத்தில், “சனாதன தர்மத்தை மனதில் வைத்து எஞ்சிய பணிக்காலத்தில் சிறப்பாகப் பணியாற்றுவேன்” என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் கூறியிருக்கிறார். நான்கு வர்ணங்களாக மக்களைக் கூறுபோடுவதுதான் சனாதனம். இன்னாருக்கு இன்ன தண்டனை என்று பாகுபடுத்துவதுதான் சனாதன தர்மத்தின் வழக்கம்.
அந்த தர்மத்தின்படி எப்படி தீர்ப்பு வழங்க வேண்டுமென்று மனு சாஸ்திரம் தெளிவாகக் கூறுகிறது.
•பிராமணனுக்குத் தலையை மொட்டை அடித்தால் போதும். அதுவே உயிர்த் தண்டனைதான். ஏனையோருக்கு உயிர்த் தண்டனையே உண்டு- (மனு 8:378).‘
•எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக - (மனு 8:379).“
•பிராமணரிடத்தில் ‘கூறுக’ என்றும், க்ஷத்திரியனிடத்தில் ‘உண்மையைக் கூறுக’ என்றும், வைசியனிடத்தில் அவனுடைய ‘பசுக்கள், பொன், தானியங்கள் மேல் ஆணையிட்டுக் கூறுக’ என்றும், சூத்திரனாயின் ‘தலைமீது ஆணையிட்டு, பொய் கூறினால் வரும் கேடுகளைக் கூறி அச்சுறுத்திக் கூறுக’ என்றும் பிரமாணம் செய்க - (8.88).“
•க்ஷத்திரியர் முதலான மூவகைக் கீழ் வருணத்தார் பொய்ச் சாட்சி கூறினால் அரசன் முதலில் அபராதம் விதித்துவிட்டுப் பிறகு அவர்களை நாடு கடத்த வேண்டும்ட் ஆனால் பிராமணராயின் நாடு கடத்தல் மட்டுமே செய்ய வேண்டும் - 8:123”
“புரோகிதனுக்கு அவதூறு இழைக்கும் க்ஷத்திரியனுக்கு நூறு பணமும், அவ்வாறு தவறிழைக்கும் வைசியனுக்கு நூற்றைம்பது அல்லது இருநூறு பணமும், ஒரு அடிமையோ, தொழிலாளியோ தவறிழைத்தால் கசையடியும் விதித்தல் வேண்டும். - (8:267).
ஆனால் “ஒரு புரோகிதர் க்ஷத்திரியனுக்கு அவதூறு விளைவித்தால் ஐம்பது பணமும், வைசியனுக்கு அவதூறு விளைவித்தால் பன்னிரண்டு பணமும் அபராதம் விதித்தல் வேண்டும் - 8:268”.
என்றெல்லாம் வர்ணத்திற்கு ஒரு தண்டனை விதித்திருக்கிறது மனு சாஸ்திரம். சனாதன தர்மத்தை பின்பற்றும் சாமிநாதன் இதனடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குவாரா?
அப்படியென்றால் தொடர்ந்து அவர் இப்பதவியில் நீடிக்கலாமா?
நீதித்துறையில் குறிப்பிட்ட ஒரு சமூகமும், குறிப்பிட்ட இந்துத்துவ சித்தாந்தத்தை பின்பற்றுவோரும் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலை தொடர்வது ஒன்றே, இத்தகைய அபத்தமான கருத்துக்களும், தீர்ப்புகளும் வர காரணமாக இருக்கிறது.
© எனவே நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது.
-விடுதலை ராஜேந்திரன்.
