வள்ளலார் மாநாடு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.2.2026) சென்னையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற “அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026”-யை தொடங்கி வைத்து, ஆற்றிய உரை.
‘தருமமிகு சென்னை’ என்று வள்ளலார் போற்றிய சென்னையில், அவர் காட்டிய அறநெறிகளை, வாழ்க்கை முறையாகவே பின்பற்றி வரும் ஆன்மீக அன்பர்களான உங்களை எல்லாம் இந்த “அனைத்துலக வள்ளலார் மாநாட்டில்” சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.வள்ளலார் பாடுவதற்காக எடுத்துக்கொண்ட திருவாரூரைச் சேர்ந்தவன் என்ற பெருமையோடு இந்த மாநாட்டில் நான் பங்கேற்க வந்திருக்கிறேன்.
இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும், அவருக்கு துணை நிற்கக்கூடிய அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நம்முடைய சேகர்பாபு அவர்களை பொறுத்தவரைக்கும், கழகப் பணியாக இருந்தாலும் சரி, அரசின் சார்பிலான ஆன்மீகப் பணிகளாக இருந்தாலும் சரி, அதைச் சிறப்பாக செய்து, தான் 'செயல்பாபு' தான் என்று தொடர்ந்து நிரூபிக்கக்கூடியவர். இந்த மாநாட்டையும், ஆன்மீக அன்பர்கள் அனைவரையும் அழைத்து, அமைதியோடும், அழகோடும் ஏற்பாடு செய்து, நம்முடைய அன்பை பெற்றிருக்கிறார்.
சேகர்பாபு அவர்கள் பொறுப்பேற்றதற்கு பிறகுதான், அறநிலையத் துறை இவ்வளவு சிறப்பாக, விரைவாக செயல்படமுடியுமா? என பலரும் வியப்புடன் பார்க்க தொடங்கினார்கள்! அறநிலையத்துறையில், நம்முடைய திராவிட மாடல் அரசு செய்திருக்கக்கூடிய எண்ணற்ற சாதனைகள் சிலவற்றை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்…

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 20 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை குடமுழுக்கு விழாக்கள் நடைபெறாத 4 ஆயிரத்து 192 கோயில்களில், திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில், அரசு நிதி 425 கோடி ரூபாய் – திருக்கோயில் நிதி – உபயதாரர் நிதி – பொதுநல நிதி என்று மொத்தம் 560 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 352 திருக்கோயில்களை திருப்பணிக்கு எடுத்துக் கொண்டு இதுவரை 87 திருக்கோயில்களில் குடமுழுக்கு செய்து முடித்திருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, 12 ஆயிரத்து 931 திருக்கோயில்களில், 8 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 29 ஆயிரத்து 479 திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில், 4 ஆயிரத்து 346 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 16 ஆயிரத்து 756 பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது.
மேலும், உபயதாரர் நிதி மூலமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 12 ஆயிரத்து 220 பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. கோயில் சொத்துகளை மீட்க வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்து, அதிலும் சாதனை படைத்திருக்கிறோம்.
8 ஆயிரத்து 423 கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஆயிரத்து 106 ஏக்கர் நிலங்களை மீட்டிருக்கிறோம்.
கிராமப்புற திருக்கோயில்கள் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களுக்கான திருப்பணி, அந்த நிதி உதவித்தொகையை 1 இலட்சம் ரூபாயில் இருந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, 10 ஆயிரம் திருக்கோயில்களுக்கு நிதியுதவி வழங்கியிருக்கிறோம்.
கோயில்களில், திருப்பணியோடு அறப்பணிகளையும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, 19 திருக்கோயில்களில் முதலுதவி மருத்துவமனைகளை அமைத்திருக்கிறோம்.
ஏழை–எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு 4 கிராம் தங்கத்தாலி – பட்டுப் புடவை – பட்டு வேஷ்டி உள்ளிட்ட 70 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் திருக்கோயில்கள் சார்பாக, 2 ஆயிரத்து 800 திருமணங்களை நடத்தி வைத்து முடித்திருக்கிறோம்.
165 மாற்றுத்திறனாளி இணையர்களுக்கும் திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது. 2 திருக்கோயில்களில் செயல்பட்டு வந்த நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை இப்போது 12 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தியிருக்கிறோம்.
764 திருக்கோயில்களில், ஒரு வேளை அன்னதான திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
திருக்கோயில்களின் தல வரலாறு – தல புராணம் – கட்டடக்கலை – கல்வெட்டுகள் குறித்த 516 தொன்மையான அரிய நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிட்டிருக்கிறோம்.
இப்போது நான் சொன்ன சாதனைகள் எல்லாம் குறைவு தான். பெரிய சாதனை புத்தகத்தின் சில பக்கங்கள் தான். ஏராளமான சாதனைகள் இருக்கிறது.

கடந்த ஆண்டு 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாட்டை நடத்தி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தோம். இன்றைக்கு அனைத்துலக வள்ளலார் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
வள்ளலாரை ஏன் நாம் உயர்த்திப் பிடிக்கிறோம் என்றால், “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று சொல்லி, உலகுக்கே ‘தனிப்பெரும் கருணை’ என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார் அவர்கள்! அவரது வழியில்தான், நமது திராவிட மாடல் அரசும், ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஏழை மக்களின் பசியை ‘பிணி’ என்று சொன்னார் வள்ளலார்! அந்தப் பிணியை ஒழிக்கும் மருந்துதான் நமது திராவிட மாடலின் திட்டங்கள்! அதனால்தான், பள்ளிகளில், காலை உணவுத் திட்டம் முதல் முதியோர்களுக்கான தாயுமானவர் திட்டம் வரை, அனைத்து வயதினரையும், கருணையோடு அரவணைக்கின்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
வள்ளலார் தமிழ்ச்சமூகத்தில் உதித்த புரட்சியாளர்; மாண்பாளர்! அவரைப் போற்ற வேண்டியது, தமிழ்நாட்டின் கடமை! என்னுடைய பேச்சுகளிலும், சமூக வலைத்தளப் பதிவுகளிலும் வள்ளலாரை நிறைய நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன். வள்ளலாரின் கோட்பாடுகளை மேற்கோள் காட்டுவது மட்டுமல்ல, அவற்றை செயல் வடிவத்தில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
அவற்றையெல்லாம் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில், சென்னையில் வள்ளலார் வாழ்ந்த பகுதிக்கு, ‘வள்ளலார் நகர்’ என்று பெயர் வைத்தார். அந்த வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தை 10 கோடி ரூபாய் செலவில் புனரமைத்திருக்கிறோம். மதிப்பிற்குரிய கிருஷ்ணராஜ் வானவராயர் சொன்னார், நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதும் வள்ளலார் பிறந்தநாளை, ‘தனிப்பெருங்கருணை நாளாக’ அறிவித்தோம்.
வள்ளலாரின் 200-ஆவது பிறந்தநாள் - தருமசாலை நிறுவப்பட்ட 156-ஆவது ஆண்டு தொடக்கம் - ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-ஆவது ஆண்டு ஆகியவற்றை இணைத்து, 2022 அக்டோபரில் இருந்து 2023 அக்டோபர் வரை தொடர்ச்சியாக ஓராண்டு காலம் முப்பெரும் விழாக்களை கொண்டாடினோம்.
அதுமட்டுமல்ல, ‘வள்ளலார் 200’ என்ற பெயரில் இலச்சினை, அஞ்சல் உறை, சிறப்பு மலர் வெளியிட்டு அன்னதானம், மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம்.
வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லத்தை புனரமைத்தோம். தைப்பூசத்தை முன்னிட்டு, வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில், மூன்று நாட்கள் அங்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்றைக்கு திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு “வள்ளலார் நெடுஞ்சாலை” என்று பெயர் சூட்டி திறந்து வைத்திருக்கிறோம்.
இந்தச் சாதனைகளின் தொடர்ச்சியாகதான், வள்ளலார் பற்றாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில், அவரின் உயரிய கருத்துகளை, வாழ்க்கை நெறிகளை, உலகெங்கும் போற்றிடும் நோக்கத்துடன் இன்று, அனைத்துலக வள்ளலார் மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டிற்கு வந்துவிட்டு புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் சென்றால், சேகர்பாபு அவர்களுக்கும் நிம்மதி இருக்காது – எனக்கும் திருப்தி இருக்காது.
அதனால், ஏழு அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.
முதல் அறிவிப்பு – இந்த அனைத்துலக வள்ளலார் மாநாடு நடைபெற்றதை குறிக்கின்ற விதமாக இந்த பள்ளி வளாகத்தில், நினைவுத் தூண் அமைக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு – வடலூரில், சன்மார்க்க பயிற்சிப் பள்ளி ஏற்படுத்தப்படும். அந்தப் பள்ளியில் திருவருட்பா இசைப்பயிற்சியும் அளிக்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு – வடலூரில், வள்ளலார் பெயரில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படும்.
நான்காவது அறிவிப்பு – 'ஸ்பிரிச்சுவல் அல்-கெமி' என்ற வள்ளலார் புத்தகம் அறநிலையத் துறை பதிப்பகத்தின் மூலமாக வெளியிடப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு – வள்ளலார் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் மூன்று நாட்கள் விழா நடத்தப்படும்.
