நடத்தை விதிகள்?

 தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல். வரும் 30-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வந்தன நடத்தை விதிகள். அரசு மற்றும் தனியார் சுவர்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிப்பு.30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வெவ்வேறு தேதிகளில் தேர்தல். பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை காட்டுவதாக காங்கிரஸ் விமர்சனம்.மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, 29 என இரண்டு கட்டங்களாக தேர்தல். அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.

வெறுப்பு எனும் நெருப்பைத் தூண்டிவிட்டு பாஜக குளிர் காய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. சிறுபான்மையினர் உரிமைகளைக் காப்பதில் திமுக எப்போதும் அரணாக நிற்கும் என்று உறுதி.
தவெக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டம். பாஜக-வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் எனவும் பேட்டி.
யாருடன் கூட்டணி என்பது குறித்த முடிவை இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்.பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி கும்பகோணத்தில் பேட்டி.
பாமக-வின் பெயர், கொடி, சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கு.சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு முக்கிய ஆலோசனை.
கேரளத்தில் 75 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டி.
ஒடிசா மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு. இரண்டு பேர் கைது, நிரப்பப்படாத காசோலைகள் பறிமுதல்.
மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு. தேர்தல் தேதி அறிவிப்புக்கு சற்று முன் அறிவித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
13 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த ஹரீஷ் ராணாவுக்கு பிரியாவிடை. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகள் அகற்றம்.
அமீரகத்தில் உள்ள அல்-தர்ஃபா விமான நிலையத்தின் மீது ஈரான் சரமாரியாக தாக்குதல். ரேடார் அமைப்பு முற்றிலுமாக தகர்ப்பு என தகவல்.
தேர்தல் நடத்தை விதிகள் 

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.


நடத்தை விதிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் எனவும் அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் எனவும், ஏப்ரல் 9ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, அதில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும், தேர்தல் நடைமுறைகள் மே 6ஆம் தேதியுடன் முடிவு பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாகவும், இது அனைத்து வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் மத்திய - மாநில அரசுகளுக்கும் பொருந்தும் எனவும் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி அன்று பொறுப்பேற்றது.

கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த ஆட்சி சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (மார்ச் 15) நிறைவுக்கு வந்தது.

மேலும் தேர்தல் தேதி அறிவிப்பால் தமிழக அரசின் அனைத்து நிர்வாக பொறுப்புகளும் தேர்தல் கமிஷனுக்கு சென்று விட்டன. தற்போதைய அரசு காபந்து அரசாக செயல்படும்.

அடுத்த அரசு பொறுப்பேற்கும் வரை இந்த காபந்து அரசு செயல்படும். இனி முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் அரசு வாகனங்களை பயன்படுத்த முடியாது .அவரவர் பயன்படுத்தி வரும் வாகனங்களை தலைமைச் செயலகத்தில் நிறுத்திச் செல்ல வேண்டும்.

அதேபோல இனி தலைமைச் செயலகத்தில் வந்து அவர்கள் யாரும் ஆலோசனை நடத்த முடியாது. முக்கிய திட்டங்களை அறிவிக்கவும் முடியாது.

ஏதேனும் மிக முக்கிய பிரச்சனை என்றால் மட்டுமே உயர் அதிகாரிகளை முதல் அமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து கலந்தாலோசிக்கலாம், அதுவும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை பெற்று தான் செயல்படவும் முடியும். நிதி ஒதுக்கீடுகளையும் அறிவிக்க முடியாது.

புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவோ அல்லது அரசு செலவில் விளம்பரங்கள் செய்யவோ அனுமதி இல்லை.

தேர்தல் தேதி அறிவிப்பால் தலைமைச் செயலகத்தின் பிரதான நோட்டீஸ் பலகை, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அறைகளில் உள்ள தலைவர்களின் படங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள், கட்சியின் சின்னங்கள், உருவப் படங்கள் போன்றவை சாக்கினால் மூடப்பட்டன. எம்எல்ஏக்கள் அலுவலகங்கள் வருவாய்த்துறையினரால் சீலிட்டு மூடப்பட்டன.

தேர்தல் முடியும் வரை அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது.