ஆறாவது அறிவிப்பு – மேட்டுக்குப்பம், மருதூர், கருங்குழி ஆகிய இடங்களில், ‘வள்ளலார் அன்னதான கூடங்கள்’ திறக்கப்படும்.

ஏழாவது அறிவிப்பு – கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்து வரும் பூங்காவுக்கு ‘வள்ளலார் பூங்கா’ என பெயர் சூட்டப்படும்.
உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தானே!
அதேபோல். இங்கு மதிப்பிற்குரிய நம்முடைய கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்கள் சொன்ன கோரிக்கைகள் உண்டு. தலைநகர் சென்னையில், வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்பது.
அந்த ஆய்வு மையம் இந்து சமய அறநிலையத் துறையின் வளாகத்தில் அமைக்கப்படும். மற்ற கோரிக்கைகளும் நிச்சயம் பரிசீலிக்கப்படும்.
எனவே, இந்த மாநாட்டு மூலமாக, வள்ளலாரைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு சுருக்கமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றால், அன்பின் வழியாக சமத்துவத்தை, உயிர்கள் மீதான கருணையை, தமிழ்ச் சமூகத்தின் வழியாக இந்த உலகத்துக்கு எடுத்துரைத்த பேரன்பின் வடிவம்தான் வள்ளலார் அவர்கள்!
“சாதியிலே, மதங்களிலே, சமயநெறிகளிலே, சாத்திரச் சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே, ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் - அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே” என்று சொல்லி, அறிவுநெறியை பரப்பியவர் வள்ளலார் அவர்கள் !
இந்தச் சமூகத்தில், இறுகிப் போயிருந்த பழமைவாதங்களையும், மூடத்தனங்களையும் சாடியவர் அவர்! சாதி, சமய வேறுபாடுகள் இல்லாத சமூகத்தை கட்டமைக்க வேண்டும் என்ற அவருடைய பெருங்கனவுதான் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சுக் கொள்கை! அதனால்தான், திராவிட இயக்கம் உருவானதில் இருந்து, தொடர்ந்து வள்ளலாரை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்!
ஆறாம் திருமுறை பாடல்களைத் தொகுத்து, 'இராமலிங்கர் பாடல் திரட்டு' என்ற நூலை 1940-ல் வெளியிட்டவர், தந்தை பெரியார்! இன்னும் ஒருபடி மேலே சென்று, தமிழர்கள் முன்பு, பெரியார் ஒரு கேள்வியை முன்வைத்தார். தந்தை பெரியார் என்ன கேட்டார் தெரியுமா? “வட நாட்டு சாமியார்களை போற்றும் தமிழனே, வடலூர் வள்ளலார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்?” என்று கேட்டார்.
இதையெல்லாம் உணர்ந்துதான், “வள்ளலாரின் கொள்கைகளை சமுதாயக் களத்தில், தந்தை பெரியார் பரப்புரை செய்தார்” என்று தவத்திரு குன்றக்குடி அடிகளாரே சொல்லியிருக்கிறார். அந்த வழியில்தான் சமத்துவத்தையும், சமூகநீதியையும் நிலை நாட்டுகின்ற நம்முடைய அரசு - எங்களுடைய கோட்பாடு “எல்லார்க்கும் எல்லாம்” என்ற அவருடைய சிந்தனையின் செயல் வடிவம்தான்!
இங்கே கூடியிருக்கும் அன்பர்கள் எல்லோரிடத்திலும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, வள்ளலாரைப் போற்றுவதோடு, நம்முடைய பணி நின்றுவிடக் கூடாது; அவருடைய நோக்கங்களை மக்கள் முழுமையாக உணர்ந்து, கடைப்பிடிக்க பாடுபட வேண்டும்!
அதற்கு இந்த மாநாடு வழி வகுக்கவேண்டும். ஏனென்றால், நம்முடைய பண்பாட்டு அடையாளங்களுக்கு வேறு வர்ணம் பூச நினைக்கிறார்கள், வள்ளலாரின் நோக்கங்களை சிதைத்திட நாம் அனுமதிக்க கூடாது! பிரிவினைச் சக்திகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்காமல், அன்பும் - பண்பும் - அறனும் - கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்!
சமத்துவம் போற்றும் அன்பு வழியாம் வள்ளலார் நெறி எங்கெங்கும் பரவட்டும்! என்றென்றும் நிலைக்கட்டும்! அவர் ஏற்றி வைத்த ஜோதியைப் போல சுடர்விட்டும் - அணையாத அடுப்பைப் போல அனைவரின் தேவைகளை நிறைவேற்றி, இடர் போக்கும் இனிய அரசாகவும், நம்முடைய திராவிட மாடல் அரசு என்றென்றும் திகழும் என்று கூறி, விடை பெறுகிறேன்.