அரசியல் கட்சிகள் மதம், சாதி அல்லது மொழி ரீதியான உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் வாக்கு சேகரிக்கக் கூடாது. மற்ற கட்சிகளை விமர்சிக்கும்போது தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, கொள்கை ரீதியான விமர்சனங்களை மட்டுமே முன்வைக்க வேண்டும்.

குறிப்பாக, வழிபாட்டுத் தலங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது.

வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவது ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான குற்றமாக கருதப்படும். பொதுமக்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000-க்கு மேற்பட்ட ரொக்கத் தொகையை எடுத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


விதிமுறைகளை மீறி இத்தகைய தொகையை எடுத்துச் சென்றால், பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல அரசாணைகள் வெளியிடுவதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான சில முக்கிய அரசாணைகள் தேர்தல் தேதி அறிவித்த பிறகும் வெளியிடுவது முன்பு வழக்கமாக இருந்தது.


ஆனால் இந்த செயல்பாட்டிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் குற்றம் சாட்டப்பட்டதால், கடந்த சில தேர்தல்களாக அரசு அதிக உயரதிகாரிகளுக்கு இதற்கான தனி உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்து வருகிறது.


அதன்படி மாநில அரசு செயல்படும் வரை பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின் பட்டியலில் கோடு போட வேண்டும்.


தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிறப்பிக்கப்படும் அரசாணைகளின் விவரங்களை அந்த கோட்டிற்கு பிறகு சேர்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதேபோல அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பாக தலைமை தேர்தல் அதிகாரியை அணுகி ஆலோசிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் 

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் காரணமாக, பாகிஸ்தான் அரசு பொருளாதார ரீதியிலான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


இதனால் எம்.பிக்களின் சம்பள நிறுத்தம், அரசு ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளால் தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா ராணுவம் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கூட்டு தாக்குதலை தொடங்கியது.

2 வாரங்களைக் கடந்து 3வது வாரமாக தாக்குதல்கள் நீடித்து வருகிறது.


சவுதி அரேபியா, குவைத் , பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும், அந்நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களையும் குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்ற சூழ்நிலை நிலவுகிறது.


மேலும் உலகின் முக்கிய எண்ணெய் கப்பல் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருப்பதால் அந்த வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை எகிறி இருக்கிறது. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் பல்வேறு நாடுகளில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள இந்தப் போர் பதற்றம் காரணமாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் எரிபொருள் மற்றும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


குறிப்பாக பாகிஸ்தானில் நிலைமை படுமோசம் அடைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.


கடந்த 15 நாட்களில் அந்த நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.50 வரை உயர்ந்துள்ளது. இதனால் அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 352 க்கும், ஒரு லிட்டர் டீசல் 340 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.


ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் திண்டாடி வரும் பாகிஸ்தான் அரசுக்கு இந்த நிலைமை, தலைமையில் இடியை இறக்கி இருக்கிறது. ஒரு பக்கம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானின் தலிபான்களுடன் பாகிஸ்தான் ராணுவம் சண்டையிட்டு வருகிறது.


இதற்கிடையே ஈரான் போரும் பாகிஸ்தான் அரசின் நிலைமையை மோசமானதாக மாற்றி இருக்கிறது. இதனால் பொருளாதார தாக்கத்தை சமாளிக்கும் நோக்கில், அரசின் செலவுகளை குறைக்கும் புதிய சிக்கன நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது.


பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் நடத்திய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், எம்பிக்கள், அரசின் ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு உதவியாளர்கள் ஆகியோரின் சம்பளம் அடுத்த 2 மாதத்திற்கு நிறுத்தப்பட்டு, அவை மக்கள் நல திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கான ஒப்புதல் அரசால் அளிக்கப்பட்டு இருக்கிறது.


2 மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படுவதுடன், எம்பிக்களின் சம்பளத்தில் 25 சதவீதமும், அரசு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் அனைத்து ஊழியர்களின் சம்பளமும் 5% முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த சிக்கன நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் பணம் மக்களின் நலத்திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.


இது தவிர்த்து அரசு வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்படும் என்றும், அடுத்த 2 மாதங்களுக்கு சாலைகளில் இருந்து 60 சதவீத அரசு வாகனங்கள் விலக்கிக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தவிர்த்து புதிய வாகனங்கள் வாங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களுக்கு முழுமையான தடை அமலில் இருக்கும் எனவும், அரசின் இதர கொள்முதல்களுக்கும் தடை விதிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை